Thursday, March 15, 2018

மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதமும் வாக்கெடுப்பும் நடத்தப்பட இருப்பதாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டால், துரிதமாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவித்த அமைச்சர் பைசர் முஸ்தபா, “எல்லை நிர்ணய அறிக்கையை பாராளுமன்றத்தில் கையளிப்பது மட்டுமே எனது பொறுப்பு. அதன் பின்னரான சகல நடவடிக்கைகளும் பாராளுமன்றத்தினூடாகவே முன்னெடுக்கப்படும். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் எல்லை நிர்ணய அறிக்கை நிறைவேறாவிட்டால், பிரதமர் தலைமையிலான குழுவில் இது பற்றி ஆராயப்பட்டு அடுத்த கட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

உள்ளூராட்சித் தேர்தல் புதிய கலப்பு முறையில் நடந்த நிலையில் மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடத்த வேண்டும் என சில கட்சிகள் கோரியுள்ளன. உள்ளூராட்சி தேர்தலில் சில குறைபாடுகள் இருந்தாலும் மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடத்தி பின்னோக்கி செல்வது உகந்ததல்ல. சுதந்திரக் கட்சி பழைய முறையில் செல்வதை விரும்பினாலும் புதிய முறையே உகந்தது என்ற நிலைப்பாட்டிலே இருக்கிறேன்.

சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகள் பழைய முறையில் தேர்தலை நடத்துமாறு கோரியுள்ளன. சிறுபான்மை பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகள் தேசிய ரீதியில் சிந்திக்க வேண்டும். மேன்முறையீடு செய்ய குழு எதுவும் இல்லாத நிலையில் எம்.பிக்களினுடாகவே தேவையான திருத்தங்கள் மற்றும் மாற்றங்களை பாராளுமன்றத்திற்கு முன்வைக்க முடியும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer