“வடக்கு மாகாணத்தில், 63,331 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன. இவர்களுடைய வாழ்வாதாரம் வலுவிழந்து காணப்படுவதோடு, பாலியல் துன்புறுத்தலுக்கு முகங்கொடுத்து வாழ்வியலை தொடரும் அவல நிலை காணப்படுகின்றது.” என்று வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் நிலைமை தொடர்பாக வினாவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அனந்தி சசிதரன் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கு மாகாணத்தின் சமூக சேவைகள் திணைக்களத்தின் புள்ளிவிபரத்தின் பிரகாரம், யாழ்ப்பாண மாவட்டத்தில் 36,318 குடும்பங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 8,435 குடும்பங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 5,961 குடும்பங்களும், வவுனியா மாவட்டத்தில் 6,714 குடும்பங்களும் மன்னார் மாவட்டத்தில் 5,903 குடும்பங்களும் பெண்களை தலைமையாக கொண்டுள்ளன.
இந்த பெண் தலைமைத்துவக் குடும்பங்களில், போரில் கணவனை இழந்தோர், காணாமல் போனோர், போரின் பின்னர் ஏமாற்றப்பட்ட பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் போன்றோர் உள்ளனர்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக தெரிவு செய்து அரச உதவிகளாயினும், தனிநபர் உதவிகளாயினும் சரி, வழங்கப்படுகின்றன. எனினும், உண்மையில் மன்னார், வவுனியா ஒரு பகுதி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து வன்னி பகுதியில் வசித்து பின்பு மீள குடியமர்ந்துள்ளனர். அவர்களும் யுத்த பாதிப்புக்குள்ளான நிரலிலேயே உள்வாங்கப்படுகின்றனர். அதனால் இந்த விடயத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தை தாண்டி பிற மாவட்டங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெண்தலைமைக் குடும்பங்கள், வாழ்வாதாரத்துக்காக சுயதொழில்களை மேற்கொள்கின்றனர். பெரும்பாலும், கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பை மேற்கொள்கின்றனர். நாம் வடக்கு மாகாண ரீதியில் இவர்களை ஒரு கூட்டுறவாக ஒன்றிணைத்து சுயதொழில்களை மேற்கொண்டு வாழ்வாதாரத்தை முன்னேற்ற முடியும். ஆனால் தற்போது இவர்களின் மனநிலையை பார்க்கையில் அநேகமானவர்கள் குழு முயற்சிக்கு தயாராக இல்லை. இந்த 4 வருடத்தில் நாம் கணிசமான அளவில் பல வாழ்வாதார உதவிகளை வழங்கியிருந்தும், அது வெற்றியளிக்கவில்லை. காரணம் வடக்கு மாகாணத்தில் சரியான கண்காணிப்பு இல்லை.
ஒரு பயனாளிக்கு தையல் இயந்திரம் வழங்கப்படும் போது, அந்த பயனாளி வறுமை காரணமாக அந்த இயந்திரத்தை விற்பனை செய்துவிடுகின்ற நிலமை காணப்படுகின்றது. அதனால் நான் கூட்டுறவு அமைச்சர் என்ற வகையிலும், தொழில்துறை அமைச்சர் என்ற வகையிலும் குழு முயற்சிகள் மூலம் வேலைத்திட்டங்களை தொடங்குவதுக்கான முயற்சிகளை மேற்கொள்கின்றேன்.
Home
»
Sri Lanka
»
பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு முகங்கொடுக்கும் அவலம் நீடிக்கிறது: அனந்தி சசிதரன்
Thursday, March 1, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment