Sunday, March 18, 2018

பா.ஜக. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்க துணிச்சலான முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி, ஆந்திர மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கி, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்திட மறுத்துவிட்டது மத்திய பா.ஜ.க. அரசு என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, ஆந்திர மாநில உரிமையை நிலைநாட்டுவதற்காக மத்திய அமைச்சரவையில் இருந்து தனது அமைச்சர்களையும் ராஜினாமா செய்யவைத்து, தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தே விலகிவிட்டார் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு.

மாநில அரசுகளின் உரிமைகளையும், அரசியல் சட்டத்தின்படி பொதுப்பட்டியலில் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்களையும் கூட ஆக்கிரமித்துக் கொள்ளும் மத்திய பா.ஜ.க. அரசின், ‘பெரியண்ணன்’ போக்கைக் கண்டித்து ஒரு மாநில முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு எடுத்திருக்கின்ற முடிவினை மாநில சுயாட்சிக்காகத் தொடர்ந்துப் போராடி வரும் தி.மு.க. வரவேற்கக் கடமைப்பட்டுள்ளது.

‘நீட்’ தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இருமசோதாக்களுக்கும் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறாமல், சட்டமன்ற மாண்பையும் 7½ கோடி தமிழ் மக்களின் உணர்வுகளையும் மத்திய பா.ஜ.க. அரசு அவமதித்துள்ளது.

தமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்சினையான காவிரி விவகாரத்தில், 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று 16-2-2018 அன்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தாலும், இந்தியாவின் மாட்சிமை மிக்க சுப்ரீம் கோர்ட்டையே மத்திய அரசு மதிக்கத் தவறி, இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை, கர்நாடக மாநிலத் தேர்தலை மனதில் வைத்து, வேண்டுமென்றே தாமதித்து விடாப்பிடியாக மறுத்துவருகிறது.

அதுமட்டுமின்றி, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்தே, “காலக்கெடுவிற்குள் அமைக்க முடியாது”, “சீராய்வு மனுத்தாக்கல் செய்யலாம்”. “காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் இல்லை” என்று சொல்லி, ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்’ மத்திய நீர்வளத்துறை மந்திரி மற்றும் மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் ஆகியோரை விட்டுபேச வைப்பதோடு மட்டுமின்றி, காவிரிப் பிரச்சினையில் அண்டை மாநிலமான கர்நாடக மாநில அரசை சீராய்வு மனுத்தாக்கல் செய்யத் தூண்டிவிடும் செயலையும் மத்தியில் உள்ள அரசு செய்கிறது.

தமிழ்நாட்டிற்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ள மத்திய பா.ஜ.க. அரசின் பிரதமர் நரேந்திரமோடியோ, அனைத்துக் கட்சி தலைவர்களையும் சந்திக்கவில்லை. ஏன், காவிரி பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சரைக்கூட சந்திக்கவில்லை. ஜனநாயக நெறிமுறைகள் குறித்து அவர்களுக்குக் கவலை இல்லை.

கர்நாடகத் தேர்தல் லாபத்திற்காக, தமிழ்நாட்டு காவிரி உரிமையை காலில் போட்டு மிதித்துக் கொண்டுள்ள மத்திய பா.ஜ.க. அரசுக்கு அழுத்தம் கொடுக்க கடைசி வாய்ப்பாக, இப்போது தெலுங்கு தேசம் கட்சி, மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானம் அமைந்துள்ளது.

மக்களவையில் தி.மு.க. இடம்பெற்றிருந்தால், “தீர்மானத்துக்கு ஆதரவளிப்போம்” என்று அடுத்த நொடியே அறிவித்திருப்போம். ஆனால், மக்களவையில் 3-வது பெரிய கட்சியாக இருப்பதாக கூறிவரும் அ.தி.மு.க., காவிரி மற்றும் ‘நீட்’ பிரச்சினைகளில் தமிழ்நாட்டு உரிமையை நிலைநாட்டுவதற்கு இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, “மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிப்போம்” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அறிவித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அழுத்தத்தைத் தரவேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் 6 வார காலத்திற்குள் அமையவேண்டும் என்று உண்மையிலேயே உளப்பூர்வமான எண்ணமும், உறுதியும் முதல் -அமைச்சருக்கு இருக்குமானால், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க துணிச்சலாக முடிவெடுத்து உடனடியாக அறிவிக்கவேண்டும். நல்ல சமயம் இது. நழுவவிடக்கூடாது.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer