Friday, March 2, 2018

ஐரோப்பாவில் அண்மைய வரலாற்றில் இல்லாத அளவு கடும் பனிப்பொழிவும் புயலும் ஆக்கிரமித்துள்ளன.

இதனால் நூற்றுக் கணக்கான விமான சேவைகள் பாதிக்கப் பட்டுள்ளதுடன் ரயில்வே சேவைகளும். பல நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்தும் பாதிக்கப் பட்டுள்ளது.

கடும் பனிப்பொழிவு உள்ள இடங்களில் பெரும்பாலான பள்ளிகள் மூடப் பட்டுள்ளதுடன் ஐரோப்பா முழுதும் கடும் குளிருக்கு 55 பேர் பலியாகி இருப்பதாகத் தெரிய வருகின்றது. போலந்தில் 20 பேரும் ஸ்லோவாக்கியாவில் 7 பேரும் பலியாகி இருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. கடும் குளிரால் ஐரோப்பாவில் வீடற்ற ஏழைகள், வயதானவர்கள், நோய் வாய்ப் பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் குழந்தைகள் கடும் சிரமத்தை எதிர்கொள்ள நேரும் என்பதால் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

குறிப்பாக இம்முறை பருவம் பிந்திய பனிப்பொழிவால் சுவிட்சர்லாந்து, ஸ்காட்லாந்து, பிரான்ஸ் மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகளில் பல இடங்களில் வெண்பனி மூடியுள்ளது.

கடந்த ஒரு வாரமாக ஐரோப்பாவின் பனி படர்ந்த பகுதிகளில் சராசரி வெப்பநிலை - 10 டிகிரி ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது. உலக சுகாதார மையத்தின் வேண்டுகோளை அடுத்து பிரான்ஸ் தனது நாட்டில் இருக்கும் வீடற்ற சுமார் 3000 பேருக்கு தங்குமிட வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer