சினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சினிமா திரையரங்குகளில் படம் திரையிடுவதற்கு முன்பு தேசிய கீதத்தை ஒலிக்கவிட வேண்டும் என்றும், தேசிய கீதம் முடியும் வரை பார்வையாளர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவில் உள்ளபடி படம் பார்க்க வரும் மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க முடியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதையொட்டி இந்த விவகாரத்தில் மத்திய அரசு உட்குழு ஒன்றை அமைத்து தேவையான விதிமுறைகளை உருவாக்க உச்ச நீதிமன்றம் அப்போது உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் அமைச்சகத்தின் உட்குழு சினிமா திரையரங்கில் தேசிய கீதம் ஒலிப்பது தொடர்பாக புதிய விதிமுறைகளை வகுக்க பல்வேறு அம்சங்களை பரிசீலிக்க வேண்டி இருப்பதால் இக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 6 மாதங்கள் அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, தேசிய கீதம் கட்டாயம் என்ற உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரின் அமர்வில் நடைபெற்றது.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் இது தொடர்பாக அமைக்கப்பட்ட 12 அதிகாரிகள் அடங்கிய குழு 6 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யும். எனவே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதியிட்ட உத்தரவில் திருத்தம் செய்யப்படுகிறது என்றும், திரையரங்குகளில் படங்கள் திரையிடுவதற்கு முன்பு தேசிய கீதம் இசைக்கப்படுவது கட்டாயம் அல்ல என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.
Wednesday, January 10, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment