Sunday, March 18, 2018

இன்று ஞாயிற்றுக் கிழமை வெளியான தேர்தல் முடிவுகளின் படி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் 4 ஆவது முறையாகவும் அதிபராக கிட்டத்தட்ட 74% வீத வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். சுமார் இரு தசாப்தங்களாக மூன்று முறை 7 சக போட்டியாளர்களை வெற்றிகொண்டு ரஷ்ய அதிபராக புட்டின் ஆட்சி செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் உலகின் மிகப் பெரிய நாடான ரஷ்யாவை 21 ஆம் நூற்றாண்டு தொடங்கியதில் இருந்து இன்று வரை புட்டின் அதிபராக ஆட்சி செய்து வருகின்றார். இம்முறை நடைபெற்ற அதிபர் தேர்தலிலும் முறைகேடுகள் இடம்பெற்றதாகவும் பொது மக்கள் கட்டாயத்தின் பேரில் வாக்களிக்கப் பணிக்கப் பட்டார்கள் என்றும் எதிரணியினர் குற்றம் சாட்டியுள்ள போதும் மிகப் பெரும் வித்தியாசத்தில் அறுதிப் பெரும்பான்மையில் புட்டின் வெற்றி பெற்றிருப்பதால் அவரை இவை பாதிக்காது என்று கூறப்படுகின்றது.

மறுபுறம் சீனாவின் பிரதமராக லீ கெக்கியாங் 2 ஆவது முறையாகவும் தேர்வு செய்யப் பட்டுள்ளார். அண்மையில் தான் சீனாவின் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பில் அதிரடித் திருத்தம் கொண்டு வரப்பட்டு அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங் நிரந்தர அதிபரானார். இந்நிலையில் லீ கெக்கியாங் ஆளும் கம்யூனிசக் கட்சியின் 2 ஆவது பிரதித் தலைவராகவும் தேர்வு செய்யப் பட்டுள்ளார். 62 வயதாகும் லீ கெக்கியாங்குக்கு நாடாளுமன்றத்தில் 2964 வாக்குகள் கிடைத்தன. சீனாவின் சகல அதிகாரமும் மிக்கத் தனிப்பெரும் அதிபராக ஜீ ஜின்பிங் திகழ்வதால் பிரதமர் என்று இவர் பெயரளவிலேயே தொழிற்படுவார் எனக் கருதப் படுகின்றது.

சீனாவில் முன்னதாக அதிபராகவோ பிரதமராகவோ ஒருவர் இரு முறை மாத்திரம் 5 ஆண்டுகளே பணியாற்றலாம் என்றே சட்டத்தில் இருந்தது. ஆனால் அண்மையில் சீன நாடாளுமன்றத்தில் மாற்றியமைக்கப் பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஒருவர் அங்கு இரு முறைக்கு மேலும் ஆயுள் வரை அதிபர் பதவியில் நீடிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சீனாவின் சகல அதிகாரமும் கொண்ட தனிப்பெரும் தலைவராக ஜீ ஜின்பிங் தற்போது திகழ்கின்றார் என்பதுடன் சீனாவின் வலிமை மிக்க இராணுவத்தின் முப்படைத் தளபதியாகவும் இவர் திகழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer