Monday, February 12, 2018

கலகலப்பு படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை கையில் எடுத்திருக்கும் சுந்தர் சி இந்த முறை பல புதிய நட்சத்திரங்களைக் கொண்டு வட இந்தியாவில் கதைக்களத்தை உருவாக்கியுள்ளார். படம் பார்க்க வருபவர்களுக்கு காமெடி இனிப்பு அதிகமாக வைத்து ஃபுல் மீல்ஸ் படைப்பதையே விரும்புவார். லாஜிக் உப்பு எப்பொழுதும் குறைவாகத்தான் இருக்கும். இந்த முறை எப்படி?   

ஒரு அமைச்சர் ரெய்டுக்கு பயந்து தன்னுடைய அனைத்து விபரங்கள் இருக்கும் லேப்டாப்பை ராமதாசிடம் கொடுத்து காசிக்கு அனுப்பி விடுகிறார். பின்னர் பிரச்சனைகள் ஓய்ந்த தருவாயில் லேப்டாப்பை திரும்பப் பெற தன் ஆட்களான ராதா ரவியையும், ஜார்ஜையும் அனுப்புகிறார். தன்னுடைய பூர்வீக சொத்தைத் தேடி காசிக்குப் போகிறார் ஜெய். அதே காசியில் பழைய லாட்ஜ் ஒன்றை நடத்தி வருகிறார் ஜீவா. ஜெய் ஊரில் வந்திறங்கியவுடன் ஜீவா லாட்ஜில் தங்கி தன் பூர்விக சொத்தைத் தேடுகிறார். அதைக் கண்டுபிடிக்க உதவும் தாசில்தார் நிக்கி கல்ராணியுடன் காதலில் விழுகிறார். இன்னொருபுறம், ஜீவா தன் தங்கைக்கு திருமணம் நிச்சயம் செய்யும் மாப்பிளையின் தங்கையாக வரும் கேத்ரின் தெரஸாவுடன் காதல் வலையில் சிக்குகிறார். ஜீவா, ஜெய் இருவரையுமே சிவா முன்னர் ஏமாற்றியிருக்கிறார்....  இப்படியே சொல்லிக்கொண்டு போனால் கதை முடியவே முடியாது. இந்தப் படத்திற்கு நாம் கதையை எதிர்பார்த்தா போவோம்? அதனால், இந்த தளத்தில் இருபது காமெடி நடிகர்களை வைத்து நடத்தியிருக்கும் காமெடி கலாட்டா எப்படியென்று மட்டும் பார்ப்போம்.

சுந்தர்.சியின் டிரேட் மார்க் கதையமைப்பான ஒரு பொருளை தேடுவது, அது பல பேர் கை மாறுவது, ஆள்மாறாட்டம் போன்ற  விஷயங்களை வைத்துக்கொண்டு ரெண்டரை மணி நேரம் பொழுதுபோக்காக நகர்த்தும் வித்தையை கில்லாடித்தனமாக இதிலும் கையாண்டிருக்கிறார். அதில் இந்த தடவையும் ஜெயித்துக் காட்டியிருக்கிறார் என்றே சொல்லலாம். கலகலப்பு முதல் பாகத்திற்கும், இந்த இரண்டாம் பாகத்திற்கும் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை. அதே பாணியிலேயே வேறொரு நட்சத்திரப்பட்டாளத்தை வைத்துக்கொண்டு முடிந்தளவுக்கு சிரிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக, சந்தானம் இல்லாத குறையை யோகிபாபு, ரோபோ சங்கர், விடிவி கணேஷ், மனோபாலா, சிவா, ஜார்ஜ், ராமதாஸ், ராதாரவி, சிங்கமுத்து போன்றவர்களை வைத்துக்கொண்டு மறக்கடிக்கச் செய்திருக்கிறார் சுந்தர்.சி.

ஜீவா, ஜெய் இருவரின் கேரியரிலும் நிச்சயமாக இது ஒரு முக்கியமான படம். காரணம் கதாபாத்திரம், நடிப்பு என்றெல்லாம் விளக்க பெரிதாய் எதுவுமில்லை. இருவருக்குமே இந்த சமயத்தில் ஒரு கட்டாய வெற்றி தேவைப்படுகிறது. அதனை இப்படம் கண்டிப்பாக நிறைவேற்றும் என நம்பலாம். அவரவர் வேலையை கச்சிதமாக செய்து முடித்துள்ளனர். கேத்ரின் தெரஸாவும் ,நிக்கி கல்ராணியும் இளமைத் துள்ளலாக கவர்ச்சியை அள்ளி வீசியிருக்கிறார்கள். ஹிப் ஹாப் தமிழாவின் பாடல்களில் 'ஓகே ஓகே' மற்றும் 'ஒரு குச்சி ஒரு குல்ஃபி' பாடல்கள் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் நன்றாக உள்ளது. யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் படத்தில் வரும் கதாபாத்திரங்களும் சரி, படமும் சரி, மிகவும் வண்ணமயமாக உள்ளது.

படத்தின் நீளமும், போகப் போக முளைத்துக் கொண்டே போகும் கிளைக் கதைகளும் தான் குறை. மற்றபடி, காசியை இவ்வளவு அழகாகவும், கலகலப்பாகவும் காட்டியதற்காகவே கலகலப்பு-2 விற்கு தாராளமாக விசிட் அடிக்கலாம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer