Monday, February 5, 2018

ஆதி காலம் தொட்டு  ஒவ்வொரு ஊரில் நடக்கும்  ஜாதி கலவரத்தின் பின்னணியையும் அலசிப்பார்த்தால் அதற்கு பல காரணங்கள் தென்படும். அந்த வக்கிரமும், வெறியும் எந்த அளவிற்கு ஆழமாக மக்கள் மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளது என பல கதைகளிலும், படங்களிலும் நாம் ஆண்டாண்டுகளாக பார்த்து வரும் பழமையான சமூக பிரச்சனையை கையாண்டிருக்கிறான் இந்த படைவீரன்....

ஒரு கிராமத்தில் விஜய் யேசுதாசின் பெரியப்பாவாக வரும் கவிதா பாரதி, அவர்களது ஜாதி தலைவராக பாவிக்கப்பட்டு, அவர் சொல்படி பலரும் கலவரத்திலும், கவுரவ கொலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதே கிராமத்தில் வேலை வெட்டி இல்லாமல், தன் நண்பர்களுடன் ஊர் சுற்றி வம்பிழுத்து அடிதடியில் ஈடுபட்டு சுற்றி திரியும் விஜய் யேசுதாஸ், போலீஸ் வேலையில் கிடைக்கும் அதிகாரத்தையும் மரியாதையையும் சலுகைகளையும் பார்த்து  போலீஸில் சேர முடிவெடுக்கிறார். அதற்காக பாரதிராஜாவின் உதவியுடன் லஞ்சம் கொடுத்து வேலையில் சேருகிறார். தான் காதலிக்கும் பெண்ணான அம்ரிதாவுக்காக உண்மையாக உழைக்கிறார். சிறிது நாட்களில் போலீஸ் டிரெயினிங் முடிந்த பின்னர் அவருடைய ஊரில் ஜாதிக்கலவரம் நடப்பதாகவும், அந்த கலவரத்தை கட்டுப்படுத்த விஜய் யேசுதாஸ் டீம் போக வேண்டும் என்றும் ஆர்டர் கொடுக்கப்படுகிறது. ஜாதிக்கலவரத்தை தடுக்க சொந்தபந்தங்களையே அடிக்கவும், கைது செய்ய வேண்டிய நிலை வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையை விஜய் யேசுதாஸ் எப்படி சமாளித்தார், அமிர்தாவுடனான காதலில் ஜெயித்தாரா என்பதே 'படைவீரன்'  கதை.

கதாநாயகன் விஜய் யேசுதாஸ் நடிப்பில் தேறிவிட்டார். ஒவ்வொரு காட்சியிலும் இயல்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். முதல் பாதியில் லுங்கி கட்டிய வெட்டி இளைஞன், இரண்டாவது பாதியில் மிடுக்கான போலீஸ் என இரண்டுக்கும் ஏற்றவாறு தன்னை வளர்த்துக்கொண்டிருக்கிறார். கலவரத்தில் மாட்டிக்கொண்டு என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி நிக்கும் இடத்திலும் இயல்பான பாவனைகளை வெளிக்காட்டியுளார். கதாநாயகி அமிர்தா வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பு. துடுக்கான பெண்ணாக வரும் அவரின் பாவனைகள் அழகாக வெளிப்பட்டிருக்கின்றன. இயக்குனர் பாரதிராஜா அவருக்கே உரித்தான நடிப்பில் பின்னியிருக்கிறார். எக்ஸ் சர்வீஸ்மேனாக வரும் அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் இன்றைய நாட்டின் நிலையை தோலுரித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. இவருடைய அழுத்தமான வசனங்கள் மூலம் அந்த கிராமத்தை திருத்த எடுக்கும் முயற்சிகளை கையாண்டிருக்கிறார். விஜய் யேசுதாஸ் நண்பர்களாக வரும் நான்கு பேரும் காமெடியில்  கலக்கியுள்ளார்கள்.

இயக்குனர் தனாவின் திரைக்கதையில் முதல் பாதி கலகலப்பாகவும், வேகமாகவும் நகருகிறது. இரண்டாம் பாதி சற்று  உணர்ச்சிகரமாகவும் மெதுவாகவும்  உள்ளது. கவுரவ கொலைகளின் வீரியத்தையும், ஜாதி வெறியையும் மிக யதார்த்தமாக காட்டியுள்ளார். இரண்டாம் பாதியை இன்னும் நேர்த்தியாக நகர்த்தி  சுவாரஸ்யமாக சொல்லியிருக்கலாம். கிளைமாக்ஸ் காட்சி அதிர வைக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு இசையமைத்த கார்த்திக் ராஜாவின் இசையில் தனுஷ் பாடிய 'லோக்கல் சரக்கா ஃபாரின் சரக்கா' என்ற பாடல் மட்டும் மனதில் ஒலிக்கிறது. ராஜவேல் மோகனின் கேமரா வெம்மையான தேனி மாவட்ட  கிராமத்தை யதார்தமாக படம் பிடித்துள்ளது.

படைவீரன் - போராடியிருக்கிறான்!

0 comments :

Post a Comment

 
Toggle Footer