Monday, July 23, 2018

வேதத்தின் ஒருபிரிவான தேவாரம் பாடியது மூவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அதிலே 1ம்,2ம், 3ம் திருமுறைகளாக வகுக்கப்பட்ட தேவாரப் பண்களை சம்பந்தரும் 4ம்,5ம்,6,ம் திருமுறைகளில் வகுக்கப்பட்ட பண்களை நாவுக்கரசரும், பாடினர்.

இதிலே 7ம் திருமுறையாக வகுக்கப்பட்டதே சுந்தரர் என்று போற்றப்படும் நம்பிஆரூரர் பாடிய தேவாரப்பதிகமாகும். திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் சடையனாருக்கும் இசைஞானியாருக்கும் மகனாகப்பிறந்து நம்பியாரூர், பின்னர் நரசிங்க முனையரையரின் வளர்ப்பு மகனாக ஆனார்.

குழந்தையாய் இருந்த போதில் சுந்தரமான அழகில் மயங்கிய அரசர் அவரை இராஜா போன்று ஆளாக்கினார் புத்தூர் எனும் ஊரில் வாழும் சங்கவிசிவாச்சாரியார் மகளை சுந்தரருக்கு மணமுடிக்க முடிவெடுத்தார். திருமணநாளன்று கிழவேதியர் உருவத்தில் வந்த சிவபிரான் ஆருரன் எனக்கு அடிமை, இவனுக்கு திருமணம் செய்யும் உரிமை இல்லை என்று தடுக்கிறார். அதற்கு சுந்தரர் அவரைப்பார்த்து பித்தாநான் உனக்கு அடிமை என்பதற்கு என்ன ஆதாரம் உண்டு என்கிறார். கிழவர் ஒலையைக் காட்டி அதைப் படிக்கும் படி கூற சுந்தரரும் அதைப் படித்துப் பார்க்கிறார்.சுந்தரன் எனக்கு அடிமை என்று எழுதியதைப் படித்து விட்டு சுந்தரரும் ஒலையைக் கிழித்து நெருப்பில் போட்டுவிடுகிறார்..ஆனால் கிழவராய் வந்த சிவபெருமானோ இதை நீ தீயில இட்டால் அடிமை இல்லை என்றாகிவிடுமா என்கிறார். சுந்தரரும் என்ன உளறுகிறாய் பைத்தியமா உனக்கு என்று கேட்க வா திருவெண்ணெய் நல்லூருக்கு அங்கு நீ எழுதிய மூலஓலையை காட்டுகிறேன். என்று கூட்டிச்சென்று கோவிலுக்குள் மறைந்து விட்டார்.

சுந்தரரும் திகைத்து நின்றார் உனைத்தடுத்தாட் கொள்ளவே நாம் அங்கு வந்து திருமணத்தை தடுத்தோம்,வன்மையாக பேசியதால் வன்தொண்டன் எனப்பெயர்பெறுவாய்,சுந்தரத்தமிழால் எமைப்பபாடுக என இறைவன் ஆக்ஞை பிறப்பித்து மறைந்தார், என்னே அவன் கருணை.பித்தா பிறைசூடி என்று தொடங்கும் பாடலைப் பாடி சிவனை துதி செய்தார். பின்னர் பலதலங்களுக்கும் சென்று இறை அற்புதங்களை பாடியபடியே திருவாரூருக்கு வந்தார் அங்கு வந்த சுந்தரிடம் சிவனும் இனிநீ அடிமையில்லை உமக்கு எம் தோழமை தந்தேன்,என்று கூறி மணக்கோலத்தோடு இருக்கலாம்.என்றார்.பின்பு அடிமையாக இருந்தவரை தோழராக மாற்றினார்.அதன் பின் தம்பிரான் தோழர் என்று
புகழப்பட்டார்.

இப்படிப்பட்ட சுந்தரர் முந்திய பிறவியில் ஆலால சுந்தரராக கைலாயத்தில் சிவத்தொண்டு புரிந்து வந்தார். அவ் வேளையில் உமாதேவியாரின் பணிப்பெண்களாக இருந்த அனிந்திதை, கமலினி இருவரின்மேலும் மையல் கொண்டு தன் தொண்டுகளை மறந்து அலைந்து திரிந்தார்.அவர்கள் இருவரும் சுந்தரரையே விரும்பினர். இதைக் கண்ட சிவனும் சுந்தரரை திருநாவலூரிலும், கமலினியை திருவாருரில் பரவையாராகவும், திருவொற்றியூரில் அனிந்திதையை சங்கிலியாராகவும் பூலோகத்தில் பிறக்கச் செய்தார்.. பின்பு இறைவனின் திருவிளையாடலால் சுந்தரரின் முதல் திருமணத்தை அடிமை என்று தடுத்தாட் கொண்டார். பின்னர் தோழராகி சிவனார்
தாமே இட்ட கட்டளைக்கேற்ப பூலோகத்தில் மூவரையும் பிறக்கச் செய்து இன்பம் அனுபவித்து வர வழிசெய்தார். முதலில் பரவையாரை மணமுடித்து வைத்தார்..

பின் சுந்தரர் தம்மை மதிக்கவில்லை என்று முறையிட்ட அடியார்கள் மனம் மகிழ்ச் செய்ய சிவபிரானே அடியெடுத்துத்தர  தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன். என்று தொடங்கி நாயன்மார்களின் வரலாறாக விளங்கும் திருத்தொண்டத் தொகையைப் பாடியருளினார்.சேக்கிழார் எனும் நாயனார் பின்னர் பெரிய புராணம் அதாவது திருத்தொண்டர் புராணம் பாட அடிப்படையாக அமைந்தது இத்திருத்தொண்டத்தொகையே ஆகும். இதன்பின் இறைவன் துணையோடு திருவொற்றியூர் சென்று அன்கு வாழ்ந்திருந்த சங்கிலியாரை மனமுடிக்கிறார்..அதற்குப்பிறகு பரவையாரின் நினைப்பு வரவே, சங்கிலியாரைப் பிரியேன் என்று வாக்குக் கொடுத்து விட்டு பிரிந்து திருவாரூர் வரமுற்படும் வேளை தனது இருகண்களின் பார்வையையும் இழந்து விடுகிறார்..

அதன் பின் உரிமையோடு இறைவனிடம் மன்றாடி காஞ்சியில் ஒருகண்பார்வையும் திருவாரூரில் மறுகண்பார்வையும் பெற்றுய்தார். பரவையார் தன்னை விட்டுச் சென்ற கணவர் சுந்தரரோடு ஊடல் கொண்டு பேசாது இருக்க இறைவனே சுந்தரருக்காய் திருவாரூரின் வீதியில் இருதடவை திருவடி தோய நடந்து இருவரையும் ஊடலைத் தீர்த்து சேர்த்து வைத்தார். இறையருளால் திருமுதுகுன்றத்தில் பொன்பெற்று அப்பொன்னை மணிமுத்தாற்றில் போட்டு திருவாரூரில் கமலாலயம் என்னும் குளத்தில் எடுத்து பரவையாரின் கஸ்டத்தைக் குறைத்தார். அவினாசி எனும் ஊரில் முதலை உண்ட பாலகனை மீண்டும் உயிர் பெறச் செய்து இறையருளை உலகிற்கு உணர்த்தினார்.. நிலவுலக வாழ்க்கை சலித்து விட சுந்தரருக்கு சிவத்தொண்டு புரியவேண்டும் எனும் எண்ணம் அவாமேலோங்கியது..

அதை அறிந்த இறைவன் வெள்ளையானையை அனுப்பி கைலாயத்துக்கு அழைத்து வரச் செய்தார்.சுந்தரரின் தோழராக சேரமான பெருமாளும் அவருடன் சேர்ந்து கைலாயம் சென்றார். இப்படி சுந்தரர் இறையடி அடைந்த தினம் ஆடிச்சுவாதி நட்சத்திரமாகும். அது 21 7 18 இந்த தினத்தில் குருபூஜை வழிபாடுகள் ஆற்றி வணங்குவர். நாமும் இந்நாளில் அவரை வணங்கி அவரதுபதிகங்களை பாடி பேரருள் பெறுவோம்.

4தமிழ்மீடியாவுக்காக அருந்தா

0 comments :

Post a Comment

 
Toggle Footer