முன்பெல்லாம் வித்தியாசமான முயற்சியாக ஒரு தமிழ்ப் படம் வெளிவந்தால், அது எந்த கொரிய, ஈரானிய, அல்லது ஹாலிவுட் படத்திலிருந்து 'இன்ஸ்பையர்' ஆன படமென்று தீவிர சினிமா ஆர்வலர்கள், கஷ்டப்பட்டு தேடுவார்கள். சமீப காலமாக சில இயக்குனர்கள், தங்களை பாதித்த படங்கள், மற்றும் எந்தப் படங்களின் பாதிப்பில் படத்தை எடுத்திருக்கிறாரோ அந்தப் படங்களின் பட்டியலை டைட்டிலில் போடும் நல்ல பழக்கத்தைக் கடைபிடிக்கின்றனர். இது நல்ல விஷயம் என்றாலும், நேர்மையாக 'இன்ஸ்பிரேஷன்' பட்டியலை போட்டுவிட்டு, படம் முழுவதையும் அந்தப் படங்களில் இருந்தே எடுப்பது ஆரோக்கியமானது இல்லை என்றே தோன்றுகிறது. பலூன் படத்திலும் சில பல ஆங்கில திரைப்படங்களின் பெயர்களை 'இன்ஸ்பிரேஷ'னாக போட்டு, சில பல காட்சிகளை 'இன்ஸ்பையர்' ஆகி எடுத்திருக்கிறார் இயக்குனர் சினிஷ்.
தமிழ்த் திரையுலகின் ஆயிரக்கணக்கான பேய் படங்களின் அதே கதையமைப்பு தான் 'பலூனு'க்கும். ஒரு திகில் பங்களா, அங்கு வரும் நாயகன், நாயகி, நகைச்சுவை நண்பர்கள். முதல் பாதி பயமுறுத்தல், இரண்டாம் பாதி பேய்க்கான காரணக்கதை. திரைப்பட இயக்குனராக முயற்சி செய்யும் ஜெய், தன் படத்தின் கதையை எழுத மனைவி அஞ்சலி, நண்பர்கள் யோகி பாபு, கார்த்திக் யோகி மற்றும் தன் அண்ணன் மகனுடன் அந்த மலை பங்களாவுக்கு செல்கிறார். அருகிலுள்ள ஒரு சிறிய வீட்டுக்கு இவர்கள் சென்று வந்ததிலிருந்து திகில் தொடங்குகிறது. பயமுறுத்தும் பேய்கள் யார், ஜெய்க்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பு, எப்படி சமாளித்தார்கள் என்பது தான் படம். கிட்டத்தட்ட ஒரே கதைகளாக இருந்தாலும் திகில் படங்களின் வெற்றி, அவை எந்த அளவுக்கு நம்மை பயமுறுத்துகின்றன என்பதையும், பின்னர் வரும் பின்கதை எந்த அளவுக்கு நம்மை நெகிழ வைக்கிறது என்பதிலும் தான் இருக்கிறது. முதல் பாதியில் ஓரளவு நனறாகவே பயமுறுத்தியுள்ள பலூன், இரண்டாம் பாதியில் நம்மை பாதிக்கத் தவறுவது தான் சறுக்கல். ஜெய்யின் ஃபிளாஷ்பேக் இரண்டாம் பாதியின் இரண்டாம் பாதியில் தான் வருகிறது. ஏன் அவ்வளவு தாமதம் இயக்குனரே? தாமதமாக எந்த சலனத்தையும் ஏற்படுத்தாமல் சட்டென்று முடிகிறது.
பல படங்களில் தேவையான விஷயங்கள் குறைவாக இருப்பது படத்திற்கு எதிராக அமையும். சில படங்களில் தேவையில்லாத விஷயங்கள் அதிகமாக இருப்பது படத்திற்கு எதிராக அமையும். பலூன் இரண்டாம் வகை. தயாரிப்பாளர்களுக்கு அரசியல்வாதிகளால் ஏற்படும் பிரச்சனை, தல-தளபதி ரசிகர்கள் சண்டை என பல எக்ஸ்ட்ரா லக்கேஜுகள். திடீரென்று ஜெய், தல-தளபதி ரசிகர்கள் சண்டை பற்றி மிக சீரியசாகப் பேசி நம்மை குழப்புகிறார் (அவர் ஒரு சினிமாக்காரர் என்றாலும்).
ஜெய், அஞ்சலி, ஜனனி என அனைவரும் அழுத்தமில்லாமல் கடக்க, படம் முழுவதும் கலக்குபவர்கள் யோகி பாபு, கார்த்திக் யோகி, மற்றும் அந்தச் சுட்டிச் சிறுவன். ஒவ்வொரு வசனத்துக்கும் யோகி பாபு கொடுக்கும் கௌண்ட்டர்கள் கொஞ்சம் ஓவர்டோஸ் என்றாலும் பெரும்பாலும் சிரிக்க வைக்கின்றன. யோகி பாபுவின் டீ-ஷர்ட்டுகளும் கூட சிரிக்க வைக்கும் வகையில் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர். கதை, திரைக்கதையில் விட்டதை வசனத்தில் ஈடு செய்திருக்கிறார். "கமல்ஹாசன் பூஜை போட்டாருன்றதே பிரச்சனை தான...", "இருட்டுல என்ன பண்ற? ம்ம்ம்...நீட் எக்ஸாம் எழுதப் போனேன்" இப்படி சமகால சரவெடிகள் கலந்த வசனங்கள். டைட்டிலில் இயக்குனரின் பெயர் வரும் இடத்தில் யுவன் பெயரைப் போட்டு மரியாதை செய்திருக்கிறார் யுவன். பின்னணி இசையில் அதற்கு பதில் மரியாதை செய்த யுவன் பாடல்களில் பெரிதாகத் தெரியவில்லை. சரவணன் ஒளிப்பதிவிலுள்ள நிறமே திகிலை ஏற்படுத்த நன்கு பயன்பட்டிருக்கிறது. ரூபன் படத்தொகுப்பில் திகில் காட்சிகள் முடிந்த பின்னும் சற்று நீளும் யுக்தியை பயன்படுத்தியிருக்கிறார். அது நன்றாக இருந்தாலும், இரண்டாம் பாதியின் நீளத்தை இன்னும் குறைத்திருக்கலாம்.
வழக்கமான பேய்க்கதையை வழக்கம் போலவே எடுத்ததோடு விட்டிருக்கலாம். என்றாலும் ஒரு முறை பார்க்கலாம்.
Monday, January 15, 2018
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment