பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்கொள்வது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதன்பிரகாரம், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் சகல வெளிநாட்டுப் பயணங்களும் இரத்துச்செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 02ஆம் திகதியிலிருந்து 06ஆம் திகதி வரை சகல வெளிநாட்டு பயணங்களையும் இரத்துச் செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது.
தற்பொழுது வெளிநாடு சென்றுள்ள உறுப்பினர்கள் அனைவரையும் தமது பயணங்களை சுருக்கிக் கொண்டு ஏப்ரல் முதலாம் திகதி நாடு திரும்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஆஷூ மாரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “தற்பொழுது கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை மாத்திரம் குறிவைக்கவில்லை. அரசாங்கத்தையே குறிவைத்துள்ளது. இந்தப் பிரேரணையை நிச்சயமாகத் தோற்கடிப்போம். நம்பிக்கையில்லாப் பிரேரணையை காலதாமதப்படுத்தி தமிழ்,சிங்கள வருடப்பிறப்புக்குப் பின்னர் எடுப்பதற்கு கூட்டு எதிரணியினர் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முயற்சித்தனர். எனினும், அரசாங்கம் இதற்கு முன்னுரிமை அளித்துள்ளது.
அரசாங்கத்தில் பதவிகளை வகிக்கும் எந்தவொரு உறுப்பினருக்கும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க தார்மீகப் பொறுப்பு கிடையாது. அப்படி ஆதரவளிக்க விரும்புபவர்கள் ஏப்ரல் 04ஆம் திகதிக்கு முன்னர் தமது பொறுப்புக்களிலிருந்து விலகவேண்டும். நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னர் நாம் புதிய பயணத்தை உத்வேகத்துடன் ஆரம்பிப்போம். அரசாங்கத்தை காலைப்பிடித்து இழுப்பவர்களுக்கு அரசில் இடமில்லை.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
ஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டு பயணங்கள் இரத்து; நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள நடவடிக்கை!
Wednesday, March 28, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment