Friday, March 16, 2018

“காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வார காலத்திற்குள் அமைக்கவிட்டால் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும். அதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் தயாராக இருக்கிறார்கள்.” என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “நமக்குள் ஒருவருக்கொருவர் குறை சொல்லிக் கொண்டிருப்பதற்கு இது உகந்தநேரம் அல்ல. ஏனென்றால் பாதிக்கப்படுவது தமிழ்நாட்டு விவசாயிகள் தான். கர்நாடக மாநில அரசு இடைக்காலத் தீர்ப்பின் படியும் தண்ணீர் திறந்து விடவில்லை. இறுதி தீர்ப்பின் அடிப்படையிலும் தண்ணீர் திறந்து விடுவதில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு 6 வாரம் என்ற காலக்கெடு எந்த காரணத்தின் அடிப்படையிலும் நிச்சயம் நீட்டிக்கப்பட மாட்டாது என்று, யாரும் வேறுபொருள் கொள்ள முடியாதபடி, அழுத்தம் திருத்தமாகவே உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. அதுவும் பக்ராநங்கல் மேலாண்மை வாரியம் போல் அதிகாரம் மிக்க வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்திக் கூறியிருக்கிறது.

உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கும் ‘ஸ்கீம்’ என்பது காவிரி மேலாண்மை வாரியம் தான் என்றும், அதை ஆறு வாரகாலத்திற்குள் மத்தியஅரசு நிச்சயம் அமைத்தே தீர வேண்டும் என்றும் சட்ட வல்லுனர்கள் கூறியிருக்கிறார்கள். சென்ற முறை ‘மூன்று தினங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமையுங்கள்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது, ‘மாநில அரசின் சார்பில் நியமிக்க வேண்டிய உறுப்பினரின் பெயரைக் கொடுங்கள்’ என்று எப்படி மத்திய அரசு மாநில அரசைக் கேட்டதோ, அதேமாதிரி இந்த முறையும் நம் மாநிலத்தின் பிரதிநிதி பெயரைக் கேட்டு வாங்கி இந்நேரம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திருக்க வேண்டும். ஆனால் இந்த முறைகள் எதிலும் அக்கறை காட்டாமல், மத்திய அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்துவதில் இவ்வளவு தயக்கமும், குழப்பமும் செய்து வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer