Saturday, March 3, 2018

உலகம் முழுவதும் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறது..

நேற்று ரஸ்ய அதிபர் விளாடிமிர் புற்றின் நாட்டு மக்களுக்கான இரண்டு மணி நேரத்திற்கான வருடாந்த உரையை நிகழ்த்தினார், அத்தருணம் அவர் தாம் உருவாக்கியிருக்கும் கண்டம் விட்டு கண்டம் தாவும் சாமற் ஆர்.எஸ்.28 என்னும் ஏவுகணை தயார் என்று அறிவித்தார்.

பரிசோதனைகள் முடிந்துவிட்டன, 2020 ல் தயாராகும் என்ற ஏவுகணை 2018 லேயே தயாராகிவிட்டது, அதற்கான அனிமேஷன் காட்சி திரையில் விழுந்தது.

வரும் 18ம் திகதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அவரே வெற்றி பெறப்போகிறார், ரஸ்யர்கள் முகங்களில் பெரும் மகிழ்ச்சி உடைந்த சோவியத் யூனியன் மறுபடியும் முதலிடத்திற்கு வந்துவிட்டதென்ற பெருமை அவர்கள் முகங்களில்.

கரகோஷம் வானைப்பிளந்தது..

இதுவரை காலமும் அமெரிக்கா தானே உலகின் முதலிடம் என்று கூறியது, ஆனால் நேற்று ரஸ்ய அதிபர் வெளியிட்டிருக்கும் தகவல் யார் உலகில் முதலிடம் என்ற கேள்விக்கு அமைதியாக பதிலளித்துள்ளது.

உலகத்தின் கடைசி நாளை தீர்மானிக்கும், இதுவரை உலகின் கைகளில் இல்லாத பெரும் ஆயுதத்தை நேற்று அவர் அறிமுகம் செய்துள்ளார்.

ஐ.நாவின் சட்டப்படி கொத்துக் குண்டுகளை தயாரிக்க முடியாது என்கிறார்கள், ஆனால் இந்த ஏவுகணை அணு குண்டுகள் 16 ஐ ஒன்றாக இணைத்த கொத்தான தாக்குதல் தலைகளை கொண்ட பகாசுர ஏவுகணையாக இது.

ஜப்பான் ஹீரோசீமாவில் வீசப்பட்ட அணு குண்டைவிட 2000 மடங்கு சக்தி கூடியதாக இருக்கிறது, இதன் ஒவ்வொரு குண்டின் பலமும். உள்ளே 40 மெகா தொன் எடையுள்ள வெடிக்கும் பொருள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ரெக்ஸாஸ் முதல் பிரான்ஸ்வரை பறக்கும்..

நிலத்தின் அடியில் இருந்து கடலின் அடியிலிருந்து, நீர் மூழ்கிக் கப்பலில் இருந்து சீறியபடி புறப்படும், அப்பலோவின் மூன்று பாகங்கள் எரிந்து விழ கடைசிப் பாகம் தரையில் இறங்குவது போல இதன் உருவாக்கக் கற்பனையும் அமைந்துள்ளது, கடைசியான தாக்குதல் நொடியில் இது 12 முதல் 16 அணு குண்டுகளாக பிரிவடையும், தடுத்து நிறுத்த முடியாது.

ஏவுகணை 10.000 கி.மீ தூரம் பறக்கும் என்றும் ஓர் ஏவுகணை போதும் அனைத்து ஒரு நாட்டின் அதிகார மட்டத்தை ஒரே நொடியில் சாம்பலாக்கி முடிப்பதற்கு.

இந்த ஏவுகணை ரஸ்யாவில் இருந்து எந்தத் திசை நோக்கியும் பறக்க வல்லது, நீரின் அடியால் 12.000 கி.மீ வேகத்தில் கிளம்பிப் பறக்கும், ஏவுகணை எதிர்ப்புப் பீரங்கியான பற்றியாற்றிக் பீரங்கியால் எதுவும் செய்ய முடியாது, புறப்பட்டுவிட்டால் இதன் பேரழிவை தடுக்க யாராலும் முடியாது.

அதேவேளை இதில் உள்ள லேசர் கருவிகள் தாக்கவரும் ஏவுகணைகளையும் தகர்த்துவிடும், சாற்றான் – 1 இரகத்தின் அடுத்த கட்டம் இதுவாகும்.

இதன் மூலம் ரஸ்ய அதிபர் தொழில்கள் பெருகும், ரஸ்யாவின் பலம் கூடும் என்று கூறினாலும், உலகில் யாருக்கு முதலிடம் என்ற கேள்விக்கு மிகவும் தெளிவான பதிலை அமெரிக்க அதிபருக்கு வழங்கியிருக்கிறார்.

ஒரே இரவில் உலகத்தின் அதிகாரத்தை மாற்றிவிடக் கூடிய வல்லமையுடன் அவர் கிரெம்ளினில் இருக்கிறார் என்பது உலகத்திற்கு தெளிவான செய்தியாகியிருக்கிறது.

தற்போதய உலகத்தின் அணு சக்தி வல்லரசுகளான அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரான்ஸ், பிரிட்டன், இஸ்ரேல், பாகிஸ்தான், வடகொரியா ஆகிய நாடுகளுடைய பலத்தை இரண்டாவது இடத்திற்கு தள்ளியுள்ளார்.

உலகம் தோன்றிய நாள், உலகத்தின் கடைசி நாள் என்று பைபிளில் தகவல்கள் உள்ளதாகவும், இயேசுநாதரே மறுபடி வந்து காப்பாற்றுவார் என்றும் பலர் நம்புகிறார்கள்.

ஆனால் இது போல தீர்க்க முடியாத பொறாமை ஏற்பட்டு நாடுகள் தம்மிடமுள்ள அணு குண்டுகளை எல்லாம் பாவித்த காரணத்தினால் புவியைப் போல இருந்த ஒரு கிரகம் ஏற்கெனவே உடைந்துள்ளதாக ரஸ்ய விஞ்ஞானியாகிய வெலிக்கோவ்ஸ்கி என்பவர் எழுதியிருக்கிறார்.

புவிப்பந்தில் ஒரு நாளைக்கு 3000 தொன் தூசி விழுகிறது, இது உடைந்து போன கிரகத்தின் தூசியே என்றும் கூறிய அவர், கடவுளால் காப்பாற்றப்படும் கடைசி நாள் என்று எதுவும் கிடையாது என்பதை தனது அறிவால் விளக்கியிருக்கிறார்.

ஆனால் உலகம் அதை ஏற்கவில்லை அவரை கேலி செய்தது, ஆனால் இப்போது அவர் கூறிய இடத்திற்கு காய்கள் நகர்த்தப்பட்டுள்ளன.

உலகப் போர் ஒன்று வருவதற்குரிய காரணங்களின் முதலிடம் வகிக்கும் ஆயுதப் போட்டா போட்டி தன்னை தெளிவாக அடையாளம் காட்டியுள்ளது.

ஐ.நா பாதுகாப்பு சபை இனி செல்லாக்காசு..

அந்தக் கூட்டுப்படை இந்தக் கூட்டுப்படை என்று எதுவும் தேவையில்லை.. ஒரே அழுத்து உலகமே சரி..

முடிவுதான் என்ன..?

ஆயுத வளர்ச்சி என்பது எனக்குக் கிடைக்காத பால் உனக்கும் கிடைக்கக் கூடாது என்ற சுயநலக் கொள்கை கொண்டதுதான்.

நான் முதல்வனாக ஆட்சி செய்ய முடியாத உலகத்தில் நீ முதல்வனாக இருக்க முடியாதென முழு உலகத்தையும் அழிக்கும் பாதையில் செல்வதுதான் இந்த ஆயுதங்களின் ஏட்டிக்கு போட்டியான உருவாக்கமாகும்.

இவை ஒரு காலமும் நிற்காது, பின் நோக்கியும் செல்லாது..

உலகம் ஆபத்தான செய்தி ஒன்றை கேட்டுள்ள நாளாக நேற்றைய பொழுது இருக்கிறது.

அமெரிக்கா இதைவிட பலமான ஆயுதம் ஒன்று தன்னிடம் இருப்பதை வெளிக்காட்டாவிட்டால் அமெரிக்காவே முதல் என்ற டொனால்ட் ரம்ப்பின் குரல் கேலிக்குரியதாகிவிடும்..

மற்றைய நாடுகள் காறித்துப்பாது அமெரிக்கர்களே துப்ப நேரிடும்..

அழகான இந்தப் பூமி சாத்தானிடம் மாட்டிவிட்டது என்பது மட்டும் உண்மை.

0 comments :

Post a Comment

 
Toggle Footer