Sunday, January 14, 2018

“திமிறும் காளையின் திமிளைப் பற்றிய காளையவன், அதன் கொம்பையும் பிடிக்கிறான். அந்தக் காளையோ சுழன்று அவனைத் தன்னிலிருந்து கழற்றிவிட முயற்சிக்கிறது. திமிறும் அந்தக் காளையை இப்படித் திணறச் செய்கிறானே... அவனுடைய பிடிக்குள் நான் அகப்பட்டால், அந்த வலியின் இன்பம் எப்படியிருக்கும்” என்று சங்க கால மங்கையர் கற்பனை சுகத்தில் மாய்ந்து கிடந்ததாக, அகநானூற்றுப் பாடல் வரிகள் கூறுகின்றன.

ஜல்லிக்கட்டு விளையாட்டு, தமிழர்களின் வீரவிளையாட்டு என்று ஈராயிரம் ஆண்டுகளாக இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘முறத்தினாலே புலியை துறத்தினாளே’ என்று தமிழ்ப் பெண்களின் வீரத்தையே வியந்து போற்றியிருக்கிறது புறநானூறு.

‘காளையை அடக்கி வா, நான் உனக்கு அடங்குகிறேன்’ என்று தமிழ்ப் பெண்கள் காளையர்களுக்கு கட்டளையிட்ட காலம் இருந்ததாகவும் அறிகிறோம்.

பாரம்பரியமாக விளையாடப்பட்ட இந்த வீர விளையாட்டுக்கு ஆபத்து வந்தபோது, தமிழகமே பொங்கி எழுந்ததை பார்க்க முடிந்தது.

தமிழகத்தில் எத்தனை விதமான காளை விளையாட்டுகள் இருக்கின்றன தெரியுமா?

ஏறுதழுவுதல் என்ற பெயரில் காலம்காலமாக தொடர்ந்துவந்த ஜல்லிக்கட்டு தமிழக கிராமப்புறங் களில் எத்தனையோ வடிவங்களை எடு¢த்திருக்கிறது.

மாட்டுப் பொங்கலன்று வீடுகளில் வளர்க்கும் உழவு மாடுகள், தண்ணீர் இறைக்கும் மாடுகள், பால் மாடுகள் கன்றுகள் அனைத்தையும் ஒரு தொழுவத்தில் அடைத்து வைத்து மாலை அலங்காரம் செய்து மொத்தமாக அவிழ்த்து விடுவார்கள்.

அந்த மாடுகள் அவரவர் வீடுகளைத் தேடி வந்து சேருவதே தனி அழகுதான்.

அடுத்து, வைக்கோற்பிரி மஞ்சுவிரட்டு என்று ஒன்று உண்டு.........

அறுவடை முடிந்த நாளில் வாட்டசாட்டமான திமிறும் காளைகளின் கழுத்தில் கனமாக வைக்கோற்பிரியைக் கட்டி அறுவடை முடிந்த வயலில் விரட்டி அதன் ஆற்றலையும் தனது ஆற்றலையும் நிரூபிக்க தமிழன் முனைந்தான்........

பெரும்பாலும் நடவுக்கு முன் பரம்படிக்க பயன்படும் பெரிய காளை மாடுகளே இந்த விளையாட்டில் பயன்படுத்தப்படும். இந்த மாட்டை உஷ் காட்டி விளையாடுவதே தனிப் பொழுது போக்குதான்.

அந்தக் காளை தனது கழுத்தில் தொங்கவிடப்பட்ட கனமான வைக்கோற்பிரியை தாங்கிக்கொண்டு, தன்னை யாரும் நெருங்காத வகையில் தப்பிப்பதை பெருமையாகவே கருதினர்.......

அடுத்தது, வாடிவாசல் மஞ்சுவிரட்டு.........

இதுதான் பெரும்பாலான ஊர்களில் இந்த விளையாட்டுதான் நடைமுறையில் இருக்கிறது. கோவில் காளைகளையும், தனியார் வளர்க்கும் பொலி காளைகளையும் ஒரு மைதானத்தில் அடைத்துவைத்து, சிறு வாசல் வழியாக திறந்துவிடும் விளையாட்டாகும். இந்த விளையாட் டில் குறிப்பிட்ட எல்லைக்குள் காளையை அதன் திமிளைப் பற்றி அடக்குகிறவன் வெற்றி பெற்றவன் என அறிவிக்கப்படுவான்.

இந்த விளையாட்டுகளின் இன்னொரு பகுதியாக, வட மஞ்சுவிரட்டு எனப்படும் மைதான விளையாட்டு. இந்த விளையாட்டில் பார்வையாளர்களுக்கு எந்த ஆபத்தும் இருக்காது.

வட்ட வடிவமான மைதானத்தின் நடுவில் அறையப்பட்ட தூணில் காளை கட்டப்பட்டிருக்கும். அந்தக் காளையை குறிப்பிட்ட நேரத்தில் ஏழு அல்லது ஒன்பது அல்லது பதினோரு பேர் கொண்ட குழு அடக்க வேண்டும்.

இன்னொரு விளையாட்டும் இருக்கிறது. அது சிராவயல் என்ற ஊரில் மட்டுமே நடக்கிறது. இங்கு, காளைகளின் உரிமையாளர்கள் தங்கள் காளைகளை தாங்கள் விரும்பும் இடத்தில் அவிழ்த்து விடுவார்கள். இது பாதுகாப்பற்ற விளையாட்டு. ஆனால், பரபரப்பான விளையாட்டு என பேசப்படுவதுண்டு.

இந்த விளையாட்டுகளுக்கு எப்படி தடை வந்தது தெரியுமா?

2006ம் ஆண்டு மார்ச் மாதம். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ரேக்ளா ரேஸ் நடத்த அனுமதி கேட்டு சாஜி செல்லன் என்ற வழக்கறிஞர் ஒரு ரிட்பெட்டிஷனை தாக்கல் செய்தார். இந்த பெட்டிஷனை விசாரித்த நீதிபதி ஆர்.பானுமதி அனுமதி மறுத்து ஒரு தீர்ப்பை வழங்கினார்.

1996ம் ஆண்டு கோவா மாநிலத்தில் நடைமுறையிலிருந்த திரியோ என்ற மாட்டுச் சண்டை போட்டியை அந்த மாநில நீதிமன்றம் தடைசெய்ததை மேற்கோள் காட்டி “ரேக்ளா ரேஸுக்கும், ஜல்லிக்கட்டு, எருமைச்சண்டை, ஆகியவற்றிற்கும் தடை விதிக்கிறேன்” என்று அவர் தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.

இந்த தீர்ப்பில் பாரம்பரியம், புராதன நடைமுறைகள், மத நம்பிக்கைகள் என எல்லா வகையான சாதகமான காரணங்களையும் நீதிபதி பானுமதி ஒதுக்கித் தள்ளினார். அத்துடன் ஜல்லிக்கட்டு என்பது வேடிக்கையான விளையாட்டோ, வீரமான விளையாட்டோ கிடையாது என்றும் கூறியிருந்தார்.

நீதிபதி பானுமதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. பானுமதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை பெறப்பட்டு அதனடிப்படையில் 2007 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.

திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தவரை இந்த விளையாட்டுக்கு நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று தொடர்ச்சியாக நடத்தப்பட்டது. பின்னர் 2011ல் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னரும், 2013ம் ஆண்டு ஜனவரி வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.

அதன்பிறகு, ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதில் அக்கறை காட்டாததால், 2015 ஆம் ஆண்டும், 2016 ஆம் ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை.

இந்நிலையில்தான் 2016 செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா ஆபத்தான நிலையில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை குறித்த தகவல்கள் மர்மமாகவே இருந்தன. 75 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்த தாக அறிவிக்கப்பட்டது.

அதன்பிறகு, சிலநாட்களில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த ஜல்லிக்கட்டு வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது. நல்ல தீர்ப்பு வரும் என்று பாஜக தலைவர்கள் அடிக்கடி கூறிவந்தார்கள். ஆனால் ஜல்லிக்கட்டிற்கான நாள் நெருங்கிய நிலையில் தீர்ப்பை தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. 2017லிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்பது சந்தேகமாகவே இருந்தது.

ஜல்லிக்கட்டு நடக்காது என்பது உறுதியா னவுடன் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் போராட்ட மனநிலைக்குத் தள்ளப்பட்டனர். ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் மையப் புள்ளியாக உலகம் முழுவதும் அறியப்பட்ட அலங்காநல்லூரில் பதட்டம் நிலவியது. 2017 ஜனவரி 16ம் தேதி மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் விடிந்தது.

ஜல்லிக்கட்டு நடைபெறும் தினத்தன்று காலை அலங்காநல்லூர் கிராமத்தின் கோவில் காளைகள் அழைத்துவரப்பட்டன. காளைகளுக்கு பூஜை முடித்தவுடன் திடீரென கயிறோடு மாடுகளை விரட்டிவிட்டனர்.

கூடியிருந்த இளைஞர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் போலீஸாரை உசார்படுத்தியது. ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த நிலையில் அவர்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. அலங்காநல்லூரில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்ட செய்தி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் வேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக இணையத் தொடங்கினர். சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தன்னெழுச்சியாகத் திரண்டனர். கைது செய்யப்பட்ட மாணவர்களையும் இளைஞர்களையும் விடுதலை செய்யும்படி முழக்கம் எழுப்பினர்.

அலங்காநல்லூரிலும் கிராம மக்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். இரவு முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட போராட்டம், ஜல்லிக்கட்டுக்கு அவசரச்சட்டம் பிறப்பிக்கும்வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜனவரி 21ம் தேதி சனிக்கிழமை ஆளுநர் கையெழுத்துடன்  ஜல்லிக்கட்டு அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. போராட்டக் காரர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விட்டதால் போராட்டத்தை முடித்துக் கொள்ளும்படி கூறப்பட்டது. ஆனால் போராட்டக்காரர்கள் இவற்றை ஏற்கவில்லை.

23ம் தேதி சட்டசபை கூட வேண்டும். அதற்கு முன்னதாக அதிகாலையிலேயே மெரினாவில் இரவு முழுவதும் தங்கி இருந்த போராட்டக் காரர்களை சுற்றி வளைத்து போராட்டத்தை முடித்துக் கொண்டு வெளியேறும்படி போலீசார் வற்புறுத்தினர்.

ஊடகங்களின் நேரலையை நிறுத்தும்படி அரசு உத்தரவிட்ட??. அதன்பிறகு மெரினா கடற் கரையில் என்ன நடந்தது என்பது முழுமையாக மறைக்கப்பட்டது.

அதேசமயம் போலீசார் மெரினாவைச் சுற்றி இருந்த மீனவர் குப்பங்களிலும் திருவல்லிக் கேணியிலும் காட்டுமிராண்டித்தனமான வேட்டையைத் தொடங்கினர். அவர்களுடைய அட்டூழியங்கள் செல்போன் கேமராக்கள் மூலம் படம்பிடிக்கப்பட்டு அவை ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டன.

போலீசாரே வாகனங்களுக்குத் தீ வைப்பதும், குடிசையைக் கொளுத்துவதும், சாலையோரங் களிலும் வீதி ஓரங்களிலும் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை கீழே தள்ளிவிட்டு அடித்து நொறுக்குவதும் என்று மிகக்கொடூரமான தாக்குதல்கள் படம்பிடிக்கப்பட்டு ஊடகங்களில் உலா வந்தன.

போலீசாரின் இந்தத் தாக்குதல் குறித்து முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இவ்வளவு கலவரங்களுக்கு மத்தியிலும் மாநில அரசு ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழாவை நடத்தி முடித்தது. ஆனால் அந்த விழாவில் குடிமக்கள்தான் கலந்து கொள்ளவில்லை.

அரசுக்கு எதிரான மிகப்பெரிய எழுச்சி அரசப்பயங்கரவாதம் மூலம் அடக்கி ஒடுக்கப்பட்டது. ஆனால் அந்த எழுச்சி நீருபூத்த நெருப்பாக நீடித்திருக்கும் என்பது மட்டும் உறுதி என்றார்கள்.

ஆனால், அதற்கு பிறகு விவசாயிகளைப் பாதிக்கும் மீத்தேன் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்த போராட்டம், நெடுவாசலில் நடைபெற்ற ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களுக்கு ஆதரவாக தமிழகம் கொந்தளிக்கவில்லை.

இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாக மெரினாவில் கூடுவோம் என்று ஏதேனும் முகநூல் செய்தியைப் பார்த்தாலே பதறிப்போய் போலிஸார் குவிக்கப்பட்டனர்.

தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் மத்திய அரசின் நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக அரசு தவறியதால் அனிதா என்ற ஏழை மாணவி தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவத்தின் போதும் மிகப்பெரிய எழுச்சி உருவானது. ஆனால், மெரினா உள்ளிட்ட தமிழகத்தின் பெரிய திடல்கள் அனைத்தும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

இனி தமிழகத்தில் எந்த பிரச்சனைக்கும் தொடர்போராட்டங்கள் நடத்த முடியாது என்ற நிலையை அரசாங்கம் உருவாக்கி இருக்கிறது. அப்படி எதுவும் இனி நடைபெறாது என்பதே உண்மையும் கூட.

0 comments :

Post a Comment

 
Toggle Footer