பொதுவாகவே தமிழில் கிராமத்துக் கதை என்றால் அதில் பெரும்பாலும் காதல் ஜோடி, அவர்களைச் சேர விடாமல் தடை, அல்லது வெட்டுக் குத்து, ஜாதி பிரச்சனைகள் என்றே பார்த்துப் பழகிய நமக்கு இதையெல்லாம் தவிர்த்து ஒரு கிராமம் இருக்குமா, மிகுந்த முதிர்ச்சியடைந்த மனப்பான்மையும் பொறுமையும் கொண்ட கிராமத்து கதைகள் உண்டா என்ற கேள்விகள் எழ வைக்கின்றது 'நிமிர்'.
உதயநிதி ஸ்டாலின் ஒரு வளாகத்தில் போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். அதே வளாகத்தில் எம்.எஸ்.பாஸ்கரும் போட்டோ ஃப்ரேம் கடை நடத்தி வருகிறார். இன்னொரு பக்கம் உதயநிதி ஸ்டாலினும் பார்வதி நாயரும் சிறு வயது முதல் காதலிக்கின்றனர். பணம் சம்பாதிக்கும் பிரதான குணம் படைத்த பார்வதி நாயர், ஒரு கட்டத்தில் உதயநிதி ஸ்டாலினை நிராகரித்து வீட்டில் பார்த்த பணக்கார மாப்பிளையை மணக்கிறார். அப்போது ஒரு நாள் உதயநிதி ஸ்டாலின் கடை வளாகத்தின் எதிரே எம்.எஸ்.பாஸ்கரை ஒருவன் சண்டைக்கு இழுக்க, அப்போது அதைத் தடுக்க எம்.எஸ்.பாஸ்கரின் உதவியாளராக இருக்கும் கருணாகரன் வருகிறார். அவரை சண்டைக்கு இழுத்தவரின் நண்பனாக வரும் சமுத்திரக்கனி அடித்து விடுகிறார். பின்பு சமுத்திரக்கனியை தட்டிக்கேட்க சென்ற உதயநிதி ஸ்டாலினையும் சமுத்திரக்கனி அடித்து துவைத்து சென்று விடுகிறார். ஊரே பார்க்க நிகழ்ந்த இந்த அவமானத்தால் மனமுடைந்த உதயநிதி ஸ்டாலின், என்னை அடித்த சமுத்திரக்கனியை திருப்பி அடிக்கும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் என சபதம் செய்கிறார். உதயநிதி ஸ்டாலினின் சபதம் நிறைவேறியதா, இடையில் ஏற்பட்ட காதல் என்ன ஆனது என்பதே நிமிர்.
போட்டோகிராபராக வரும் உதயநிதி ஸ்டாலின் எதார்த்த நடிப்பில் பின்னியிருக்கிறார். அவர் நடித்த படங்களிலேயே இதில் தான் அவருடைய சிறந்த நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது. எந்த ஒரு காட்சியிலும் அலட்டல் இல்லாமல் முகபாவனைகளை மிகவும் அழகாகவும், இயல்பாகவும் வெளிப்படுத்தி நடிப்பில் சற்று 'நிமிர்'ந்துள்ளார். நமிதா பிரமோத் ஒவ்வொரு ஃப்ரேமிலும் தனது முகபாவனைகளை நொடிக்கு நொடி மாற்றி நடிப்பில் கை தட்டல்களை அள்ளுகிறார். படம் முழுவதும் இவர் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பு. உதயநிதி ஸ்டாலினின் முன்னால் காதலியாக வரும் பார்வதி நாயர் கொஞ்சநேரம் வந்தாலும் மனதில் பதிகிறார். எம் எஸ் பாஸ்கர், இயக்குனர் மகேந்திரன், சன்முகராஜன், சமுத்திரக்கனி, கருணாகரன், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி போன்ற நடிகர்கள் அவரவர் வேலைகளை கன கட்சிதமாக செய்து கதையோட்டத்திலும் முக்கிய பங்காற்றுகின்றனர்.
ஃபஹத் ஃபாசில் நடித்த 'மகேஷிண்டே பிரதிகாரம்' மலையாளப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக 'நிமிர்' படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன். ரீமேக்காக இருந்தாலும் மலையாளத்தில் பார்த்தவர்களுக்கும் கூட இந்தப் படம் பிடிக்கும் வகையில் புதிய காட்சிகளை சேர்த்து, ரசிக்கும்படியாகவும் அமைத்துள்ளார். படம் முழுவதும் நகைச்சுவையை அதிகமாக திணிக்காமல், முகம் சுழிக்கவைக்காமல் இயல்பாக இருக்கும்படி பார்த்துக் கொண்டுள்ளார். அந்த அளவுக்கு காமெடி காட்சிகள் நமக்கு அளவான சிரிப்பை படம் முழுவதும் அள்ளி தெளித்திருக்கிறது. ஒவ்வொரு காட்சிக்கும் முழுமையைக் கொடுக்கவேண்டும் என்று கவலைப்படாமல் புத்திசாலித்தனமாக நகர்த்தியுள்ளதில் தெரிகிறார் அனுபவ இயக்குனர் பிரியதர்ஷன். சமுத்திரக்கனியின் வசனங்கள் படத்திற்கு பலமாக அமைந்துள்ளன. உதயநிதி ஸ்டாலின் தன் ஸ்டுடியோவில் பார்வதி நாயர் போட்டோவை எடுத்துவிட்டு, நமிதா பிரமோத் போட்டோவை ஒட்டும்போது, உதயநிதி ஸ்டாலினின் அப்பாவாக வரும் மகேந்திரன் 'ஏன் போட்டோவை மாற்றுகிறாய்' என்று கேட்க, அதற்கு உதயநிதி ஸ்டாலின் 'இவ்வுளவு நாள் இது தப்பாக இங்கு இருந்தது' என்று சொல்ல அதற்கு மகேந்திரன் 'அது இப்போது தான் தெரிந்ததா' சொல்லும் இடம் போன்ற எளிமையான அர்த்தமுள்ள வசனங்கள் உதவியிருக்கின்றன. ஆனால், படத்தில் எளிமையே சற்று செயற்கையாக இருக்கிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அதிர்வேற்படுத்தாமல் செல்லும் திரைக்கதையைப் பார்க்க சற்று பொறுமையும் தேவைப்படுகிறது.
என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவில் படம் முழுவதும் கண்களுக்கு இதமாக குளிர்ச்சியுடன் காணப்படுகிறது. ஒவ்வொருவரையும் மிக எதார்த்தமாகவும், அழகாகவும் காண்பித்துள்ளார். அஜனீஷ் லோக்நாத் மற்றும் தர்புகா சிவா இசையில் பாடல்கள் அனைத்தும் அழகாக நம் மனதை ஊடுருவிச் செல்கின்றன. ரிப்பீட் மோடில் பாடல்கள் இல்லையென்றாலும் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் அருமையாக உள்ளதை மறுக்க முடியாது. ரோனி ராபெல்லின் பின்னணி இசை படத்திற்கு உயிர்ரோட்டமாக அமைந்துள்ளது.
'நிமிர்' அழகான கிராமத்துக் கவிதை, சற்று பொறுமை தேவை
Monday, February 5, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment