Friday, December 29, 2017

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் வழங்கப் போகும் ஆணை ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ என்ற அரசியல் இலக்கை வெற்றி பெறவைக்கும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வுக்கு, குறித்த தேர்தல் கூட்டணியில் அங்கம் வகிக்காத போதிலும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் என்கிற அடிப்படையில் டக்ளஸ் தேவானந்தா அழைக்கப்பட்டிருந்தார். அந்த நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டமையை ஒரு நல்லெண்ண சமிக்ஞையாகும். நாம் எதிர்வரும் தேர்தலில் தனித்துவமாக எமது வீணைச் சின்னத்திலேயே போட்டியிடுகின்றோம்.

இந்த நிலையிலும் தமது நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தமையானது ´மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி" என்ற எமது அரசியல் இலக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புரிந்து கொண்டதன் வெளிப்பாடேயாகும்.

மத்தியில் யார்? ஆட்சியில் இருக்கின்றார்களோ அவர்களுடனேயே எமது பிரச்சனைகளுக்கான தீர்வுகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தவேண்டும். தமிழ் மக்கள் தரப்பில் இருந்து யார் மக்களின் ஆணையைப் பெறுகின்றார்களோ, அவர்களே எமது மக்களுக்காக ஆட்சியாளர்களை உரிய முறையில் கையாள வேண்டும்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer