Monday, February 5, 2018

அரசு ஆவணங்களைக் கிழித்துக் கிழித்து தீயில் போட்டுக்கொண்டிருக்கிறான் அரசன். பதறி வந்து, "என்ன செய்கிறீர்கள் அரசே?" என்று கேட்பவர்களிடம், "எதிலும் என் பெயர் இல்லை, அதனால் தான் கிழிக்கிறேன். என் பெயர் இருப்பது தான் வரலாறு ஆக வேண்டும்" என்று கூறிச் சிரிக்கிறான் டெல்லி சுல்தான் அலாவுதின் கில்ஜி. வரலாறு உருவான விதமே இதுதான். என்றோ ஒரு நாள் ஏதோ ஒரு அரசனோ, எழுதக் கூடிய வாய்ப்பிருந்த ஒருவனோ எழுதியதே எல்லா தேசங்களின் வரலாறுகளும். அவற்றில்  உண்மையும் இருக்கும் புனைவும் இருக்கும். தங்கள் வரலாற்றை அசிங்கப்படுத்துவதாக, திரிப்பதாகக் கூறி இந்தப் படத்துக்கு வடஇந்தியாவில் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன சில 'ராஜபுத்திர' அமைப்புகள். அரசியலாகவும் திரைப்படமாகவும் பத்மாவத் எப்படி இருக்கிறது...       

13ஆம் நூற்றாண்டில் ஒரு நாள் மனைவிக்காக  முத்து எடுக்க சிங்கள தேசத்திற்குச் செல்லும் மேவாடின் அரசன் ராகுல் ரத்தன் சிங் (ஷாஹித் கபூர்), அந்நாட்டு இளவரசியான பத்மாவதியை (தீபிகா படுகோனே) காதலித்து திருமணம் செய்து நாடு திரும்புகிறார். அரசரும், அரசியும் தனிமையில் இருப்பதை ஒளிந்திருந்து பார்த்த குற்றத்திற்காக அந்நாட்டு ராஜகுரு நாடு கடத்தப்படவேண்டுமென்று  ஆலோசனை கூறுகிறார் பத்மாவதி. பின்பு அவளின் ஆலோசனையின்படியே நாடு கடத்தப்படுகிறார் ராஜகுரு. இன்னொரு பக்கம் விதவிதமான பெண்களை அனுபவிக்கும் வழக்கம் கொண்ட அலாவுதீன் கில்ஜி (ரன்வீர் சிங்) தில்லியில் உள்ள சுல்தான் வம்சத்தை நிறுவிய ஜலாலுதீன் கில்ஜியை கொலைசெய்துவிட்டு, தானே சுல்தானாகிறான். அப்போது நாடு கடத்தப்பட்ட ராஜகுரு டெல்லி சுல்தான் அலாவுதின் கில்ஜியிடம் சென்று பத்மாவதியின் பேரழகை விவரித்து, 'நீங்கள் அவரை அடைந்தால் இந்த உலகையே வெல்லும் அதிர்ஷ்டம் இருக்கிற'தென்று  கூறி  தீயை பற்றவைக்கிறார். இதனால், ராஜபுத்திர அரசு மீது போர் தொடுத்து அந்நாட்டு அரசனை நயவஞ்சகமாகக்  கடத்தி வந்து ராணி பத்மாவதி நேரில் வந்தால் தான் அரசரை விடுவிக்க முடியுமென்று  நிபந்தனை விதிக்கின்றார் அலாவுதீன் கில்ஜி. இந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்ளும் பத்மாவதி டெல்லி சென்று சாதுர்யமாக அவர் கணவரை மீட்டு வருகிறாள். பின்னர் கடும் கோபமடைந்த அலாவுதீன் கில்ஜி மீண்டும் ராஜபுத்திர அரசு மீது போர் தொடுக்கக்  கிளம்புகிறார். அதன் பிறகு அலாவுதீன் போரில் வென்றாரா? ரத்தன் சிங் என்னவானார்? ராணி பத்மாவதியை அலாவுதீன் அடைந்தாரா? இதுதான் பத்மாவதி, மன்னிக்கவும் பத்மாவத்.

சஞ்சய் லீலா பன்சாலியின் பிரம்மாண்டம் வேறு. அது ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் போரையோ, பெரும் மாயாஜாலங்களையோ படமாக்காது. அரசர் காலப் படமென்றாலும், அதிகாரப் பசி, காதல், காமம் என பின்னணி உணர்வுகளையே அதிகம் பேசுவது சஞ்சய் ஸ்டைல். பிரம்மாண்டத்தை அழகின் வடிவில் கொண்டு வருவார். 'பத்மாவத்'தும் ஒரு முழுமையான சஞ்சய் லீலா பன்சாலி படமாகவே இருக்கிறது. விறுவிறுப்பு, பரபரப்பு, பிரம்மாண்டம் எதுவுமில்லாமல் அமைதியான நீரோடை போன்ற திரைக்கதை, அதில் ரசிக்க காட்சி ரீதியாகவும், வசனம், இசை எனவும் பல விஷயங்களைக் கொண்டு எடுத்திருக்கிறார் சஞ்சய். பத்மாவதியாக தீபிகா படுகோனே, ஒரு மென்சோக அழகோவியம் போலிருக்கிறார். அவரது பேச்சும் அப்படியே. காதலிலும், பிரிவிலும், இறுதி முடிவிலும் நடிப்பில் ஈர்க்கிறார். ராஜபுத்திர அரசனாக வரும் ஷாஹித் கபூர் காதல், சோகம், வீரம் என அனைத்திலுமே சற்று அடக்கமாகவே தெரிகிறார். போரில் அலாவுதீனுடன் மோதும்போதும் இறுதிக் காட்சியில் மனதில் இறங்குகிறார்.  அலாவுதின் கில்ஜியாக வரும் ரன்வீர் சிங் ஒரு அவதாரம் எடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம். குரோதம், காமம், எள்ளல், தந்திரம் என அந்த கண்களும், உடல்மொழியும், சிரிப்பும் நடிப்பை  அள்ளிக் கொட்டுகின்றன.  இவர்களைத் தாண்டி நம் கவனம் ஈர்ப்பவர்  அலாவுதின் கில்ஜியின் அடிமை மாலிக் கபூராக நடித்திருக்கும் ஜிம் சர்ப். பாலிவுட்டில் தன் முதல் படத்துக்கே பல விருதுகள் வாங்கிய மேடை நடிகராம், இதிலும் தொடரும். 'காற்று வெளியிடை' அழகி அதிதி ராவ் ஹைதரி சிறு சிறு இடைவெளியில் மட்டும் தான் வருகிறார், என்றாலும் அவரது பதற்றத்தையும் சோகத்தையும் சரியாகப் பதிவு செய்திருக்கிறார்.

மெதுவான திரைக்கதைக்கு 'உன் கொள்கைகள் தான் உன்னைக் கொல்லப்  போகின்றன', 'போரில் இலக்கு ஒன்றே ஒன்றுதான் - வெற்றி' போன்று, வசனங்கள் நன்றாக உதவியிருக்கின்றன. கோட்டைகள், அரண்மனை, நதிக்கரை என இருளிலும் ஒளியிலும் அழகாக விளையாடி உருவாக்கப்பட்டிருக்கும் படத்திற்கு சுதீப் சாட்டர்ஜீயின் ஒளிப்பதிவு பெரும் பலம். கலை வேலைகளின் நுண்ணிய உழைப்பு அட்டகாசம். சஞ்சித்தின் பின்னணி இசை மிகச் சிறப்பாக ஒலிக்க, சஞ்சய் லீலா பன்சாலியின் பாடல்கள் தமிழில் கேட்க சுமாராகத்தான் இருக்கின்றன. ஹிந்தி பாடல்கள் ஏற்கனவே பிரபலமாகியிருக்கின்றன. போர் காட்சிகள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன, அவை இருந்து, இன்னும் கொஞ்சம் சுவாரசியம் இருந்திருந்தால் சிறப்பாக இருக்கும். ராஜபுத்திரர்களின் பெருமையைப் பேசும் நீள நீளமான வசனங்களோடு, அந்தப் பெருமையை பார்ப்பவர்கள் உணரும்படி காட்சிகள் இருந்திருக்கலாம். பேசிக்கொண்டேயிருந்தால் போதுமா? அரசன் ராகுல் ரத்தன் சிங்கின் அடுத்தடுத்த முடிவுகள் தவறென சிறு பிள்ளைகளுக்குக் கூடப் புரிந்து விடும். புராணக் கதை என்பதால் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மேலும் இப்படிப்பட்ட கொள்கைகளோடு தான் வாழ்ந்து வந்தார்கள் என்றால் அதில் கேள்வி கேட்க என்ன இருக்கிறது. இப்படி, ஒரு  படமாகப் பார்க்கும்போது எழும் பல கேள்விகளைத் தாண்டி இறுதியில் நிற்கும் கேள்வி, 'ராஜபுத்திரர்களையும் ராணி பத்மாவதியையும் பற்றி இவ்வளவு பெருமையாகக் காட்டும்  இந்தப் படத்தை இந்த இயக்கங்கள்  ஏன் எதிர்க்கின்றன?' என்பதுதான்.

பத்மாவத் - அழகு அதிகம், அழுத்தம் சற்று  குறைவு!

0 comments :

Post a Comment

 
Toggle Footer