Sunday, January 7, 2018

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட, பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நேற்று சனிக்கிழமை மூன்றரை ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 இலட்சம் அபராதமும் விதித்தது.

பீகாரில் கடந்த 1990ஆம் ஆண்டு முதல் 1997ஆம் ஆண்டு வரை முதல்வராக இருந்தவர் லாலு பிரசாத் யாதவ். இவரது ஆட்சிக் காலத்தில், கால்நடைத் துறையில் மாட்டுத் தீவனம் வாங்கியதில் மிகப் பெரிய ஊழல் நடந்தது. இதில் முதல்வராக இருந்த லாலு மற்றும் காங்கிரசின் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா, அரசு உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு தொடர்பு இருந்ததாக 1996ஆம் ஆண்டில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக, சிபிஐ விசாரணை நடத்தி லாலு மீது 5 ஊழல் வழக்குகளை பதிவு செய்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கால்நடை தீவன ஊழல் வழக்குகள் அனைத்தும், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இதில், சாய்பாஷா கருவூலத்தில் இருந்து ரூ.37.5 கோடி பணம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் கடந்த 2013இல் தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது, லாலு மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. ஜெகன்நாத் மிஸ்ராவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்ட லாலுவுக்கு 2013இல் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சிறை தண்டனை பெற்றதால் லாலுவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டு, 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.

ஜாமீனில் வந்த லாலு, தன் மீதான மற்ற வழக்குகளுக்கு தடை கோரி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஒரு வழக்கில் தண்டனை பெற்றதால், லாலு மீதான எஞ்சிய வழக்குகளை விசாரிக்கத் தேவையில்லை என தடை விதித்து 2014இல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற உத்தரவை இரத்து செய்த உச்ச நீதிமன்றம், லாலு மீதான எஞ்சிய 4 வழக்கையும் விசாரிக்க சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்துக்கு அனுமதி வழங்கியது.

அதன்படி, 1991 முதல் 1994ஆம் ஆண்டு காலகட்டத்தில் தியோகர் மாவட்ட கருவூலத்தில் ரூ.89.27 லட்சம் முறைகேடாக எடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 2வது தீவன ஊழல் வழக்கு குறித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இந்த வழக்கில், 1997ஆம் ஆண்டு லாலு, ஜெகன்நாத் மிஸ்ரா உட்பட 34 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் போது 11 பேர் இறந்தனர். ஒருவர் அப்ரூவராக மாறி குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 13ஆம் தேதி இறுதிக்கட்ட விசாரணை முடிந்து, தீர்ப்பை நீதிபதி சிவ்பால் சிங் கடந்த 23ஆம் தேதி அறிவித்தார். அதில், லாலு உட்பட 16 பேர் குற்றவாளிகளாக அறிவித்து அவர் உத்தரவிட்டார். ஜெகன்நாத் மிஸ்ரா உட்பட 6 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர்களை வழக்கிலிருந்து விடுவித்தார். லாலு உட்பட 16 பேர் மீதான தண்டனை விவரம் வரும் ஜனவரி 3ஆம் தேதி வெளியிடுவதாக நீதிபதி சிவ்பால் கூறினார். இதையடுத்து லாலுவை போலீசார் கைது செய்து ராஞ்சியில் உள்ள பிஸ்ரா முண்டா சிறையில் அடைத்தனர்.

லாலுவின் தண்டனை அறிவிப்பு பல்வேறு காரணங்களால், இந்த வாரத்தில் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. லாலு பிரசாத் யாதவின் தண்டனை மீதான விவாதம் கடந்த 2 நாட்களாக நடந்து வந்தது. தண்டனை குறித்த விவாதம் நேற்று முடிவடைந்ததால், தண்டனையை வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி சிவ்பால் சிங் அறிவித்தார். லாலுவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும், ஊழல் தொடர்பான 2 குற்றங்களுக்கு தலா ரூ.5 இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்த தவறினால், லாலு மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதிபதி அறிவித்தார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer