Wednesday, March 7, 2018

பெரியார் சிலை பற்றி எச்.ராஜாவின்  பேச்சு குறித்து தமிழகத்தில் முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்து கண்டனக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், "ஹெச். ராஜா எப்போதுமே வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிவருகிறார். அவரைக் கைது செய்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டில் கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்ற வேலையில், பி.ஜே.பி. - சங் பரிவார்க் கும்பல் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதைத்தான் இது தெரிவிக்கிறது. இதுபோன்ற பதிவுகளுக்கு எதிர்விளைவு வந்தால், அதன் நிலை என்னாகும் என்று நினைத்துப் பார்க்கவேண்டாமா? சட்டம்- ஒழுங்கைக் காப்பாற்றுவதில் தமிழ்நாடு அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், தொடர்ந்து வன்முறை வெறித்தனப் பேச்சுகளில் ஈடுபட்டு வரும் எச்.ராஜா மீது, இந்தச் சந்தர்ப்பத்திலாவது நடவடிக்கை எடுக்கவேண்டும்." என்று கூறியிருக்கிறார்.

ம.தி.மு.கவின்  பொதுச் செயலாளர் வைகோ, "ஈ. கொசுவைப் போன்றவர்கள் எல்லாம் பெரியாரை விமர்சிக்கின்றனர். தைரியமிருந்தால் நாள் குறித்து பெரியாரின் சிலையை உடைக்க வாருங்கள். பெரியாரின் சிலையை உடைக்க முயல்பவர்கள் கை, கால்கள் துண்டு, துண்டாகும்" எனத் தெரிவித்துள்ளார்.

"ஹெச். ராஜா மட்டுமல்ல, அவருடைய பாட்டன் வந்தாலும் பெரியாரின் சிலையை ஒன்றும் செய்ய முடியாது" என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறியிருக்கிறார்.

"ஹெச். ராஜாவின் நோக்கம் பரபரப்பு ஏற்படுத்துவதுதான். தன்னைப் பற்றி எல்லோரையும் பேச வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். பெரியாரின் சிலையைத் தொட்டுப்பார்த்தால் என்ன நடக்குமென்று தெரியும்" என நாம்தமிழர் கட்சியின் சீமான் கூறியுள்ளார்.

தனது டிவிட்டர் பக்கத்தில் டிவீட் செய்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு ஹெச்.ராஜா தனது புத்தியை இழந்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடகங்களிலும் பல்வேறு விமர்சனகள் எழுந்து வருகின்றன. மே பதினேழு அமைப்பின் திருமுருகன் காந்தி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிடுகையில், எச்.ராஜா பேசியதைப் போன்று பார்ப்பனரல்லாதோர் எவரேனும் பேசியிருந்தால் இந்நேரம் குறைந்தபட்சம் வழக்கேனும் பதிவு செய்திருப்பார்கள். ஆனால் எச்.ராஜா, சுப்பிரமணியசாமி, இல.கணேசன், எஸ்.வீ.சேகர், விஜயேந்திரன், சங்கராச்சாரி என்று ஒரு பட்டியலே வன்முறையான கருத்துக்களை பேசுவதும், வன்முறையை செய்வதும் வழக்கமாக்கி இருந்தாலும், சட்டமோ, காவல்துறையோ இவர்கள் மீது பாய்வதில்லை. ஆனால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்கள் பேசியிருந்தால் இந்நேரம் வழக்குகள் பாய்ந்திருக்கும். இதைத்தான் தந்தைப்பெரியார் பார்ப்பன இந்திய தேசமென்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், பா.ஜ.க. கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வழமைபோன்று, பெரியார் குறித்த ஹெச். ராஜாவின் கருத்து, அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் பா.ஜ.கவின் கருத்து அல்ல என்றும்  தெரிவித்திருக்கிறார்.

இது குறித்துக் நடிகரும், மநீம கட்சியின் தலைவருமான கமல்ஹாசனும் கண்டனம் தெரிவித்திருக்கின்றார். ஆயினும் நடிகர் ரஜினிகாந் இதுவரையில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer