Monday, February 5, 2018

சென்ற ஆண்டு தமிழகத்தில் நடந்த பெரும் இளைஞர் புரட்சியான ஜல்லிக்கட்டுப்  போராட்டத்தின் போது எழுந்த உணர்வலையை கவனித்த இயக்குனர்கள் சிலர் அதையும் கதையில் சேர்த்து மக்களை இன்னும் நெருக்கமாக அடையலாம் என்ற எண்ணத்தில்  சில பல படங்களை எடுக்கத் தொடங்கி அவை வெளிவர ஆரம்பித்து விட்டன. அப்படி வந்து  'கருப்பன்' பெற்ற வெற்றிக்கு அடுத்து இப்பொழுது வந்திருக்கிறது பி.ஜி.முத்தையாவின் மதுரவீரன்.

மலேசியாவிலிருந்து மதுரைக்கு அருகில் இருக்கும் தன் கிராமத்துக்கு இருபது ஆண்டுகள் கழித்து வருகிறார் நாயகன் சண்முகபாண்டியன். பெண் பார்க்க வருவதாக உறவினர்கள் நினைக்க, அவர் வந்திருப்பதோ, தனது தந்தையைக் கொன்றவர்களைக் கண்டுபிடித்துப் பழிவாங்க, தன் தந்தை நடத்த முயன்று முடியாமல் போன ஜல்லிக்கட்டை நடத்திக் காட்ட. இடையில் தனக்கான பெண்ணையும் அந்த கிராமத்திலேயே பார்த்துவிடுகிறார் சண்முகபாண்டியன். கிராம மக்கள் பிரிவினை, சாதி பூசல், அரசு தடை அனைத்தையும் தாண்டி வெற்றிகரமாக ஜல்லிக்கட்டை நடத்தினாரா, தன் தந்தையைக் கொன்றவர்களைக் கண்டுபிடித்து பழி வாங்கினாரா மதுரவீரன்? கிராம மக்கள் வாழ்வில் ஜல்லிக்கட்டின் பங்கு, அதே நேரம் சாதியால் அதிலிருந்து ஒதுக்கப்பட்டிருப்பவர்கள் என நன்மை தீமை இரண்டையும் நியாயமாக பேசியிருப்பது மகிழ்ச்சி. கம்யூனிசம், பகுத்தறிவு, இயற்கை விவசாயம் என  நல்ல அரசியல் விஷயங்களில் எதையெல்லாம் நுழைக்க முடியுமோ அதையெல்லாம் சேர்த்திருக்கிறார் இயக்குனர்.     

'சின்ன கேப்டன்' சண்முகபாண்டியன் ஆறு அடிக்கும் மேலாக ஆஜானுபாகுவாக இருக்கிறார், அழகாக சிரிக்கிறார். அதிகமான 'பன்ச்'கள் எல்லாம் பேசாமல் அமைதியாக இருக்கிறார். சண்டைக் காட்சிகளில் கம்பீரமாக ஜொலிக்கிறார், ஆனால் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் மிகவும் 'வீக்'காகவே இருக்கிறார். இடைவேளையில் ஆவேசமாக பேச வேண்டிய அந்த வசனத்தையும் கூட பலவீனமாக பேசியிருப்பதாக பார்ப்பவர்களுக்குத் தோன்றுகிறது. இன்னும் கொஞ்சம் நடிப்பில் தேறி சற்றே  ஃபிட் ஆனால், ஹிட் ஆகலாம். இவர் அடக்கி வாசிப்பதால், இவரது அப்பாவாக நடித்திருக்கும் சமுத்திரக்கனிதான் முன்னிலையாக  நிற்கிறார். கம்பீரம், நேர்மை, சமத்துவம் என வாழும் கிராமத்து மனிதராக சமுத்திரக்கனி அத்தனை பொருத்தம். ஆனால், அறிவுரைகள் இதிலும் அதிகமாக இருப்பதுதான் வருத்தம். நாயகி மீனாக்ஷி, வேல ராமமூர்த்தி, 'மைம்' கோபி, தேனப்பன், மாரிமுத்து, பால சரவணன் என நல்ல நடிகர்கள் தான் படத்தின் பெரிய பலம். சுமாரான பல காட்சிகளும் நடிகர்களின் பங்களிப்பால் நன்றாகத் தெரிகின்றன. பாலசரவணனின் வசனங்கள் ஆங்காங்கே சிரிக்க வைக்கின்றன, மொட்டை ராஜேந்திரனின் 'கபாலி' காமெடி 'எதுக்கு' என்று  நினைக்க வைக்கின்றது.     

திரைக்கதையில் நாயகனுக்கு இருக்கும் இரண்டு முக்கிய பிரச்சனைகளிலும் மாறி மாறி செலுத்தப்பட்டிருக்கும் கவனம் தான் குறை. தந்தையைக் கொலை செய்தவரைக் கண்டுபிடிப்பதிலும், கண்டுபிடித்த பின்னரும் கூட விறுவிறுப்பு இல்லை. ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகத்துக்கு மிக முக்கியமானதுதான். ஆனால், அதன் காட்சிகளை எந்த அளவு படத்தில் சேர்க்க வேண்டும் என்பதை இயக்குனர் சரியாக முடிவு செய்திருக்க வேண்டும். அந்தப் பகுதி ஒரு டாக்குமெண்டரி உணர்வை அளிக்கிறது. சண்முகபாண்டியனை 'கெத்'தாகக் காட்ட கடும் முயற்சி செய்திருக்கிறது பி.ஜி.முத்தையாவின் கேமரா. அவரே இயக்கியிருப்பதால் காட்சிகளையும் அதற்கேற்ப அமைத்து சமாளித்திருக்கிறார். சண்டைக் காட்சிகள் மிகச் சிறப்பு. தன் தந்தையின் புகழ் பெற்ற காலை எட்டி உதைக்கும் பாணியை சிறப்பாக செய்திருக்கிறார் சண்முகபாண்டியன். சந்தோஷ் தயாநிதியின் இசை பல இடங்களில் காட்சிகளுக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. கிராமத்து பாணி பாடல்களும் 'கேட்கலாம்' ரகம். எல்லா விஷயங்களும் மோசமாகப் போய்விடாமல் சுமாராக இருப்பது படத்தின் பலம். சில விஷயங்கள் கூட சூப்பராக இல்லாமல் சுமாராக இருப்பது தான் பலவீனமும் கூட.

மதுரவீரன் சிறப்பு,  இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer