Sunday, March 11, 2018

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு தமிழகத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த போது ஸ்ரீபெரும்புதூர் அருகே மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார்.

சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் ராஜீவ் கொலையில் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மனித வெடி குண்டாக செயல்பட்ட தாணு இலங்கையைச் சேர்ந்தவர். அவருக்கு விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த சிவராசன், சுபா ஆகியோர் உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது. பெங்களூரில் பதுங்கி இருந்த அவர்களை போலீஸ் சுற்றி வளைத்த போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

ராஜீவ் கொலை தொடர்பாக விடுதலைப்புலி முருகன் அவரது மனைவி நளினி மற்றும் சாந்தன், பேரறிவாளன், ரவிச்சந்திரன் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோர்ட்டு அவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தது. இவர்களில் பேரறிவாளன் தவிர மற்ற அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

20 ஆண்டுகள் சிறையில் இருந்ததால் அவர்களது தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஆயுள் தண்டனை காலத்தை அனுபவித்து விட்டதால் தமிழக அரசு இவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய முடிவு செய்தது. மத்திய அரசு அதற்கு அனுமதி மறுத்துவிட்டது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

சில வருடங்களுக்கு முன் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா ரகசியமாக வேலூர் வந்து சிறையில் இருக்கும் நளினியை சந்தித்து விட்டு சென்றார். அப்போது அவர் நளினியுடன் பரிவுடன் பேசிச் சென்றதாக தகவல் வெளியானது.

ஆனால் ராஜீவ் கொலை பற்றி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோ ராகுல் காந்தியோ கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் ராஜீவ் கொலை கைதிகளை மன்னித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பரபரப்பு கருத்து வெளியிட்டுள்ளார்.

சிங்கப்பூர், மலேசியாவுக்கு 5 நாட்கள் சுற்றுப் பயணமாக கடந்த 8-ந்தேதி அவர் புறப்பட்டு சென்றார். சிங்கப்பூரில் ஐ.ஐ.எம். முன்னாள் மாணவர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார்.

அப்போது ராஜீவ்காந்தி கொலையாளிகளை மனித்து விட்டீர்களா? என்ற மாணவர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்தார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:-

மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் எனது தந்தை ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதை நினைத்து நானும், சகோதரி பிரியங்காவும் மிகுந்த துயரத்தில் இருந்தோம். பல ஆண்டுகள் வரை கொலையாளிகள் மீது ஆவேசத்தில் இருந்தோம். ஆனால் தற்போது ராஜீவ் கொலையாளிகளை முழுமையாக மன்னித்து விட்டோம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer