Wednesday, April 18, 2018

அண்மையில் சீனாவின் ஏற்றுமதிப் பொருட்களுக்கான தீர்வை வரியை மிகவும் உயர்த்தி உலகளவில் வர்த்தகப் போர் ஒன்று உருவாகும் சாத்தியத்துக்குக் காரணமாக இருந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

பதிலுக்கு சில நாட்களில் சீனாவும் அமெரிக்காவின் தனது நாட்டுக்கான ஏற்றுமதிப் பொருட்களுக்கு வரியை அதிகரித்திருந்தது.

இந்நிலையில் டிரம்பின் இந்த முடிவின் காரணமாக தற்போது தமது பொருளாதாரத்தை நிலையாக வைத்துக் கொள்வதற்காக சீனாவும் ஜப்பானும் கைகோர்த்துள்ளன. உலகின் 2 ஆவது மற்றும் 3 ஆவது பொருளாதார சக்திகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே அரசமுறைப் பயணமாக அமெரிக்க செல்லவுள்ள நிலையில் அதற்கு முன்பதாக ஜப்பானின் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ டோக்கியோவை வந்தடைந்துள்ளார்.

மேலும் 8 வருடங்களுக்குப் பின்பு முதன் முறையாக வாங் யீ ஜப்பானுடன் உயர் மட்ட பொருளாதார பேச்சுவார்த்தையில் பங்கு பற்றியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இப்பேச்சுவார்த்தையின் போது சீனா தனது பெல்ட் ரோட் கொள்கையையும் (BRI) ஜப்பான் தனது இந்தோ பசுபிக் புளூ பிரிண்ட் கொள்கை குறித்தும் பரஸ்பரம் விவாதிக்கவுள்ளதாகவும் தெரிய வருகின்றது. ஜப்பான் தரப்பில் இது குறித்துக் கூறும் போது சீன பெல்ட் ரோட் கொள்கை குறித்து எமக்கு எதிர்ப்பு ஒன்றும் கிடையாது எனவும் அதே நேரம் சீனாவும் இந்தோ பசுபிக் கட்டமைப்பை மதித்து நடக்க வேண்டும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஜப்பானின் பார்வையில் இந்த இந்தோ பசுபிக் கட்டமைப்பில் இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தான் மிக உறுதியான பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜப்பான் பிரதமர் அபே விரைவில் அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேசவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer