Tuesday, January 2, 2018

2017 ஆம் ஆண்டு தமிழர்களின் வாழ்வில்  சமூகவலைதளங்களின்  பங்கு சற்று அதிகமாகவே இருந்தது என்று சொல்லலாம். பிக் பாஸ் முதல் சின் சான் வரை கடந்த  ஆண்டில் ட்ரெண்டிங்கான சம்பவங்களை சற்று ஒரு முறை ரீவைண்ட் செய்து பார்ப்போம் .

பிக் பாஸ்

சீரியல் மட்டும் பார்த்துக்கொண்டிருந்த தாய்மார்களை விஜய் டிவி  "பிக் பாஸ்" ஒளிபரப்பி அதில் கமலை தொகுப்பாளராக வைத்து  அனைவரையும் 100 நாள் அதனுள் ஈர்த்துக்  கொண்டது. ஜூலி  இன்னைக்கு என்ன கோள் பேசுகிறார், சிநேகன் இன்னைக்கு யாருக்கு கட்டிபுடி வைத்தியம் செய்கிறார், ஆரவ் ஓவியாவுக்கு மருத்துவ முத்தம்  கொடுத்தாரா  இல்லையா, கமல் இன்னைக்கு யாருக்கு குறும்படம் போடப்போறாரு...  என்று சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லாரையும் நினைக்க வைத்து  அந்த பிக் பாஸ் வீட்ல நாமளும் இருக்கிறோம் என்னும் அளவுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மிய பசங்க ஆரம்பிச்சா ஆரவ் ஆர்மினு பொண்ணுங்க ஆரம்பிச்சு சமூக வலைத்தளத்தை மீம்ஸ் போட்டு அதிரவிட்டாங்க. பா.ம.க இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ், 'ஓவியாவுக்குப்  போட்ட ஒன்றரை கோடி ஓட்டை சென்ற தேர்தலில் எனக்குப்  போட்டிருந்தால் தமிழ்நாட்டை நான் காப்பாற்றியிருப்பேன்' என்று குமுறும் அளவுக்கு இருந்தது அதன் ரீச்.

நானும் மாடல்  தான்

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில்  சினேகா மட்டும் வந்துகொண்டிருந்தார். சினேகா திருமணத்திற்குப்  பிறகு  அவரைத் தொடர்ந்து தமன்னா, ஹன்சிகா என்று சினேகா இடத்தை நிரப்ப வந்தனர். அடுத்து எந்த ஹீரோயின் என்று எதிர்பார்த்த  நிலையில் இந்த முறை 'நோ ஹீரோயின் ஒன்லி ஹீரோ' என்று சொல்லி களத்தில் இறங்கினார் ஒரு புது முக நாயகன். முதல் விளம்பரம் ஒளிபரப்பான  முதல்  இரண்டு நாட்களில் சமூகவலைதளங்களில் 'இவர் யார்' என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தோன்ற இணையவாசிகளே கடைசியில் கண்டுபிடித்தனர் . இவர் வேறு யாருமில்லை சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளர் எஸ் .எஸ்.சரவணன் என்று பதில் கிடைத்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு தனது நிறுவனத்திற்கு தானே விளம்பர தூதராக மாறினார் இந்த விளம்பரத்துடன் முடித்துக்கொள்வார் என்று பார்த்தால், அடுத்து வந்த விளம்பரத்தில் ராஜு சுந்தரம் மாஸ்டருடன் ஆடி தனது நடன திறமையை வெளிப்படுத்தினார்.  அடுத்து இந்த ஆண்டின் நியூ இயர் விளம்பரத்திற்கு ஹன்சிகாவுடன் இணைந்து ரொமான்டிக் சீனில்  நடித்து கடையின் வியாபாரத்தையும் தனது நடிப்பு திறமையும் வளர்த்து வருகிறார். ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டதைப் போல இவரும் எந்த நேரமும் சினிமாவுக்குள் வரலாம்.

ஜிமிக்கி கம்மல்

எப்பொழுதும் கேரள பெண்கள் என்றாலே கொஞ்சம் ஸ்பெஷல்  அழகு தான். அதற்கு உதாரணம் நயன்தாரா, கோபிகா, கீர்த்தி சுரேஷ் என்று லிஸ்ட் போய்க்கொண்டேயிருக்கும். இவர்கள் எல்லாம் சினிமாவில்  நடித்து தமிழக இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தனர். ஆனால் ஒரு கல்லூரி விழாவில் ஆடிய பாடலினால் பிரபலம் ஆக முடியுமா என்று கேட்டால்  முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஷெரில் என்ற கல்லூரி ஆசிரியை. ஓணம் பண்டிகையின் போது மோகன் லால் படத்தில் இடம்பெற்ற பாடலான 'ஜிமிக்கி கம்மல்" பாடலுக்கு ஷெரில் மற்றும் ஆசிரியைகள் மாணவிகள் இணைந்து  ஆடி அதனை யூடியூபில் வெளியிட, பாடலும் ஹிட்டாகி  ஷெரிலும் தமிழ்நாட்டு இளைஞர்களின் மனதில் கனவுக்  கன்னியாகவே மாறினார் . 'பிரேமம்' பட மலர் டீச்சர் கேரளாவிற்கு எப்படியோ தமிழகத்திற்கு ஷெரில் டீச்சர்னு கடந்த  வருடம் கலக்கினார்.

கமல் ட்வீட்ஸ்

ஜெயலலிதா இறந்த பின் தமிழக முதல்வர் யார் என்ற குழப்பத்தில் மக்கள் இருக்க, இங்கு நடக்கும் புரியாத ஆட்சியைப்  பற்றி மக்களின் மனசாட்சியாக ட்விட்டரில் நடிகர் கமல்ஹாசன்  தூய தமிழில் ட்வீட்களை போட்டு வந்தார். அந்த ட்வீட்களை புரிந்துகொள்ள  கோனார் தமிழ் உரை தேடினர் தமிழ் மக்கள். கமலின் கருத்துகள் சுப்பிரமணியன் சுவாமி,ஜெயக்குமார், எச்.ராஜா என அனைவரையும் கடுப்பேற்றியது. அவர்களும் கமல் ட்விட்டர் அரசியல் தான் செய்வார் என்றெல்லாம் கூறினர். தன் பதிவுகள் மூலம் அனைவரையும்  வறுத்தெடுத்துவிட்டார் கமல். கேரள முதல்வர், டெல்லி முதல்வர், மேற்கு வங்க முதல்வர் என மூன்று மாநில முதல்வர்களை சந்தித்தார்.  அரசியல்  ஆலோசனை பெற்றதாகக் கூறப்பட்டது. தூய தமிழில் இவர் போட்ட ட்வீட்கள் ட்ரெண்டாகின.

ப்ளூ சட்டை விமர்சனம்

ஒவ்வொரு படம் வரும்போதும்  தனது பாணியில், மதுரை வட்டார வழக்கில், அசால்டாக நின்று கொண்டு 'ப்ளூ சட்டை' என்று அழைக்கப்படும்  மாறன்  செய்யும்  யூ-ட்யூப் விமர்சனங்கள் பிரபலம்.  இந்தாண்டு வெளிவந்த நடிகர்  அஜித்தின் 57வது திரைப்படமான விவேகத்தை குறித்து விமர்சனம் செய்தார். படத்தைத் தாண்டி  தனிப்பட்ட முறையில் தாக்குவதைப்  போல அமைந்த விமர்சனத்தால், அஜித்தின் ரசிகர்களிடமும் திரைத்துறையினரிடமும் மிகப்பெரிய எதிர்ப்பைப்  பெற்றார். ஆனால் தனது விமர்சனங்கள் வழக்கமாகப் பெறும் பார்வையாளர்களை விட பத்து மடங்கு அதிகமான பார்வையாளர்களைப் பெற்றது விவேகம் விமர்சனம்.  இதையே யுக்தியாகப் பயன்படுத்தி மெர்சல் படத்தின் போதும் இதே போலப் பேசி தன் வீடியோவை ட்ரெண்டாக்கினார். படத்தைக் காசு போட்டு எடுத்த  தயாரிப்பாளர்கள் வசூல் எடுக்கிறார்களோ இல்லையோ, ஒரு டிக்கெட்டை எடுத்துப் படம் பார்க்கும் இவர் அமோகமான வசூலை எடுக்கிறார். இதில் மிகப்பெரிய முரண், இவரை விமர்சிக்கும் திரையுலகமே  இவரது வீடியோவுக்கு முன்னும் பின்னும் புதிய படங்களுக்கு  விளம்பரம் கொடுப்பதுதான்.
 
சின் சான்

ஜாக்கி சான் கேள்விப்பட்டிருப்போம், இது யாரு சின் சான் என்று கேட்டால், தமிழகக் குழந்தைகளும் பெரியவர்களும் கூட, பதில் அளிப்பார்கள். சின் சானின் சேட்டைக்கும், அவன் கொடுக்கும் கௌன்ட்டர்களுக்கு அனைவரும் ரசிகர்கள். "அமைதி அமைதி..  அமைதியோ அமைதி, அமைதிக்கெல்லாம் அமைதி " என்று சின் சான் செய்த அதகளம் அவ்வளவு ட்ரெண்டானது தமிழ் இணைய உலகத்தில்.

இவை அனைத்தும்  நகைச்சுவையாக  ட்ரெண்டானது. ஆனால் இணையத்தில் நிகழ்ந்த  ஒரு சில ட்ரெண்டுகள்  நாம் மகிழும் வகையில் இல்லை. 'ப்ளூ வேல் விளையாட்டினால் நிகழ்ந்த மரணங்கள், உடுமலை சங்கர் கொலை வழக்கில் தீர்ப்பு வந்தபொழுது, கௌசல்யாவை நோக்கிப் பாய்ந்த நாகரீகமற்ற வார்த்தைகள்  என எதிர்மறைகளும்  2017 ஆம் ஆண்டு ட்ரெண்டானது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer