Monday, February 5, 2018

எல்லா தரப்பு மக்களின் எதிர்ப்பையும், கோபத்தையும், சாபத்தையும் பெற்றுள்ள பாஜகவுக்கு பட்டுப்பாவாடை விரிப்பதற்கு பைந்தமிழ் நாட்டில் யாரும் தயாராக இல்லை என்று நாஞ்சில் சம்பத் கூறினார்.

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி...

ஓ.பன்னீர்செல்வத்தை கழற்றிவிட்டுவிட்டு, சசிகலா அணியுடன் இணக்கத்துடன் செல்ல பாஜக முயற்சிப்பதாக செய்தி வெளியாகிறது. இன்னொருபுறம் தினகரனை கழற்றிவிட்டால், சசிகலா குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் இணக்கமாக செல்ல தயார் என்று ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். ஆகியோர் பேசிவருவதாகவும் செய்தி வெளியாகிறதே?

இந்த செய்திக்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று எனக்கு தெரியாது. காற்றில் கலந்து வருகிற இந்த செய்திகளுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்க தயாரில்லை. ஆனால் ஏதாவது ஒரு வகையில் தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு வகுப்புவாத சக்திகள் திரும்ப திரும்ப முயற்சிக்கிறார்கள். அவர்கள் எடுத்த எல்லா முயற்சிகளும் முறிந்திருக்கின்றன. இனியும் அது எடுபடாது. ராஜஸ்தானிலும், வங்காளத்திலும் அண்மையில் நடைப்பெற்ற இடைத்தேர்தலில் அடிபட்டு விழுந்திருக்கிற பாஜக, தன்னுடைய சொந்த கோட்டைகளையே இன்றைக்கு காவு கொடுக்கிற நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

எல்லா தரப்பு மக்களின் எதிர்ப்பையும், கோபத்தையும், சாபத்தையும் பெற்றுள்ள பாஜகவுக்கு பட்டுப்பாவாடை விரிப்பதற்கு பைந்தமிழ் நாட்டில் யாரும் தயாராக இல்லை. லஞ்சம், லாவண்யம் முறைகேட்டில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் கொள்ளையடித்த ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். கும்பலை அதை காரணம் காட்டி அவர்களை வளைக்க முடியுமே தவிர, வேறு யாரையும் தமிழகத்தில் வளைக்க முடியாது.

ஆகவே வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு துடிக்கிறது என்பது புரிகிறது. அதனை அவர்கள் வெளிப்படையாக சொல்லவில்லை என்பதை தவிர, நாங்களும் திராவிட கட்சிதான் என்று சொல்லுகிற அளவுக்கு அவர்களும் பசுத்தோல் போர்த்திய புலியாக மாறுவதற்கும் தயாராகிவிட்டார்கள்.

டி.டி.வி. தினகரனை யாரேனும் தனிமைப்படுத்தலாம் என்று யாரேனும் கருதுவார்களேயானால் அந்த கனவு ஒரு நாளும் நிறைவேறாது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல் எதிரி, முக்கிய எதிரி, மூல எதிரி என 3 எதிரிகளையும் வீழ்த்தி வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை தினகரன் பெற்றிருக்கிறார். அவரை தனிமைப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களது அறியாமையை என்ன சொல்வது என்று புரியவில்லை. டி.டி.வி. தினகரன் தவிர்க்க முடியாத தலைவன். தமிழக இளைஞர்கள் ஏற்றுக்கொண்டிருக்கக்கூடிய தீப கம்பம். அதனை வெட்டி விரகாக்கலாம் என்று யார் நினைத்தாலும் அந்த முயற்சி ஒருக்காலும் பலிக்காது.

புதிய கட்சியை தினகரன் தொடங்கினால் நமக்கு சிக்கல் வரும் என்பதால்தான், தினகரனை தவிர சசிகலா குடும்பத்தினருடன் இணக்கமாக செல்ல தயார் என்று ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். கூறுகிறார்களா?

பன்னீர்செல்வத்தோடும், பழனிசாமியோடும் இப்போது ஒன்றாக இருப்பவர்கள் என்றைக்கும் ஒன்றாக இருக்க மாட்டார்கள். அப்படி ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்க முடியாது என்று அங்கு இருப்பவர்களுக்கு தெரியும். ஆட்சியும், அதிகாரமும் அதில் கிடைக்கும் அற்பத்தனமான லாபத்தற்காக ஒட்டிக்கிடப்பவர்கள் நாளை ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட்டு தினகரன் தவிர்க்க முடியாத தலைவன் என்று மாற்றாரும் மிரள தகுந்த வகையில் அவருடைய பயணம் தொடங்குகின்ற காலத்தில் அவர்கள் வந்து சேர்வார்கள். இந்த ஆட்சியும், அதிகாரமும்தான் இப்போது அவர்கள் அங்கு ஒட்டி உறவாடுவதற்கு ஒரு உந்துதலாக இருக்கிறது.

ஆட்சி அதிகாரம் நாளைக்கு போய்விடுமானால் அடுத்த நாளே அவர்கள் தினகரன் தலைமையை ஏற்றுக்கொள்வார்கள். தினகரனும் அவர்களை வரவேற்பார். ஆயிரம் சர்ச்சைகளுக்கும், சங்கடங்களுக்கும், குழப்பங்களுக்கும் மத்தியில் அதிமுகவை வழிநடத்தப்போவது தினகரன்தான்.

நேற்று முதல் தினகரன் சுற்றுப் பயணம் தொடங்கியுள்ளார். சுற்றுப் பயணத்தின் முடிவில் புதிய கட்சி அறிவிப்பு இருக்குமா? உங்கள் அணிக்கு வரக்கூடியவர்களுக்கு பொறுப்பு வழங்குவது, உறுப்பினர் அட்டை தயாரிப்பது உள்ளிட்ட வேலைகள் நடைபெறுகின்றனவா?

இப்போதே நகர, ஒன்றிய நிர்வாகிகளை நாங்கள் நியமித்துவிட்டோம். இனி ஊராட்சி செயலாளர்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமிக்க வேண்டும். புதிய கட்சி தொடங்குவதற்கான தேவை இப்போது வரவில்லை. ஏனென்றால் நீதிமன்றத்தில் இருந்து வரக்கூடிய தீர்ப்புபை பொறுத்துததான் தமிழ்நாட்டினுடைய அரசியல் எந்த திசையை நோக்கி போகும் என்று கணிக்க முடியும். அதற்கு நாங்கள் இப்போது அவசரப்படவில்லை. அதற்கான அவசியமும் தற்போது எழவில்லை என்றார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer