Thursday, February 1, 2018

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவோ வெற்றிபெற்றால், நாட்டின் நிலைமை இன்னமும் மோசமடையும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஆகவே, நாட்டு மக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வாக்களித்து, தன்னுடைய கரங்களைப் பலப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி கோரியுள்ளார்.

ஊழல், மோசடி மற்றும் துஷ்பிரயோகங்கள் காரணமாகவே இந்நாடு மிக மோசமான நிலையை அடைந்திருக்கின்றது. இந்நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக நாட்டின் மீது உண்மையான அன்பு கொண்டவர்களும் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படக் கூடியவர்களும் கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் அவசியத் தேவை என்று வலியுறுத்திய ஜனாதிபதி, “ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது அவர்கள் என்னை விமர்சிப்பதோடு அதிதிகள் கூட்டணியை அமைத்து செயற்படவும் தொடங்கி விட்டனர்” என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“பிணைமுறி அறிக்கை தொடர்பாக நான் விடுத்த சவால் காரணமாக அவசர அவசரமாக பாராளுமன்றத்தில் அதனை விவாதிக்க எடுத்துள்ள போதிலும், அந்த குறுகிய நேர கால விவாதத்தின் மூலம் நாட்டு மக்கள் எவ்வளவு தூரம் வெற்றி பெறுவர் என்பதில் தெளிவில்லை.” எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளதாவது, “தேசியப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு நான் அர்ப்பணிப்போடு உள்ளேன். அதற்கு எல்லா தரப்பினரும் இதய சுத்தியோடு முழுமையாக ஒத்துழைப்பது அவசியம். இலங்கை வரலாற்றில் இந்நாட்டின் ஒரு அங்குலம் நிலத்தையும் எந்தவொரு ஆட்சியாளரும் வெளிநாட்டவருக்கு விற்பனை செய்யவில்லை. ஆனால் முன்னாள் ஜனாதிபதி துறைமுக நகருக்காக 240 ஏக்கர் காணியை விற்பனை செய்ததோடு, காலி முகத்திடலில் ஆறு ஏக்கர் காணியை உறுதி வழங்கி ஒரு சர்வதேச தனியார் ஹோட்டலுக்கு விற்பனை செய்துள்ளார்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer