Sunday, March 18, 2018

ஜூலை மாதம் சிம்பாப்வேயில் சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் பல தசாப்தங்களுக்குப் பின் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்குத் தனது உதவியை வழங்கவுள்ளதாக ஐ.நா சபை அண்மையில் தெரிவித்துள்ளது. சிம்பாப்வே சுதந்திரமடைந்ததில் இருந்து அந்நாட்டின் அதிபராக சுமார் 37 வருடங்கள் ஆட்சி செய்த ராபர்ட் முகாபே இனை அவரது 93 ஆவது வயதில் கடந்த வருட இறுதியில் இராணுவம் பதவி நீக்கம் செய்திருந்தது.

இதை அடுத்து அதிபராகத் தற்காலிகமாக எம்மெர்சன் நங்காக்வா தேர்வானார். இந்நிலையில் ஜூலையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் இவருக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று கருதப் படுகின்றது. ஐ,நா சபையின் அபிவிருத்தித் திட்ட நிர்வாகத் தலைவரான அச்சிம் ஸ்டெய்னர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்த கருத்தில் சிம்பாப்வே இனது வருங்காலத்துக்கு இந்த அதிபர் தேர்தல் மிக முக்கியமானது என்றுள்ளார். மேலும் UNDP என்ற ஐ.நா அபிவிருத்திச் சபை சிம்பாப்வேயில் வன்முறையற்ற சுதந்திரமான தேர்தலை முன்னெடுக்கவும் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பவும் உதவி செய்யத் தயாராக இருப்பதாகவும் ஸ்டெய்னர் தெரிவித்தார்.

கடந்த மாதம் தான் முன்னால் அதிபர் முகாபே இன் முக்கிய எதிரணித் தலைவரான மோர்கன் ஸ்வன்கிராய் தனது 65 ஆவது வயதில் காலமாகி இருந்தார். இவரது மரணம் தற்போது ஆளும் ZANU-PF என்ற நங்காக்வா இனது கட்சியைத் தோற்கடிப்பதில் எதிர்க்கட்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாகக் கருதப் படுகின்றது. சிம்பாப்வே இல் நடைபெறவுள்ள தேர்தலில் சுமார் 5.4 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருப்பதாகத் தெரிய வருகின்றது.

முன்னதாக முகாபே இன் ஆட்சிக் காலத்தில் சிம்பாப்வே இனது பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருந்ததாகக் குற்றம் சாட்டப் பட்டிருந்தார். இதேவேளை சிம்பாப்வே தங்கம், பிளாட்டினம் மற்றும் ஏனைய கணிய வளங்கள் மிகவும் செறிந்துள்ள நாடாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer