Wednesday, March 14, 2018

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில், பௌத்த சிங்கள பேரினவாதம் முன்வைப்பதே சட்டமாகவும், ஆட்சியாகவும் மாறிவிட்டது. அந்தக் கட்டங்களில் நின்றுதான் கடந்த காலக் கலவரங்கள், இன ஒடுக்குமுறைகள், ஆக்கிரமிப்புக்கள் உள்ளிட்ட அனைத்தையும் பார்க்க வேண்டியிருக்கின்றது. அண்மைய கண்டிக் கலவரமும் அதன் வழி வருவதுதான். அது, ஆரம்பமோ முடிவோ அல்ல.

நாட்டின் தேசியக் கொடியில் ‘வாளேந்திய சிங்கத்தை’ பௌத்த சிங்கள பேரினவாத்தின் அடையாளமாவும், ‘ஸ்ரீலங்கா’ எனும் நாமத்தை ஆக்கிரமிப்பின் அடுத்த கட்டமாகவும் தென்னிலங்கை முன்னிறுத்தி வந்திருக்கின்றது. நாட்டில் பௌத்த சிங்களவர்களைவிட எண்ணிக்கையில் குறைந்த தமிழர்கள், முஸ்லிம்கள் மாத்திரமல்ல, சிங்களக் கிறிஸ்தவர்களும் கூட காலத்துக்குக் காலம் அடக்கி ஒடுக்கப்படுகின்றார்கள்.

தன்னுடைய இருப்பு சார்ந்து பௌத்த சிங்களப் பேரினவாதம் கொண்டிருக்கின்ற அச்சம் ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டியது. அது, அந்தக் காலத்தில் நிகழ்ந்த படையெடுப்புக்கள், ஆட்சிமாற்றங்கள் சார்ந்து எழுந்தவை. ஆனால், அதே அச்ச உணர்வினை, அடுத்த சமூகங்கள் தொடர்பில் தக்க வைத்துக் கொள்ள எடுக்கப்படுகின்ற முயற்சிகள்தான், நாட்டின் பெரும் அழிவுக்குக் காரணமாகியிருக்கின்றன. பௌத்த சிங்கள பேரினவாதம் என்பது அடிப்படையில் தமது மக்களிடம் பயத்தை ஊட்டியூட்டி மக்களுக்கிடையிலான நல்லுறவையும், நம்பிக்கையும் சிதைக்கின்றன. அதன்மூலம், தன்னுடைய ஆளுகையை மேலும் வளர்த்துக் கொள்ள முடியும் என்றும் செயற்படுகின்றன.

இலங்கை வரலாற்றில் நிகழ்ந்திருக்கின்ற பெரும் அழிவுகளுக்குப் பின்னால் பௌத்த சிங்கள பேரினவாதம் அல்லது அதன் சிந்தாந்தம் இருந்திருக்கின்றது. தமிழ், முஸ்லிம் மக்களின் நியாயமான அரசியல் அதிகாரக் கோரிக்கைகளை தீவிரவாதமாகவும், பிரிவினைவாதமாகவும் சித்தரித்ததும் அதுவே. தமிழ் மக்களின் அஹிம்சைப் போராட்டங்களை ஆயுத முனையில் அடக்கி ஒடுக்கி ஆயுதப் போராட்டமாக மாற்றியதும் பௌத்த சிங்கள பேரினவாதமும், அதனை தலையேற்றிருக்கும் ஆட்சியாளர்களுமாகும்.

பௌத்த சிங்கள பேரினவாதம், சாதாரண சிங்கள மக்களை தனக்குக் கீழ் ஒருங்கிணைப்பதற்காக இன குரோதங்களை காலம் காலமாக வளர்த்து வந்திருக்கின்றன. நியாயமாக கோரிக்கைகளோடு போராடிய தமிழ் மக்களைக் காட்டி, பிரிவினைவாதிகள் என்கிற நிலையில், அரங்காடிய பௌத்த சிங்களப் பேரினவாதம், ஆயுத மோதல்களின் முடிவிற்குப் பின்னர், புதிய எதிரியொன்றை தேட வேண்டி வந்தது. அதுவே, முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்களாக மாறியது. அதனை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய காலத்தில் ஊக்குவித்தார். அளுத்கம கலவரங்கள் வரையில் பௌத்த இனவாதிகளை கோலொச்ச விட்டார். இன்றைக்கு ஆட்சி மாற்றத்தின் பின்னரும் அவ்வாறான செயல்களை அரங்கேற்றுவதில், பௌத்த சிங்கள பேரினவாதிகள் முன்நிற்கிறார்கள். அவர்களின் கால்களுக்குள் கிடக்கின்ற மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்ரமசிங்கவும் அவர்களின் திசைகளுக்கு பணிகிறார்கள்.

ஆயுதப் போராட்டங்களின் முடிவுக்குப் பின்னர் தமிழ்- முஸ்லிம் மக்களிடையே மோதல்களைத் தோற்றுவித்து, எண்ணிக்கையில் சிறுபான்மையினராக உள்ளவர்களை இன்னமும் சிறுபான்மையினராக மாற்ற முடியும் என்கிற நோக்கில் தென்னிலங்கையினால் பல்வேறு சதித் திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால், அந்தத் திட்டங்களுக்குள் தமிழ்- முஸ்லிம் மக்கள் விழாத நிலையிலேயே, முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் திட்டத்தை தென்னிலங்கையின் பேரினவாதிகள் கையிலேடுத்தார்கள்.

இலங்கையின் உள்நாட்டு- வெளிநாட்டு வர்த்தகம் என்பது குறிப்பிட்டளவு முஸ்லிம் மக்களின் கைகளில் இருக்கின்றது. அதனை, சிங்கள மக்கள் மத்தியில் ஒரு ஆக்கிரமிப்பின் வடிவமாகக் காட்டி, முஸ்லிம் மக்கள் மீதான விரோதத்தை விதைத்ததில் பௌத்த பீடங்களுக்கும், அதன் ஏவலாளிகளுக்கும் முக்கிய பொறுப்புண்டு. இது இன்று நேற்று ஆரம்பித்த நிலை அல்ல. ஆனாலும், கடந்த 5 ஆண்டுகளில் இந்த விடயத்தை பெரியளவில் தூக்கிச் சுமந்து சென்று பேரினவாதம் தன்னுடைய வேலையைக் காட்டியிருக்கின்றது.

தனிப்பட்ட நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையை இனவாதமாக மாற்றி, முஸ்லிம் மக்களின் வீடுகள், வர்த்தக நிலையங்களை தேடித் தேடி அழித்தமை என்பது வக்கிரத்தின் உச்சம். அதுவே, வாளேந்திய சிங்கம் என்பது நாட்டின் காவலுக்கானது அல்ல. நாட்டிலுள்ள மக்களையே வேட்டையாடுவதற்கானது என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. அந்த வாளில் இப்போது வடிவது தமிழ்- முஸ்லிம் மக்களின் இரத்தம். அது, சிங்கள மக்களை நோக்கியும் திரும்புவதற்கு நெடுங்காலம் எடுக்காது. ஏனெனில், பௌத்த பேரினவாதம் என்பது உண்மையில், பேரச்சத்தின் இருப்பிடம். அது, தன்னை ஆக்கிரமிப்பின் அடையாளமாக தக்க வைப்பதற்காக எதையும் செய்யும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer