Saturday, March 24, 2018

அடுத்த வாரம் நடைபெறவுள்ள வடகொரியா தென்கொரியா இடையேயான உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வடகொரியா சம்மதித்துள்ளதாக தென்கொரிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அண்மையில் தென்கொரியாவின் ப்யாங் சாங் நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரிய அணியும் அதன் அதிகாரிகள் மற்றும் வடகொரிய அதிபரின் தங்கை ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

அதைத் தொடர்ந்து இவ்விரு நாட்டுக்கும் இடையே சற்று இணக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரம் நடைபெறவுள்ள உயர் மட்டப் பேச்சுவார்த்தை பின்னர் ஏப்பிரலில் இரு நாட்டு தலைவர்களும் பங்கேற்கும் முக்கிய மாநாட்டுக்கு இட்டுச் செல்லும் என்றும் கூறப்படுகின்றது. ஏப்பிரல் மாநாடும் இரு நாட்டு உறவையும் வலுப்படுத்தவும் வடகொரிய அணுவாயுதத் திட்டங்களை நிறுத்தித் தீர்வு காணும் அடிப்படையிலும் இருக்கும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை இரு கொரிய தேசங்களின் எல்லைப் பகுதியிலுள்ள பான்முன்ஜோம் கிராமத்தில் தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சோ ம்யொங் க்யொன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதில் ஏப்பிரல் மாநாட்டுக்கான திகதி மற்றும் இடம் என்பவையும் தீர்மானிக்கப் படவுள்ளது. வடகொரியக் குழுவை ரீ சொன் க்வொன் என்பவர் வழிநடத்துவார் என்றும் தெரிய வருகின்றது.

மே இறுதியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் கிம் இடையேயும் ஒரு சந்திப்பு ஒழுங்கு படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப் படவுள்ளன.
1950 முதல் 1953 வரை இடம்பெற்ற கொரிய யுத்தத்துக்குப் பின்னர் இரு நாட்டு தலைவர்களும் இதற்கு முன்பு இரு தடவை மாத்திரமே நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மத்திய பகுதி வரை சென்று தாக்கக் கூடிய ஏவுகணைப் பரிசோதனையை வெற்றிகரமாக வடகொரியா மேற்கொண்டிருந்தது. இதனால் கொரியத் தீபகற்பத்திலும் அமெரிக்காவுக்கும் வடகொரியா கடந்த வருடம் அச்சுறுத்தலாகவே இருந்தது. இதன் காரணமாக தற்போது ஒழுங்கு செய்யப் பட்டுள்ள பேச்சுவார்த்தைகள் எந்தளவுக்குப் பலனளிக்கும் என்பது தொடர்பில் அரசியல் அவதானிகள் மத்தியில் கேள்விக் குறியாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer