Wednesday, July 18, 2018

“எமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை நான் விரும்பவில்லை. காரணம் அந்த நெருக்கத்தைக் காட்டி இராணுவம் இன்னும் 1,000 வருடங்களுக்கு எமது பிரதேசங்களில் இருக்க எத்தனிக்கும்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அறிக்கையின் பகுதி வருமாறு,

கேள்வி: வடக்கில் சாதாரண மக்களையும் இராணுவத்தினரையும் பிரிக்க நீங்கள் எத்தனிப்பதாக இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக கூறியுள்ளாரே? அது பற்றி?

பதில்: மகேஸ், எனது நண்பர். அவர் கூறுவது அந்த வரையில் உண்மை. எமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை நான் விரும்பவில்லை. காரணம் அந்த நெருக்கத்தைக் காட்டி இராணுவம் இன்னும் 1,000 வருடங்களுக்கு எமது பிரதேசங்களில் இருந்து வர எத்தனிக்கும். அதனால் பாதிப்படையப்போவது எமது இனமே. இராணுவத்தின் வேலை வடமாகாணத்தில் முடிவடைந்தபடியால் அவர்கள் திரும்ப கொழும்பு செல்வதே முறையானது. அப்படி இராணுவம் தரித்து நிற்க வேண்டுமென்றால் நான் ஏற்கெனவே கூறியுள்ளேன் ‘இராணுவத்தை ஒன்பதாகப் பிரியுங்கள். ஒன்பதில் ஒரு பங்கை வேண்டுமெனில் ஒவ்வொரு மாகாணத்திலும் நிறுத்துங்கள்’ என்று. சலுகைகளையும் சல்லியையும் தந்து இராணுவம் இங்கு நிலைபெற நினைப்பது அவர்கள் எம்மைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகவே. எங்கள் மீது கரிசனை இருப்பதால் அல்ல. இவற்றை எம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரும்பான்மையினரின் அரசியலுக்கு எமது சாதாரண மக்களின் வறுமையைப் பாவித்து இராணுவத்தினர் உதவ வருவது சரிபோல் தெரியும். வருங்காலத்தில் பாதிக்கப்படப் போவது எமது இன மக்களே. படைகளில் சிலருக்கு தெற்கில் ஒரு குடும்பம் வடக்கில் ஒரு குடும்பம் இருப்பது நாடறிந்த உண்மை.

0 comments :

Post a Comment

 
Toggle Footer