Monday, February 5, 2018

நாம் சிறுவயதில் தாத்தா, பாட்டியிடம் புதையல்கள் சம்பந்தபட்ட  பல கதைகள் கேட்டிருப்போம். அதை கேட்கும் போது எந்த அளவு சுவாரஸ்யம் இருந்ததோ அதே அளவு சுவாரஸ்யத்தை கொடுப்பதற்காக தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்து இன்று வரை அதைத்  தழுவிய கதையம்சம் கொண்ட பல படங்கள் வந்து கொண்டுதான் உள்ளன. ஒரு காடு அல்லது மலை,  அதையெல்லாம் தாண்டி ஒரு புதையல், அதைத் திருட பல குழுக்கள் முயற்சி செய்வார்கள்  என்ற பாரம்பரியமான, பழசான கதையை பல கோணங்களில் எடுத்திருக்கிறது  தமிழ் சினிமா. நீண்ட இடைவேளைக்குப்  பிறகு மறுபடியும் அதே கதையில் ஒரு குரூப் புதையலை தேடி செல்கிறது... குலேபகாவலியை நோக்கி. போன வழி சுவாரஸ்யமாக இருந்ததா...? இல்லையா...?

மன்சூர் அலிகான் சாமி சிலைகளைத்  திருடி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துவருகிறார். அவரது அடியாட்களான பிரபுதேவாவும், யோகி பாபுவும் அவருக்கு உதவியாக சிலைகளை திருடிக்  கொடுக்கும் வேலை செய்து வருகிறார்கள். நாயகி ஹன்சிகா தாயில்லாத நிலையில், தன் தங்கைக்காக இரவு நேரங்களில் மாடர்னாக பப்புக்குச்  சென்று அங்குள்ள பணக்கார இளைஞர்களிடம் பணம், பொருட்களை திருடுகிறார். மற்றொரு புறம் ரேவதி பலரிடம் லாவகமாக பேசி ஏமாற்றி காரைத்  திருடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இன்னொரு புறம் ஆனந்த் ராஜ், அவரது உறவினர் மதுசூதன் மூலம் ஆங்கிலேயர்களிடம் இருந்து பதுக்கப்பட்ட வைரங்கள் குலேபகாவலி என்ற கிராமத்தில் இருப்பதாக அறிந்து அதைத்  திருட எண்ணி ஹன்சிகாவின் தங்கையைக்  கடத்தி பணயக் கைதியாக வைத்து, ஹன்சிகாவை வைரங்களை எடுத்து வர சொல்கிறார். இப்படி பல குழுக்களும் புதையலைத் தேடிச் செல்ல, அவர்களைப் பிடிக்க போலீஸ் சத்யன் செல்ல என நடக்கும் காமெடி கலவரம் தான் குலேபகாவலி. காமெடி என்று நம்பி அவர்கள் நடத்தியிருப்பது முழுமையாக நம்மை அடைந்ததா என்பது தான் கேள்வி. 

பிரபுதேவா இளமை துள்ளலுடன் நடனம் ஆடுகிறார், காமெடி நடிப்பால் கவர்கிறார். இருபது வருடங்களுக்கு முன் இருந்த அதே பிரபுதேவாவை இப்படத்தில் பார்க்க முடிகிறது. உடம்பை அவ்வளவு கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். ஹன்சிகாவிற்கு அதிக வசனங்கள் இல்லாததால் அழகை  மட்டும் காட்டிவிட்டுச்  செல்கிறார். படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்றிருக்கும் ரேவதி வரும் இடங்களெல்லாம் 'மாஸ்' தான். ஆக்ஷன் காட்சிகளிலும் பின்னி பெடெல் எடுக்கிறார். மன்சூர் அலிகான், ஆனந்த் ராஜ், முனிஸ்காந்த், யோகிபாபு, சத்யன், மொட்டை ராஜேந்திரன் படம் முழுவதும் நம்மை கிச்சுகிச்சு மூட்ட முயற்சித்து ஓரளவு வெற்றி பெற்றிருக்கின்றனர். இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காமெடி காட்சியில் தியேட்டர் சிரிப்பலையில் அதிர்கிறது. முழுக்க முழுக்க காமெடியை மட்டுமே நம்பி  படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் கல்யாண். இருந்தும் ஒரு சில இடங்களில் காமெடி பெரிதாக எடுபடவில்லை என்பதும் உண்மை. தேவையில்லாத  இடங்களில் வரும் பாடல்கள் படத்தின் வேகத்தைக்  குறைகின்றன. விவேக்-மெர்வின் இசையில் 'குலேபா' பாடல் மட்டும் குதூகலம், மற்றவை சுமார் ரகம். 

எதுவுமே தேவையில்லை, கொஞ்ச நேரம் சிரித்தால் மட்டும் போதுமென்பவர்கள் தாராளமாக 'குலேபகாவலி' கிராமத்திற்குச் செல்லலாம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer