Monday, February 5, 2018

பள்ளி நாட்களோ, கல்லூரி நாட்களோ, வேலை பார்க்கும் நாட்களோ, அல்லது திருமணத்திற்குப் பிறகோ இப்படி காதல் என்பது இடம், பொருள், காலம் தாண்டி அமையக்கூடிய ஒரு உணர்ச்சி. அதில் பலர் தோல்வியடைவதாகவும், சிலர் வெற்றியடைவதாகவும் பேசப்படுவதுதான் இப்போது நிலவும் நிலை.  வெற்றி அடையும் அந்த சிலரின் பட்டியலில் நாமும் இருக்கவேண்டும் என்ற போராட்டத்தை, தற்போதுள்ள நாகரீக உலகத்தில் எப்படி கையாண்டு வெற்றிகரமாக முடித்து ஏமாளி  ஆகாமல் இருக்க வேண்டும் என்ற அறிவுரையே இந்த 'ஏமாலி'. அந்த அறிவுரை சரியாக நம்மை வந்தடைந்ததா...?

சாம் ஜோன்ஸ், அதுல்யா ரவி இருவரும் காதலித்து வருகின்றனர். ஐ.டி.கம்பெனியில் வேலைபார்க்கும் இவர்களது காதலில் திடீரென ஏற்பட்ட ஊடல் முற்றி அதுவே இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடாக மாறி பிரிந்து விடுகின்றனர். பிறகு சோகத்தில் மூழ்கிய நாயகன் சாம் ஜோன்ஸ் அதுல்யா ரவிக்கு தொடர்ந்து வெவ்வேறு நம்பரில் இருந்து போன் மேல் போன் செய்கிறார். ஆனால் அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை. அனைத்து நம்பரையும் பிளாக் செய்ய அவர் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக நினைத்துக் கொள்ளும் சாம், ஆத்திரம் அடைந்து அவரைக் கொலை செய்ய முடிவெடுக்கிறார். எடுத்த முடிவை  சமுத்திரக்கனியிடம் சொல்லி ஐடியா கேட்கிறார் சாம். போலீசில் சிக்காமல் எப்படி கொலை செய்ய முடியும் என்பது குறித்து இருவரும் திட்டம் போடுகின்றனர். கொலை செய்தார்களா, மாட்டினார்களா,  அல்லது இருவரும் சேர்ந்தார்களா என்பது தான் இந்த 'ஏமாலி'. 

காதல் தோல்வியின் விரக்தியில் ஏற்படும் மன மாற்றங்களிலும், சராசரி ஐடி பையனின் கதாபாத்திரத்திலும் மிக நன்றாகவே நடித்திருக்கிறார் சாம் ஜோன்ஸ். படம் முழுவதும் அவருக்கு நான்கு கதாபாத்திரங்கள். ஒவ்வொரு பாத்திரத்திற்கு ஏற்றவாறு ஒவ்வொரு முக பாவனைகள் காட்ட முயன்றிருக்கிறார். அதுல்யா ரவிக்கு மிகவும் துணிச்சலான பெண் வேடம். தற்போதுள்ள நவீன உலகத்து பெண்களை  கண் முன் கொண்டு வர  'அதிகமாக' புகைப்பிடித்து நடித்திருக்கிறார். சமுத்திரக்கனி, இந்த முறை காதலுக்கான அட்வைசர்.  எப்போதும் போல் அவரது முதிர்ச்சியான நடிப்பை அழகாகவும், அழுத்தமாகவும் கண் முன் நிறுத்துகிறார். நாயகனை தப்பு செய்யவிடாமல் தடுக்க முயற்சித்து தோல்வியை தழுவும்போது அவர் கொடுக்கும் பாவனைகள் அற்புதம். பாலசரவணன் மற்றும் சிங்கம் புலி வரும் காட்சிகள் கலகலப்பாக இருக்கின்றன. 'ஏமாளி' என்றில்லாமல் 'ஏமாலி' என்ற பெயருக்குக் காரணம் கூறியிருக்கிறார்கள். பெரிய சுவாரசியம் இல்லை.

நான் லீனியர் வகை திரைக்கதையை கையாண்டிருக்கும் வி.இசட்.துரை ஒவ்வொரு காட்சியையும் கவர்ச்சியை முன்னிறுத்தியே நகர்த்தியிருக்கிறார். மேலும் நிகழ்கால நிகழ்வுகளில் இருக்கும் சுவாரஸ்யத்தை கற்பனை காட்சிகளில் கொடுக்கத்  தவறியிருக்கிறார். மாறி மாறி வெவ்வேறு கதாபாத்திரங்களுடன் காட்சிகள் நகர்வது சற்று குழப்பத்தை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது. சமூகத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையை உருவாக்கி இருந்தாலும், பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தும் திரைக்கதை அமையவில்லை. இருந்தாலும் தற்போதைய இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்களது தொழில்நுட்ப வாழ்க்கையில் காதல் அவர்களை எப்படி மாற்றுகிறது, அதை அவர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதை சமூகத்திற்கு தேவையான கருத்துடன் கதை சொல்லி, மேலும் காதல் தோல்விக்காக கொலையோ, தற்கொலையோ செய்துகொள்வது தவறு என்ற செய்தியைப் பதிய வைக்க முயன்றிருக்கிறார்.

சாம்.டி.ராஜின் இசையில் பின்னணி இசை மட்டும் கதைக்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. ஐ.ஜே.பிரகாஷ், எம். ரதீஷ் கண்ணாவின் ஒளிப்பதிவில் சில இடங்களில் காட்சிகள் கலர்புல்லாகவும், சில காட்சிகள் எதார்த்தமான ஒளிஅமைப்பிலும் இருக்கின்றன. குறிப்பாக சமுத்திரக்கனி, சிங்கம் புலி சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் நடைபெறும் நீண்ட விசாரணை காட்சியை ஒரே ஷாட்டில்  படமாக்கிய விதம் நன்று.

'ஏமாலி' விஷயம் நன்று, தாக்கம் குறைவு!

0 comments :

Post a Comment

 
Toggle Footer