Wednesday, April 4, 2018

தென்னாப்பிரிக்கத் தலைநகர் கேப்டவுனை அச்சுறுத்தி வந்த தண்ணீர்ப் பஞ்சத்துக்குத் தற்காலிக தீர்வு கிடைத்துள்ளது. அதாவது அங்குள்ள தண்ணீர்த் தொட்டிகள் சில நிரப்பப் பட்டதால் தண்ணீர் முற்றாகத் தீர்ந்து விடும் என்று அஞ்சிய நாளான Day Zero 2019 ஆமாண்டுக்குத் தள்ளிப் போயுள்ளது. முன்னதாக இந்த Day Zero இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்தில் நிர்ணயிக்கப் பட்டிருந்தது.

தென்னாப்பிரிக்காவில் 2016 இல், எல் நினோ எனப்படும் காலநிலை செயற்பாட்டால் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக இரு வருடங்களாக அங்கு விவசாயமும் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன. இதனால் பெரிதும் பாதிக்கப் பட்ட உலகின் முக்கிய வர்த்தக நகரங்களில் ஒன்றான கேப்டவுனில் மழையும் இல்லாமற் போகக் கடும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் தற்போது கேப்டவுனில் வசிக்கும் குடிமகன் ஒருவர் தினசரி 50 லீட்டருக்குக் குறைவான தண்ணீரைப் பாவிக்குமாறும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் Day Zero இன் பாதிப்பினை முடிந்தளவுக்குத் தள்ளிப் போட அனைத்து வழிகளிலும் அரசு முயன்று வருவதுடன் தென்னாப்பிரிக்க மக்கள் பருவ மழை நன்கு பெய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அண்மையில் இலண்டன் பல்கலைக் கழக ராயல் ஹாலோவேயின் ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்த தகவலில் சமீப காலமாக ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஏற்பட்ட நில நடுக்கங்களின் விளைவாக கென்யாவின் தென்மேற்கே நைரோபி நரோக் நெடுஞ்சாலை முழுதும் பலத்த சேதமடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வடக்கே ஏடென் வளைகுடா தொடங்கி தெற்கே சிம்பாப்வே வரை சுமார் 3000 Km தூரத்துக்கு பிளவு ஏற்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவலும் இதில் கூறப்பட்டுள்ளது.

இப்பிளவு காரணமாக ஆப்பிரிக்கக் கண்டம் சமமற்ற இரு தட்டுக்களாகப் பிரிந்துள்ளதாகவும் தொடர்ந்து ஏற்படும் வெள்ளம், பூகம்பங்கள் போன்ற இயற்கை அனர்த்தங்களால் இந்தப் பிளவு அதிகரித்து ஆப்பிரிக்கா இரண்டு நிலப் பரப்புக்களாகி விடவும் சாத்தியம் உள்ளது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. தற்போது இந்த பிளவு குறித்துப் புவியியலாளர்கள் முக்கிய ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer