Tuesday, March 6, 2018

திரிபுராவில் லெனின் சிலையை பாஜகவினர் உடைத்து தள்ளியதை அடுத்து பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அதை குறிப்பிட்டு தமிழகத்தில் பெரியார் சிலையையும் அதேபோல் தகர்ப்போம் என்று முகநூலில் பதிவிட்டதை தலைவர்கள் கண்டித்துள்ளனர்.

திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து அங்கு பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் தலைநகர் அகர்தலாவில் தங்கள் வன்முறை வெறியாட்டத்தை பாஜகவினர் தொடங்கினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களை அடித்து நொறுக்கி சூறையாடினர், தலைவர்கள் படங்கள் கொளுத்தப்பட்டன. தொண்டர்கள் தாக்கப்பட்டனர். முக்கிய சாலையில் இருந்த லெனின் சிலை புல்டோசரால் தகர்க்கப்பட்டது. இதை அங்குள்ள போலீஸார் தடுக்கவில்லை. மாநிலம் முழுதும் வன்முறையை தூண்டிவிட்டுள்ளனர்.

இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்திலும் முகநூல் பக்கத்திலும் பதிவிட்டுள்ள பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா, ”லெனின் சிலை இடிக்கப்பட்டதை குறிப்பிட்டு லெனினுக்கும் இந்தியாவிற்கும் என்ன சம்பந்தம், இன்று திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல் நாளை தமிழகத்திலும் பெரியார் சிலை அகற்றப்படும்” என்று பதிவிட்டிருந்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகத்தின் அனைத்து கட்சித்தலைவர்களும் ஹெச்.ராஜாவின் கருத்தை கண்டித்துள்ளனர். எதிர்ப்பு வலுத்து வருவதை அடுத்து சர்ச்சைக்குரிய முகநூல் பதிவை ஹெச்.ராஜா நீக்கிவிட்டார்.

மு.க.ஸ்டாலின்:

தந்தை பெரியாரின் சிலையை தொட்டுப் பார்க்கும் அளவுக்கு எவருக்கும் தகுதி கிடையாது. பிஜேபியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா தொடர்ந்து வன்முறையை தூண்டக்கூடிய வகையில், அடிக்கடி இதுபோன்ற கருத்துகளை பேசி வருகிறார். நியாயமாக, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து.

வைகோ:

பெரியாரை நெருங்க விடமாட்டோம். நாள் குறித்து வா.

கள்ளத்தனமாக வராதே. இருட்டில் இரண்டு, மூன்று பேரை வைத்து கூலிக்கு மாரடிக்காதே.

மாறாக, நரேந்திர மோடியின் ராணுவம் பாதுகாப்புக்கு வரட்டும்.காவல் துறை உம்மை பாதுகாக்கத் துடிக்கட்டும். உன் சகல படை. பரிவாரங்களோடு வா. நாள் குறி.

எங்கள் பெரியார் சிலையை உடைக்க வா. நான் வருகிறேன். எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் வருகிறேன். முடிந்தால் எங்கள் அய்யா பீடத்தைத் தொட்டுப் பார். கை,கால்கள் துண்டாகும்.

திருமாவளவன்:

பெரியார் சிலையை தொட ஹெச்.ராஜா மட்டுமல்ல அவருடைய முப்பாட்டன் வந்தாலும் முடியாது.

வீரமணி:

நேற்றுதான் தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளை அழைத்து நாட்டில் சட்டம்- ஒழுங்கு சரியாகப் பராமரிக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அந்த அறிவுரையின் ஈரம் காய்வதற்குள்ளாகவே பி.ஜே.பி.யின் தேசிய செயலாளர் ஹச்.ராஜா, பெரியார் என்று ஒட்டுமொத்த மக்களால் மதிக்கப்படும் பெரியாரின் சிலை உடைக்கப்படும் என்று முகநூலில் பதிவு செய்துள்ளார்.

இந்தத் தைரியம் இவர்களுக்கு எப்படி வந்தது? மத்தியில் பாஜக ஆட்சி இருக்கிறது என்பதாலா?

அல்லது மாநிலத்தில் இருக்கக் கூடிய ஆளும் கட்சி பி.ஜே.பி.யின் கோலுக்கு ஆடுகிற, தங்களுக்குச் சாதகமான அல்லது தங்களால் மிரட்டப்படும் ஆட்சியாக இருக்கிறது என்ற நினைப்பிலா?

நாட்டில் கலவரத்தை உண்டாக்கவேண்டும் என்ற வேலையில், பி.ஜே.பி. சங் பரிவார் கும்பல் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதைத்தான் இது தெரிவிக்கிறது. இது அரசியல் அநாகரிகம் ஆகும்.

சட்டம்- ஒழுங்கைக் காப்பாற்றுவதில் தமிழ்நாடு அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், தொடர்ந்து வன்முறை வெறித்தனப் பேச்சுகளில் ஈடுபட்டு வரும் இந்த நபர் மீது, இந்தச் சந்தர்ப்பத்திலாவது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கே.பாலகிருஷ்ணன் ( மார்க்சிஸ்ட்):

இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது, நாளை தமிழகத்தில் பெரியார் சிலைக்கும் அதுதான் என்று பகிரங்கமாக வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியிருக்கும் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா உடனடியாக கைது செய்யப்பட வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம். கடந்த காலத்திலும் இப்படிப்பட்ட வெறிப்பேச்சுக்கள் தடுக்கப்படாததால் ஹெச். ராஜாவின் அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

சீமான்:

ஹெச்.ராஜாவின் நோக்கமே பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள் அல்லவா, பரபரப்புக்கு ஆளாகும் ஆளாக இருக்க வேண்டுமென்பதே. அவர் நோக்கமே விளம்பரம் தேடுவது தான். பெரியார் சிலையை தொட்ட அன்று தெரியும் என்ன நடக்கும் என்று.

இவ்வாறு எதிர்க்கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer