Monday, January 15, 2018

கம்பீரமாக காட்டில் கத்திக்கொண்டு, மன்னிக்கவும் சுத்திக்கொண்டு இருந்த சிங்கம், காக்கிச் சட்டையையெல்லாம் கழட்டிவைத்துவிட்டு ரிலாக்ஸாக நம்முள் ஒருவராக ஒரு படம் செய்திருக்கிறது. பளிச்சென்றிருக்கும்  சினேகமான சூர்யாவோடு 'தானா சேர்ந்த கூட்ட'த்தைக் கூட்டி வந்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

1987  காலகட்டத்தில் வேலையில்லாத் திண்டாட்டம்  உச்சத்தில் இருந்த பொழுது நடக்கிறது கதை. தகுதியிருந்தும் லஞ்சம், உயரதிகாரிகளின் உயர்வு மனப்பான்மை போன்ற காரணங்களால் தான் விரும்பிய, அதற்கெனவே  உழைத்து தகுதிகளை வளர்த்துக்கொண்ட வேலையான சிபிஐ வேலையில் சேர முடியாத இளைஞர்  சூர்யா. சிபிஐ அதிகாரிகள் பதவியில் இருந்து செய்யும் ரெய்டுகளை, தானே அமைத்துக்கொண்ட டீமோடு செய்து, அங்கிருந்து எடுக்கும் பணத்தை, லஞ்சத்தையும் அதனால் ஏற்படும் வேலைவாய்ப்பின்மையையும் போக்க தன்னளவில் செயல்படுகிறார். உண்மையான சிபிஐக்கு தெரிந்ததா, சூர்யாவுடன் சேர்ந்த கூட்டத்துக்கு என்ன ஆனது என்பதுதான் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்தியில் வெற்றிபெற்ற  'ஸ்பெஷல் 26' மூலக் கதையை காமெடி, உணர்வுகள், சிறப்பாக எடுபடும் சூழ்நிலை பன்ச் என்று தனது பாணியில் கொடுத்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

நமக்கு மிகவும் பழக்கப்பட்ட ராபின்-ஹூட் கதைதான், அதற்கு வசதியாக எண்பதுகளின் இறுதி காலகட்டம், நன்கு அறிமுகமான நட்சத்திர கூட்டம், ஒவ்வொருவருக்கும் ஏற்ற பாத்திரங்கள் வசனங்கள் என ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர்.  வளர விடாமல் தடுக்கும் உயர்தட்டு வில்லனை அசால்ட்டாக பேச்சிலேயே குத்துவது, பரபரவென செயல்படுவது, சொடக்கு மேல சொடக்குப் போட்டு ஆடுவது என எனர்ஜெடிக் சூர்யா. உடன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், நடன இயக்குனர் சிவசங்கர், சத்யன் என ஒவ்வொருவருமே நல்ல தேர்வு. கலையரசன், இயலாமையை நன்றாக வெளிப்படுத்தி அழுத்தத்தை தந்திருக்கிறார். ஆனந்தராஜ், ஆர்ஜே.பாலாஜி கொஞ்ச நேரம் வந்து சிரிக்கவும் ரசிக்கவும் வைத்திருக்கிறார்கள். நாயகி கீர்த்தி சுரேஷ், முதல் பாதியில் அழகாக வந்து செல்கிறார், இரண்டாம் பாதியில் அளவாக வந்துவிட்டு சென்றுவிடுகிறார். நடிகர்களில் சர்ப்ரைஸ் கார்த்திக்கும், சுரேஷ் மேனனும். அந்தக் கால அதிகாரிகளாக அப்போதைய பாணி உடைகளில் தோரணையாக இருக்கிறார்கள். ஆனால், சுரேஷ் மேனன் பேசத்தொடங்கியதும், அவர் மறைந்து கௌதம் மேனன் தான் தெரிகிறார். பிரபலமான ஒருவரின் குரலைப் பயன்படுத்தியிருப்பதன் பின்விளைவு இது. கொஞ்சம் யோசித்திருக்கலாம். கீர்த்தி சுரேஷ் பாத்திரம், ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட அந்த குழு என சில விஷயங்கள் பாதியிலேயே விடப்பட்டிருக்கிறது. சூர்யா அண்ட் கோ., வை நிஜ சிபிஐ கார்த்திக்கும் சுரேஷ் மேனனும் பிடித்துவிடுவார்களோ என்ற பதற்றம் பார்வையாளர்களுக்கு கடத்தப்படாமல் மிஸ்ஸிங். அது மிகப்பெரிய குறையே...

'எங்க புள்ள ஒன்னை கொன்னுட்டாங்க' என்று அனிதாவை நினைவுபடுத்துவதும், 'நம்ம அடையாளத்தை மறைக்க நினைச்சா விட்டுட முடியுமா?' என்று கேட்பதும், 'எனக்கு ஊழலே சுத்தமா பிடிக்காது' என்று சொல்லும் பெண், உடனேயே 'என் பெயர் சசிகலா' என்று சொல்வதுமாக படம் முழுவதுமே தைரியமாகவும் கிடைத்த சிறு சிறு இடங்களிலும் கூட ஒரு ரசிக்கத்தக்க விஷயங்களையும் நகைச்சுவையையும் சேர்த்து  வைத்து விளையாடியிருக்கிறார் விக்னேஷ். அனிருத்தின் இசை முழு ஆற்றலோடு ஆட வைக்கிறது. சுரேஷ் மேனனுக்கு வரும் பின்னணி இசை ஒரு உதாரணம். தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு வண்ணமயம், ஆனால் சில இடங்களில் அதீத வெளிச்சம். ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு அளவாக, சரசரவென செல்லும்படியாக்கியிருக்கிறது. 

தானா சேர்ந்த கூட்டம் லாஜிக்கெல்லாம் பார்க்காமல்  ஜாலியாக ஜெயித்திருக்கிறது!

0 comments :

Post a Comment

 
Toggle Footer