Wednesday, April 4, 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது, அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பாராளுமன்றத்தில் தற்போது (இன்று புதன்கிழமை) இடம்பெற்று வரும் விவாதத்தில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பாரபட்சமின்றி ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும். மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனினும், நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்த காலத்தைப் பார்க்கும் போது, அது அரசியல் நிகழ்ச்சி நிரல் என புலனாகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் ஏன் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்தார்களென கலந்துரையாட வேண்டும். பிரதமருக்கு மத்திய வங்கி விவகாரத்துடன் தொடர்பு இருப்பதற்கான சாட்சிகள் முன்வைக்கப்பட வில்லை. இந்த சம்பவம் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இடம்பெற்றது.

இந்து சமுத்திரத்தின் பொருளாதார மையமாக எம்மால் மாறமுடியும், எனினும் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் தோல்வி கண்டுள்ளோம்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer