Saturday, March 17, 2018

சிரியாவில் தொடர்ந்து 6 வருடமாக இடம்பெற்று வரும் உள்நாட்டுப் போரினையும் அண்மையில் கிழக்கு கௌட்டா பகுதியில் இடம்பெற்று வரும் மோசமான இனப் படுகொலையையும் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா சபை தவறி விட்டதாக சிரியாவின் பிரதான எதிரணிக் குழு இன்று சனிக்கிழமை குற்றம் சாட்டியுள்ளது.

சவுதி தலைநகர் ரியாத் இல் செய்தியாளர்களிடம் பேசிய SNC என்ற பிரதான எதிரணிக் கட்சியின் தலைவர் நாஸ்ர் அல் ஹரிரி கருத்துத் தெரிவிக்கையில் நாம் ஐ.நா, பாதுகாப்புச் சபை மற்றும் சர்வதேச சமூகம் ஆகியவற்றைப் பெரிதும் நம்பியிருந்ததாகவும் ஆனால் இங்கு இடம்பெற்று வரும் மிக மோசமான வன்முறைகள் தொடர்பில் இவை தொடர்ந்து மௌனம் சாதித்து வருவதால் நாம் ஏமாற்றம் அடைந்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் டமஸ்கஸ்ஸுக்கு அருகே உள்ள கிழக்கு கௌட்டாவில் ரஷ்ய ஆதரவுடன் முற்றுகைப் போரில் ஈடுபட்டு வரும் சிரிய அரசு கடும் உயிரிழப்புக்கள் மற்றும் சேதத்துக்கு மத்தியில் 70% வீதமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. சிரியாவில் பிரிட்டனைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமைகள் அமைப்பின் தகவல் படி இந்த முற்றுகைப் போரில் மாத்திரம் நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் உட்பட 1400 பொது மக்கள் கொல்லப் பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

மேலும் கடந்த 48 மணித்தியாலத்துக்குள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் 40 000 பொது மக்கள் சிக்கியுள்ளனர். 2011 இல் தொடங்கிய சிரிய உள்நாட்டுப் போரில் இதுவரை 350 000 இற்கும் அதிகமான மக்கள் கொல்லப் பட்டுள்ளதுடன் இன்றைய உலகில் மிகப் பெரிய மனித அவலம் இடம்பெற்றும் இடமாக சிரியா திகழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer