Thursday, January 11, 2018

‘விரட்டுவதற்குள் கேட்டுவிட வேண்டும்’ என்கிற அவசரத்துடனேயே சாமி கும்பிட வேண்டியிருக்கிறது. ‘ஜருகண்டி’யாகட்டும்... ‘சேவிச்சாச்சுன்னா கௌம்புங்கோ’வாகட்டும்... பக்தனின் வேண்டுகோள் பட்டியலை வெகுவாகவே சுருக்கிவிடுகின்றன விரட்டல்கள்.
இவ்வளவு சிரமங்களுக்கு இடையேயும் நான் என் ‘ஸ்தல யாத்திரை’யை வருடத்திற்கு மூன்று முறையாவது செய்துவிடுகிறேன்.

சொந்த ஊரான மயிலாடுதுறை போனால், திருவாரூர் கும்பகோணத்தை சுற்றி சுற்றி வந்து ஆலய தரிசனம் நிகழ்த்திவிடுவேன். மனைவி ஊரான சிவகாசி போனால், நெல்லை, திருச்செந்தூர், மதுரை, பழனி என்று நிகழ்ச்சி நிரல் கச்சிதம். அப்படிதான் இரண்டு முறை ஸ்ரீவில்லிபுதூர் சென்றிருக்கிறேன். சூடிக்கொடுத்த சுடர்க் கொடியான ஆண்டாளை தரிசிக்க வேண்டும் என்கிற ஆசை பன்நெடுங்காலமாக இருந்தாலும், வாய்த்தது என்னவோ சில மாதங்களுக்கு முன்புதான். அதற்கு முன்பு கூட ஒருமுறை போயிருந்தேன். ‘நடை சாத்தியாச்சு. அப்புறம் வாங்கோ...’ என்றார்கள். முதலில் ஆண்டாள் சன்னதி இருக்கும் வாயிலில் நுழையாமல், பெருமாள் வீற்றிருக்கும் வாயிலுக்குள் நுழைந்து அவரை வணங்கிவிட்டு பின்பு ஆண்டாள் சன்னதிக்கு வந்தது குற்றமோ? முழுசாக ஒரு வருஷம் அந்த கவலை இருந்தது.

கடந்த முறை போயிருந்தபோது, நான்கு வீதிகளில் ஏதோவொரு வீதியில் காரை நிறுத்தாமல், ‘எந்த பக்கம் போனா ஆண்டாள் சன்னதி முதல்ல வரும்?’ என்று கேட்டுக் கொண்டுபோய் நிறுத்தினேன்.

கோவிலுக்குள் நுழைகிற போதுதான் அவரை பார்த்தேன். பரத நாட்டியக் கலைஞரும் என் நெடுநாளைய நண்பருமான ஜாகீர் உசேன். வெள்ளை வெளெரென வேஷ்டி அங்கவஸ்திரம் அணிந்து நின்று கொண்டிருந்தார். இவரே ஆண்டாள் வேஷம் கட்டி ஆடுகிற பரத நாட்டியம் உலக பிரசித்தம்.

‘அடடா நீங்களா?’

‘ அடடா... நீங்க எப்படி இங்க?’

இப்படி மாறி மாறி கேட்டதில், ஜாகீர் சொன்னது இப்போதும் என் காதில் ஒலிக்கிறது. ‘மாதத்திற்கு ஒருமுறையாவது அம்மாவை பார்க்கலேன்னா எனக்கு தூக்கம் வராது’ என்றார். அவர் அம்மா என்று சொன்னது சாட்சாத் ஆண்டாளைதான்! கடந்த முறை கதவை சாத்திக் கொண்டு முகம் காட்ட மறுத்த ஆண்டாள் சன்னதியை நோக்கி நடந்தேன் ஜாகிர் உசேனுடன். ‘கொஞ்சம் நில்லுங்க’ என்றார். கோவிலின் எல்லா சுவர்களும் ஜாகீரை அன்போடு நோக்குகிற அளவுக்கு செல்வாக்காக இருந்தார் மனுஷன். நான் நின்றேன். ஒரு யானை என் கழுத்தில் மாலையிட்டது. அது ஜாகீரின் அன்பு.

அதற்கப்புறம் என்னை அவரது விருந்தாளியாக பார்க்க ஆரம்பித்தது சன்னதி. ஆண்டாள் வெகு அருகில் தெரிகிற தொலைவில் நிற்க வைத்தார் ஜாகீர். கருவறைக்குள்ளிருந்து ஒரு மாலையை எடுத்து வந்து என் கழுத்தில் அணிவித்தார் ஐயர். என் ஒரு வருட வருத்தத்தை ஒரு நொடியில் போக்கிய ஜாகீரும், அந்த நிமிஷங்களும் ஆண்டாளின் அருள்மிகு தோற்றமும்... எப்பவோ எழுதி வைத்து நிகழ்ந்தவை போலிருந்தன.

கடந்த இரண்டு நாட்களாக நடைபெறுகிற சர்ச்சைகள் மனசை என்னவோ செய்கின்றன. இப்போது எந்த நாட்டில் ஆண்டாள் வேஷம் தரித்து பரதம் ஆடிக் கொண்டிருக்கிறாரோ ஜாகீர்? இந்த சர்ச்சைகள் அவரை என்ன பாடு படுத்தி வருகிறதோ?

தொலைக்காட்சிகளோ, இணையதளங்களோ புலப்படாத தொலைவில் அவர் இருக்கக் கடவட்டும். ஆண்டாள் ஆசி... !

- நன்றி : ஆர்.எஸ்.அந்தணன்

சினிமா செய்திகள், விமர்சனங்கள் எழுதும் அந்தணனின்  பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் எழுதியிருந்த சமகால அனுபவப் பதிவொன்றின் அழகியல் கருதி, அவருக்கான நன்றிகளுடன் இங்கே மீள்பதிவு செய்துள்ளோம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer