Sunday, April 1, 2018

1959 இல் திபேத்தை சீனா ஆக்கிரமித்த போது திபேத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா உட்பட ஆயிரக் கணக்கான திபேத்தியர்கள் அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் அடைக்கலம் புகுந்தனர். அன்று முதற்கொண்டு ஹிமாசலப் பிரதேசத்தின் தர்மசாலா பகுதியில் தலாய் லாமா வசித்து வருகின்றார்.

இந்நிலையில் தலாய் லாமா இந்தியாவுக்கு வந்து 60 ஆண்டுகள் பூர்த்தியாவதைக் குறிக்கும் வகையில் சனிக்கிழமை தலைநகர் டில்லியில் தேங்க்யூ இந்தியா என்ற நிகழ்வு ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு தலாய் லாமா நெகிழ்ச்சியுரை ஆற்றினார். இதன் போது அவர் தெரிவித்த முக்கிய கருத்துக்கள் வருமாறு:

'நான் திபேத்தில் இருந்து கடந்த 1959 இல் இந்தியா வந்தடைந்தேன். அன்று முதல் இரு நாடுகளும் குரு சீடர் இடையே உள்ள உறவைப் போன்ற உறவைப் பேணி வருவதாக உணர்கின்றேன். நாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிய போதும் இந்தியாவின் புகழிடம் காரணமாக எமது கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் கட்டிக் காக்க முடிந்தது. மேலும் நாம் அதீத தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வருகின்றோம். '

இந்த நிகழ்வில் இந்தியாவைச் சேர்ந்த சில முக்கிய அமைச்சர்களும் நாடு கடந்த திபேத் அரசின் பிரதமரான லோப்சாங் சங்காய் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். அமைச்சர் மகேஷ் சர்மா பேசுகையில் திபேத்துக்கு திரும்பிச் செல்ல தலாய் லாமா மேற்கொள்ளும் போராட்டத்தை இந்தியா ஆதரிப்பதாகவும் இவர்கள் அனைவரும் இந்தியாவின் விருந்தினர்கள் அகதிகள் அல்ல என்றும் தெரிவித்தார். லோப்சாங் சங்காய் பேசுகையில் இந்தியாவால் தான் தாம் தற்போது நாம் பிழைத்துள்ளோம் என்றும் இந்தியா எமக்குக் குருநாதர் போன்றது என்றும் நாம் சீடர்கள் போன்றவர்கள் என்றும் குருவை வணங்குவது சீடரின் கடமை என்றும் தொனிப்பட பேசினார். தலாய் லாமாவின் இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசு அதிகாரப் பூர்வமாகப் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer