Tuesday, January 9, 2018

கண் விழித்தாலும் கலைந்து போகாத கனவுகளுக்கு ஒரு ஸ்பெஷல் நோட் போட்டால் அதுதான் ‘விதி மதி உல்டா’! தலைப்பில் மட்டும் உப்புமா படத்தின் ஷேட். நிஜத்தில்? நிமிஷத்துக்கு நிமிஷம் ‘அட’ போட வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் விஜய் பாலாஜி!

கனவே நிஜமானால்? அதுவும் கெட்ட கனவு நிஜமானால்? துல்லியமாக திரைக்கதை அமைத்து, சுவாரஸ்யமாக பந்தி பரிமாறியிருக்கிறார் வி.பா!

வீட்டு புரோக்கருக்கு தர வேண்டிய கமிஷனை தராமல் ஏமாற்றுகிறார் ரமீஸ்ராஜாவின் அப்பா. பதிலுக்கு ரமீசை கடத்த திட்டம் போடுகிறது புரோக்கர் அண் பிரண்ட்ஸ் குழு. இன்னொரு பக்கம் ஹீரோயின் ஜனனி அய்யரை கடத்துகிறது வேறொரு கும்பல். இரண்டு கும்பலும் சந்திக்கும் இடத்தில் ஒரு கொலை நிகழ, கொலையின் தொடர்ச்சியாக ரமீஸ் ராஜாவின் குடும்பமே கொல்லப்படுகிறது.

செகன்ட் ஆஃப் ஹீரோவின் பழிவாங்கல் கதை போலிருக்கு என்று அசுவாரஸ்யமாக சாய்ந்தால், அட... அவ்வளவும் கனவு. மறுநாள் அதே கனவில் பார்த்த ஆட்களை நிஜத்திலும் பார்க்கிறார் ரமீஸ். மேற்படி கனவு செ.மீ. செ.மீட்டராக நனவாகிக் கொண்டிருக்க... ஐயோ, அப்பா அம்மாவை காப்பாத்தணுமே என்று களத்தில் இறங்கும் ரமீஸ் என்ன செய்தார். விறுவிறுப்பான கிளைமாக்ஸ்!

ரமீஸ் ராஜாவுக்கு சாஃப்ட் பேஸ்கட்டு. அதற்கேற்ற கதையைதான் தொட்டிருக்கிறார். நானே ஹீரோ என்ற மிதப்பில் வில்லன்களை போட்டு புரட்டியெடுக்காமல், ஸ்மார்ட்டாக சரண்டர் ஆவதெல்லாம் எதார்த்தம். இதே போன்ற ‘சம்திங் நியூ’ கான்செப்டுகளோடு வந்தால், கோடம்பாக்கத்தின் ஹீரோ பஞ்சத்தை போக்கிய புண்ணியம் நிச்சயம்.

ஜனனி அய்யருக்கு குளியல் காட்சி இருக்கிறது. ஆனால் கவர்ச்சி இல்லை. டூயட் இருக்கிறது. அதற்காக விழுந்து புரளல் இல்லை. முடிந்தரை டீசன்ட் டீசன்ட் என்கிற இந்த ‘அட்டம்ட்’ தியேட்டருக்கு குடும்பங்களை வரவழைக்கக் கூடும்.

எல்லா படங்களிலும் ஓவர் ஆக்டிங் செய்து உதறல் எடுக்க வைக்கும் சென்ட்ராயன், இந்தப்படத்தில் அடக்கி வாசித்திருக்கிறார். அதையே தொடருங்க தம்பி...

இரண்டு வில்லன் குழு. இரண்டிலும் இடம் பெற்றவர்கள் முறைத்துக் கொண்டே காமெடி பண்ணுகிறார்கள். மனம் விட்டு சிரிக்க வைக்கிறது பர்பாமென்ஸ்.

கருணாகரனுக்கு அதிகம் ஸ்கோப் இல்லை. ஆனால் கிடைத்த ‘கேப்’பில் பிரியாணி கிண்டுகிறார். அதுவும் சுவை குறையாமல்.

மற்றொரு டெரர் வில்லன் டேனியல் பாலாஜி. அவரது முறைப்புக்கே ஒரு முறை உச்சா போய்விடலாம்! தனது தம்பிக்காக உயிரையே எடுக்கும்(?) அவர் கடைசிவரை அந்த பாசமலர் வேஷத்தை கொஞ்சம் கூட தளர்த்திக் கொள்ளாதது அருமை.

அஸ்வின் விநாயமூர்த்தியின் இசையில் கானா பாலா பாடிய அந்தப்பாடல் துள்ளல்...

அதிகம் பாராட்டப்பட வேண்டியவர் எடிட்டர்தான். விட்டால் இன்னொரு 12 பி ஆகியிருக்க வேண்டிய படம். குழப்பாமல் சிதைக்காமல் சொல்லியிருக்கிறார்!

தலைப்பை தவிர எல்லாமே பக்கா!

0 comments :

Post a Comment

 
Toggle Footer