Wednesday, April 4, 2018

சமீப காலமாக உள்நாட்டுப் போரினால் மிக மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ள யேமெனில் சுமார் 13.1 மில்லியன் யேமெனி மக்களுக்கு உதவுவதற்காக கிட்டத்தட்ட $2.96 பில்லியன் டாலர்கள் தேவைப் படுவதாக இன்று செவ்வாய்க்கிழமை ஐ.நா சபை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் சர்வதேச நிதியுதவி மாநாடு ஒன்றில் ஐ.நா பாதுகாப்புச் செயலாளர் அந்தோனியோ கட்டெரஸ் தனது கோரிக்கையை முன் வைத்தார்.

யேமெனில் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வரும் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய இரு நாடுகளும் இந்த மாநாட்டில் பங்கு பற்றி இருந்தன. மேலும் இவ்விரு நாடுகளும் இணைந்து யேமெனுக்காக $930 மில்லியன் டாலர்கள் ஒதுக்கியுள்ளன. 2014 ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கிய யேமென் உள்நாட்டுப் போர் காரணமாக அந்நாட்டு சனத்தொகையின் 3/4 பங்கு அதாவது 22 மில்லியன் மக்கள் உடனடி மனிதாபிமான உதவி தேவைப் படும் நிலையில் இருப்பதாகவும் இதனால் அங்கு மனித அவலம் நிலவுவதாகவும் ஐ.நா இன் தகவலில் தெரிய வருகின்றது.

ஈரானின் ஆதரவுடன் செயற்பட்ட ஹௌத்தி கிளர்ச்சியாளர்கள் யேமென் தலைநகர் சனாவைக் கைப்பற்றியது முதற்கொண்டு அங்கு குழப்பமும் போரும் ஆரம்பமானது. 2015 மார்ச் 26 ஆம் திகதி முதல் சுன்னி இராச்சியமான சவுதியின் இராணுவம் யேமென் போரில் தீவிரமாக ஹௌத்திக்களுக்கு எதிராகக் களம் இறங்கியதை அடுத்து உயிர்ச் சேதமும் பொருட் சேதமும் அதிகமாயின.

ஷியா ஹௌத்திக்களின் தகவல் படி யேமென் உள்நாட்டுப் போரில் இதுவரை 10 000 இற்கும் அதிகமான மக்கள் கொல்லப் பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer