ஒரு கட்சி தனித்து ஆட்சியமைக்க முடியாத உள்ளூராட்சி சபைகளில் கூடுதல் ஆசனம் பெற்ற கட்சிகளுக்கு ஆட்சியை முன்னெடுப்பதற்கு இடையூறு இன்றி ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) முடிவு செய்துள்ளது.
தொங்கு நிலையில் உள்ள சபைகளில், எந்தக் கட்சிக்கும் இடையூறு இன்றி செயற்பட இடமளிக்கவும் மக்கள் நல செயற்பாடுகளின் போது ஆதரவு வழங்கவும் இருப்பதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பொதுக் கூட்டம் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் கட்சி நிர்வாக செயலாளர்கள், பிரதேச நிர்வாக செயலளார்கள்,உள்ளூராட்சி தேர்தலில் வென்ற உறுப்பினர்கள்,வேட்பாளர்கள் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். உள்ளூராட்சி தேர்தல் முடிவு தொடர்பாகவும் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதில் உள்ள சிக்கல்கள் பற்றியும் இங்கு ஆராயப்பட்டுள்ளது.
வடக்கிலுள்ள பெரும்பான்மையான சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ள போதும், இவற்றில் பல சபைகளில் ஏனைய கட்சிகளின் ஆதரவுடனே ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் கட்சிகள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவை கோரியுள்ளதோடு இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளும் நடந்துள்ளதாக அந்தக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் மக்கள் ஆணை வழங்கியுள்ள, ஆனால் தொங்கு நிலையிலுள்ள சபைகளில் கூடுதல் ஆசனம் பெற்ற கட்சிகளுக்கு ஆட்சியமைக்க இடமளிப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முடிவு செய்துள்ளது.
ஒரு வாக்கினாலேனும் முன்நிலையில் உள்ள கட்சிக்கு மக்களின் ஆணைப்பிரகாரம் ஆட்சியை முன்னெடுக்க வழிவிட்டு அவர்கள் முன்னெடுக்கும் மக்கள் நல சேவைகளுக்கு ஆதரவு வழங்குவதென நேற்றைய விசேட கூட்டத்தில் முடிவாகியுள்ளது.
எந்தக் கட்சிக்கும் நேரடியாகவோ வெளியில் இருந்தோ ஆதரவு வழங்க இது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் தொடர்ந்து பேச்சுகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Wednesday, February 14, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment