Saturday, March 17, 2018

சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் அசாத் தலைமையிலான அரசுக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடும் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றது. ஒரு பக்கம் ISIS இயக்கத் தீவிரவாதிகளும் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போரில் அதிபர் அசாத்துக்கு ரஷ்யாவும் ஈரானும் கிளர்ச்சிப் படைக்கு அமெரிக்காவும் துருக்கியும் ஆதரவளித்து வருகின்றன. கடந்த சில வாரங்களாக உக்கிரமடைந்துள்ள போரில் 1260 பேர் வரை பலியாகியும் 22 000 பேர் இடம்பெயர்ந்தும் உள்ளனர். தற்போது பதற்றத்தைச் சற்றுக் குறைக்கும் நோக்கிலும் போரில் பாதிக்கப் பட்டவர்களுக்கு மீட்புப் பணிகளை முன்னெடுக்கும் நோக்கிலும் கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் ரஷ்யா, ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் வெள்ளிக்கிழமை கலந்து பேசியுள்ளன.

இப்பேச்சுவார்த்தையில் ரஷ்ய வெளியுறவு அமைசர் செர்ஜி லவ்ரோவ், ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஜாரீஃப் மற்றும் துருக்கி வெளியுறவு அமைச்சர் மெவ்லத் ஆகியோர் கலந்து கொண்டனர். உடல் நலக் குறைவினால் ஐ.நா இற்கான சிரியத் தூதர் ஸ்டபான் பங்கேற்கவில்லை. இப்பேச்சுவார்த்தையில் முக்கியமாக கிழக்கு கவுட்டா இல் சிக்கியுள்ள மக்களைப் பத்திரமாக வெளியேற்றுவது தொடர்பில் ஆலோசிக்கப் பட்டது.

இப்பேச்சுவார்த்தையின் பின் ரஷ்யா கருத்துத் தெரிவித்த போது சிரியாவில் உள்நாட்டுப் போர் நீடிப்பதை சில நாடுகள் விரும்புவதால் தான் பிரச்சினை ஊதிப் பெரிதாகி வருவதாகவும் இதற்கு மாற்றாகத் தாமும் ஈரான், துருக்கி ஆகிய நாடுகளும் அமைதியை நிலை நாட்டும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer