Tuesday, July 17, 2018

ஒரு பந்தும் உலக அரசியலும்..

உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் கடந்த ஞாயிறு பிரான்ஸ் நாடு 4 – 2 என்ற கோல்கணக்கில் குறேசியாவை வென்று உலக சாம்பியனாகியிருப்பது தெரிந்ததே.

வெற்றி பெற்ற பிரான்சிய அணி தமது வெற்றிக்கிண்ணத்துடன் நேற்று பிரான்ஸ் திரும்பியது, திறந்த பேருந்தில் மக்கள் வெள்ளத்தில் அவர்களுடைய வெற்றி வாகனம் எழுச்சிப் பயணம் மேற்கொண்டது.

கடந்த 20 வருடங்களுக்கு பின்னதாக 300 மில்லியன் உலக மக்கள் நேரடியாக பார்த்துக் கொண்டிருக்க பிரான்ஸ் வெற்றி பெற்று தனது நாட்டை உலக சாம்பியன் என்ற இடத்திற்கு நகர்த்தியிருக்கிறது.

இந்தச் செய்தி சாதாரண செய்தியல்ல நாம்தான் உலக சாம்பியன் என்ற பெருமையையும், நெஞ்சை நிமிர்த்திய நடையையும் பிரான்சிய வீரர்கள் எமது வளரும் பிள்ளைகளின் நெஞ்சில் விதைத்துவிட்டார்கள்.

ஒவ்வொரு பிரான்சிய பிள்ளையும் தாம் சாதனையாளர் என்ற பெருமையுடன் வலம்வர இந்த நிகழ்வு காரணமாகிவிட்டதென பலர் தொலைக்காட்சிகளில் பேட்டியளித்தார்கள். யாராவது ஒரு தமிழன் வென்றுவிட்டால் அவனை மறைவாக இகழும் ஒரு சில தமிழர்கள் அறிந்து வெட்கித் தலைகுனிய வேண்டிய இடம் இதுவாகும்.

மறுபுறம் எத்தனை தடவை உலகக் கிண்ணத்தை வாங்கிக் கொடுத்தாலும் அதை மக்கள் மறந்துவிடுவார்கள் என்பதையும், அவர்களுடைய மூளை நேற்று என்ன நடந்தது என்பதை வைத்தே ஒருவனை மதிப்பிடும் என்பதற்கு பிரேசிலிய அணி நாடு திரும்பியபோது விழுந்த கல்லெறிகளே உதாரணமாகும். நல்ல வேளையாக மூடிய பேருந்தில் போனதால் மண்டை உடையாது தப்பிப் பிழைத்தார்கள்.

பிரான்சிய பிள்ளைகள் வெற்றியாளர் என்று நினைத்தால் பிரேசிலிய பிள்ளைகள் தோல்வியாளர்கள் என்று நினைத்தால் அந்த சமுதாயம் என்ன ஆவது..?

இறுதிப் போட்டியில் மோதிய 32 அணிகளில் 31 அணிகள் தோற்றுவிட்டன.. அப்படியானால் அந்த நாட்டு பிள்ளைகள் எல்லாம் தோல்வியாளர் என்று மனமுடைவதா..?

விளையாட்டில் வென்றாலும் தோற்றாலும் அதில் பங்கேற்கும் போதே ஒருவன் வெற்றியாளனாகிறான்.

விளையாட்டில் பங்கேற்றதும் நம் கையில் ஒரு நாணயம் கிடைக்கிறது. அதில் வெற்றி தலை என்றால் அதன் மறுபக்கமான பூ தோல்வியாகிறது.

நாணயமில்லாதவனுக்கு பூவும் இல்லை தலையும் இல்லை.. ஆகவே விளையாட்டில் ஈடுபடுங்கள் வெற்றியும் தோல்வியும் ஒன்றுதான் என்று சொல்ல முயல வேண்டும், இனியாவது.

அதேவேளை எத்;தனையோ தடவைகள் வெற்றியை பெற்றுத்தந்த இந்த வீரர்கள் செய்த நன்றியை மறக்கக் கூடாதென்ற அறிவுரை திருவள்ளுவர் பிறக்காத பிரேசில் நாட்டில் கிடைக்காமல் போய்விட்டதா என்றும் எண்ணத் தோன்றுகிறது.

மறுபுறம் உலகக்கிண்ண ஜாம்பவான்களான ஆர்ஜண்டீனாவை ஓட ஓட விரட்டியடித்தது குறேசியா அணி. அதன் வீரர் லூக்கா மொட்றிக் அடித்த அடி அப்படி.. அவருக்கு சிறந்த விளையாட்டு வீரனுக்குரிய வெற்றிக்கிண்ணம் வழங்கப்பட்டுள்ளது.

ஆர்ஜண்டீனாவுக்கு அவர் சாத்திய சாத்துக்கு பழி வாங்கத் துடிக்கும் ஆர்ஜண்டீனா என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியான நிலையில் இறுதியாட்டத்தில் ஆர்ஜண்டீனா நாட்டின் நடுவரை போட்டது பீபா அமைப்பு செய்த தவறே.

முன்னாள் திரைப்பட நடிகரான இவர் ஆர்ஜண்டீனாவில் தனது பழி வாங்கும் செயல் மூலமாக ஏன் குறும்புகழடையக் கூடாது..? என்ற கேள்வி இருக்கிறது.

காரணம் என்ன..?

இவர் தனது கடமையை சரிவர செய்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குறேசியா நாட்டுக்கு ஒரு பனால்டி அடியை இவரே வழங்கினார். முறைப்படி அது பனால்டி இல்லை என்கிறார்கள். ஆனால் வழங்கினார்.

அது இல்லையோ ஆமோ அதுவல்ல பிரச்சனை..

இவருடைய மனம் தடுமாறுகிறது என்பதற்கு ஆதராம் அதே காணொளியில் இருக்கிறது. காணொளியை பார்த்துவிட்டு போனவர் இரண்டு அடி வைத்ததும் மீண்டும் வந்து ஒரு தடவை அதையே பார்த்தார். ஆகவே இவருடைய மனச்சாட்சியை கொன்றுதான் குறேசியாவை வீழ்த்த முயன்றார் என்பதை காட்ட இவருடைய உடல் மொழியைவிட வேறு சாட்சியம் தேவையில்லை.

இது இப்போது சர்ச்சையாக இருக்கிறது.. சரியோ தவறோ தோற்றுப்போன ஒரு நாட்டின் மத்தியஸ்தர் தனது நாட்டை தோற்கடித்த அணிக்கு மத்தியஸ்தம் வகித்தால் அது பக்கச்சார்பு இல்லாவிட்டாலும் பக்கச்சார்பாகவே தெரியும் இப்போது அதுதான் நடந்திருக்கிறது.

கடைசியில் குரங்கிடம் அப்பம் நிறுக்கப் போன கதையாகியிருக்கிறது உலகக் கிண்ண உதைபந்தாட்டம்.

மேலும் ஒரு வேடிக்கை ஆர்ஜண்டீனாவில் நடந்துள்ளது. அந்த நாடு தமது பயிற்சியாளரை பதவியில் இருந்து விரட்டியடித்துள்ளது. 20 மில்லியன் டாலர் நஷ்டம் வந்தாலும் கவலை இல்லையென விரட்டியிருக்கிறது. அவலை நினைத்து உரலை இடித்திருக்கிறது அந்த நாடு.

அப்படிப்பட்ட நாட்டின் மத்தியஸ்தர் அவர்களை மண் கவ்வ வைத்த ஒரு நாட்டுக்கு வெற்றியை கொடுத்து சொந்த நாடு திரும்பினால் பிரேசில் போல ஆர்ஜண்டீனாவிலும் அவருக்கு கல்லெறி காத்திருந்திருக்கும்.

இதைவிட நம்மூர் அரசியல் தலைவர்கள் தமிழர்களுக்கும் சிங்கள அரசுக்கும் பேச்சுக்கள் நடக்கும் போது இப்போது பந்து தமிழர்களின் காலில் இனி சிங்கள அரசின் காலில் என்று உதாரணம் கூறுவார்கள்.

விவஸ்த்தை கெட்ட இவர்களுக்கு 50 வருடங்களாக இதைவிட்டால் வேறு உதாரணங்கள் கிடையாதென சலிப்படைந்திருக்க ரஸ்ய அதிபர் புற்றினும் தானும் நம்மூர் அரசியல் கணிப்பாளர்கள் போல உருப்படாத ஒரு கேஸ்தான் என்பதை காட்டியிருக்கிறார்.

நேற்று பின்லாந்து தலைநகர் கெல்சிங்கியில் இடம் பெற்ற பேச்சுக்களின் பின் இடம் பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் அமெரிக்க அதிபருக்கு உலகக் கிண்ண உதைபந்தாட்டத்திற்காக செய்த பந்தொன்றை பரிசாகக் கொடுத்தார்.

உக்ரேன் நாட்டு பிரச்சனை, சிரிய பிரச்சனை, ஈரான் அணுகுண்டு சிக்கல் யாவற்றிலும் எழுதப்பட்ட ஒப்பந்தங்களில் உங்களுக்கு 50 வீதம் பொறுப்பும் ரஸ்யாவுக்கு 50 வீதம் பொறுப்புமே இருக்கிறது. நாம் நமது பங்கை முடித்துவிட்டோம் இனி பந்து உங்கள் கையில் என்று கூறியிருக்கிறார்.

மறுபுறம் போத்துக்கல் வீரன் கிறிஸ்டியானோ றொனால்டோவை உலகம் மறந்துவிட்டது இருந்தாலும் இன்று ஒரு சுற்று தொலைக்காட்சிகளில் வந்து போனார் அடுத்து வரும் 4 வருடங்களுக்கு இத்தாலி இயுவான்ரஸ் அணியில் 7 வது இலக்கத்தில் விளையாட இருக்கிறார்.

ஸ்பானியாவில் வரி கட்ட வேண்டும் இல்லையேல் 2 வருட சிறை காத்திருக்கிறது இவருக்கு. இந்த நிலையில் இவர் இத்தாலி போயிருப்பது வியப்பில்லை.. இவருடைய 33 வயது நிறைவு கட்டத்தை அடைந்துள்ள போட்டிகளை சந்திக்க இருக்கிறது.

இப்படி உலகக் கிண்ண உதைபந்தாட்டம் தொடர்ந்தும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது..

அலைகள்

0 comments :

Post a Comment

 
Toggle Footer