Tuesday, December 19, 2017

பின்னணியில் 'என்னோட ராசி நல்ல ராசி', 'அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ', 'காட்டுக்குயிலு மனசுக்குள்ளே' என்று வரிசைப்படி ரஜினி, கமல், மம்முட்டி பாடல்கள் பேண்டு வாத்தியத்தில் ஒலிக்க, பின்னே ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களில் 'அமர்க்களம்' அஜித், 'குஷி' விஜய் இருக்க தன் முதல் நேரடி தமிழ் படத்தில் ஆடுகிறார் நிவின் பாலி. 'பிரேமம்' ஈர்ப்பு தொடருமா? இயக்குனர் கெளதம் ராமச்சந்திரன் உலக சினிமா ரசிகர் என்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. கன்னட வெற்றிப் படமான 'ஒலிதவரு கண்டிண்டே'வை  'நான்-லீனியர்', 'நியோ-நாய்ர்', 'ராஷமோன் விளைவு' எல்லாம் பயன்படுத்தி மறுஉருவாக்கம் செய்திருக்கிறார்.

ஒரு  இளம் பெண் பத்திரிகையாளர்  (ஷ்ரதா ஸ்ரீநாத்), தூத்துக்குடி மணப்பாடு கிராமத்தில் ஒரு கிறிஸ்துமஸ் நாளில் நடக்கும் கொலையின் பின்னணி கதையை எழுதுவதற்காக  விசாரிக்க ஆரம்பிக்கிறார். அப்பொழுது  ரிச்சியை (நிவின்) பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்கிறார்கள். ஊரில் பெரியவரும் பல படகுகளை வைத்து வாடகைக்கு விடுபவரும் கடலில் எது யாருக்கு கிடைத்தாலும், தனக்கு அதில் பாதி என்ற நடைமுறையை வைத்திருப்பவருமான ஐசக் அண்ணாச்சியிடம் (நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி) அடியாளாக இருக்கிறார் ரிச்சி.  சிறு வயதிலேயே சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு சென்று அதிலிருந்தே அதிரடியாக வளர்ந்து இந்த நிலையில் இருக்கும் அவரது கதையில் மதுரையிலிருந்து தூத்துக்குடி வந்து பிழைக்கும் செல்வம் (நடராஜ்), ரிச்சியின் பள்ளி நண்பன் ரகு (ராஜ் பரத்), ரிச்சியின் தந்தை பாதிரியார் சகாயம் (பிரகாஷ் ராஜ்), ஊர்க்காரர் காகா பீட்டர் (குமரவேல்), நண்பன் முருகேஷ் (ஆடுகளம் முருகதாஸ்) உள்பட பலரின் பங்கு என்ன, பார்வை என்ன என்பது தான் படம்.

கதை சொல்லும் விதத்தில் புதுமை செய்ய நினைத்தது நல்ல விஷயம். ஆனால், அந்த முயற்சியே எந்த கதாபாத்திரத்தையும் மனதில் ஒட்ட விடாமல் செய்துவிட்டது. ஒரு காட்சியில் "இன்னோர் வாய்ப்புதான் தந்தால் நானுமே வாழ்வேன் நல்ல மகனாய்" என்று வேல்முருகனின் வரிகளும் அஜனீஷ் லோக்நாத்தின் இசையும் நம்மை உருக்க, காட்சி வடிவத்தில் அந்த கதாபாத்திரத்தின் சோகம் நம்மை சற்றும் பாதிக்கவில்லை. காரணம், அந்த பாத்திரத்தின் பின்னணி, நிகழ்காலம் எதுவுமே அழுத்தமில்லாமல் இருந்தது. இதே நிலைதான் நிவினுக்கும். முதல் பாதியில் அவ்வளவு பில்ட்-அப் செய்யப்படும் நிவின் சற்று நேரமே வருகிறார். நிவினின் தமிழ் உச்சரிப்பு, பாத்திரமாகவும் அவர் பேசும் வசனங்கள், தூத்துக்குடியில் இல்லாத கலாச்சார நடப்புகள் என படத்திலிருந்து நம்மை அன்னியபடுத்தும் விஷயங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

நிவினின் தோற்றம், அலட்சியமான நடவடிக்கைகள் எல்லாம் நம்மை கவர்கின்றன, அவர் வசனம் பேசும் வரை. அவரது  மலையாளத் தமிழ்  நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் வெளியே இருக்கிறது. படத்தில் இருப்பவர்களில் நம் மனதுக்கு நெருக்கமாக இருப்பது நட்டி. தோற்றம், உடல்மொழி என எளிதாக பாத்திரத்துடன் ஒன்றியிருக்கிறார், நம்பும்படி இருக்கிறார். குமரவேலும், குறும்பட புகழ் லக்ஷ்மியும், ஆடுகளம் முருகதாஸும் தேவையான நடிப்பை தந்திருக்கிறார்கள். இத்தனை கதாபாத்திரங்களும் அவசரமாக வந்து போவது போன்ற உணர்வு தான் படத்தை பாதிக்கிறது. அஜனீஷ் லோக்நாத்தின் இசையும் பாண்டிகுமாரின் ஒளிப்பதிவும் படத்திற்கு தரமான நிறத்தை கொடுத்திருக்கின்றன. ஒளிப்பதிவில் பயன்படுத்தப்பட்டிருக்கும்  சிவப்பு, பின்னணி காட்சிகளை தீவிரமாக்கியிருக்கிறது. "துரோகம் எப்பவுமே எதிரிகிட்ட இருந்து வருவதில்லை", "அவ்வளவு சீக்கிரம் கிடைச்சுருமா அமைதி", ஆதரவற்ற சிறுவனின் பெயர் 'டெமாக்ரசி' (Democracy - ஜனநாயகம்) என வைத்தது இப்படி சிறப்பாகவும், "நீ தான்டா  என் மோட்டிவேஷனே" என்று இடத்துக்கும் ஆளுக்கும் சம்மந்தமில்லாமலும் என இரண்டு எல்லைகளிலும் இருக்கின்றன ராஜ்மோகனின் வசனங்கள்.

இயக்குனர், நிவின் பாலிக்கு இருக்கும் ஈர்ப்பை நன்றாக பயன்படுத்தியிருக்கலாம், அல்லது நிவின் பாலி தமிழுக்கு வர இன்னும் சிறப்பான படத்தை  தேர்ந்தெடுத்திருக்கலாம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer