Tuesday, March 6, 2018

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தட்டப்பாறை சின்னாலப்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பன் மகன் பிரபு (வயது 33). ஆட்டோ டிரைவரான இவர், உடல்நிலை பாதிப்பு காரணமாக விவசாயம் செய்து வந்தார்.

இவரது மனைவி வள்ளி (29). இவர்களுக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. துளசி (9) என்ற ஒரு மகள், திலீப் (7) என்ற ஒரு மகன் உள்ளனர். தட்டப்பாறையில் உள்ள அரசுப் பள்ளியில் மகள் 4-ம் வகுப்பு, மகன் 2-ம் வகுப்பு படிக்கின்றனர்.

இந்த நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு பிரபுவுக்கு தலையில் ஏற்பட்ட கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

தினமும் தம்பதி சண்டை போடுவதால், 2 குழந்தைகளும் இரவில் அருகே உள்ள தந்தை வழி பாட்டி வீட்டிற்கு சென்று தூங்கிவிடுவர். மறுநாள் காலையில் தான் தங்களது வீட்டிற்கு வருவர்.

நேற்றிரவும் குழந்தைகள் பாட்டி வீட்டிற்கு சென்று விட்டனர். வழக்கம் போல் மனைவி வள்ளியுடன் பிரபு சண்டை போட்டார். நள்ளிரவில் இரக்கமின்றி மனைவியை துடிதுடிக்க கழுத்தை அறுத்து கொலை செய்தார். மேலும், தலையில் கல்லையும் போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இன்று காலை வீட்டிற்கு வந்த குழந்தைகள், தாய் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து கத்தி கூச்சலிட்டு கதறி அழுதனர். அக்கம், பக்கத்தினர் திரண்டு வந்தனர்.

தகவலறிந்ததும், குடியாத்தம் டி.எஸ்.பி. பிரகாஷ் பாபு மற்றும் தாலுகா இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இருதயராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பிரபுவை பிடித்து கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer