Tuesday, December 19, 2017

ஒரு அவசரத்திற்காக ஒரு லட்ச ரூபாய் பண உதவி கேட்ட பெண்ணை தவறாக பயன்படுத்திக்கொண்ட முதலாளி அவர். இன்னொரு தருணத்தில் அதே முதலாளி  அழுதுகொண்டே  சொல்லும் ஊர் பேர் தெரியாத பணியார கிழவி செத்த கதையை கேட்டு அவளே  அழுகிறாள். ஒரு பெண்ணின் தேவையை பயன்படுத்தும்  சபலம்  இருக்கும் அதே மனிதனிடம் ஊர் பேர் தெரியாத கிழவிக்கான கண்ணீரும் இருக்கிறது. இது தான் 'அருவி' பேசும் அன்பு.  ஒரு நடுத்தர குடும்பத்து பெண்ணுக்கு நிகழும் அசாதாரண சூழ்நிலையால், அவள் வாழ்க்கை தடம் மாறி எப்படியெல்லாம் பயணிக்கிறது, அதை அவள் எப்படி எதிர்கொள்கிறாள் என்பதே அருவி படத்தின் கதை. வெகுஜன சினிமாவிலிருந்து மாறுபட்டும், மாற்று சினிமாவுக்கு உரித்தான மெதுவாக கதை சொல்லும் பாணியில் இருந்து சற்றே வேறுபட்டும்  அனைத்து  உணர்ச்சிகளையும் உள்ளடக்கி, வாழ்வை குறித்த நம்பிக்கைகளையும் கற்பிதங்களையும்  கலகலப்பாகவும் உணர்ச்சி பொங்கவும் ஆய்வு செய்திருக்கிறாள், இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமனின் 'அருவி'.

'அருவி'யாக வரும் அதிதி பாலன் ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்க்கை மாற மாற தோற்றத்திலும்  உணர்ச்சிகளிலும்  பிரமிக்க வைக்கிறார். 'எப்படியாவது பணம் சம்பாரிச்சா போதும், மரியாதை கிடைக்கும்,  எதுக்கு இந்த குப்பை வாழ்க்கை' என்று நம் மீதெல்லாம் காறி உமிழ்கிறார்;   'அப்பா நா தப்பு பண்ணல பா, உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் பா' என்று நம்மையெல்லாம் கரைய வைக்கிறார். தமிழ் திரையுலகிற்கு அதிதி  ஒரு அற்புத வரவு. அருவி பாத்திரத்திலிருந்து உடனிருக்கும் திருநங்கை எமிலி, உதவி இயக்குனர் பீட்டர், நிகழ்ச்சி இயக்குனர்,  'சொல்வதெல்லாம் சத்தியம்' நிகழ்ச்சி நடத்தும் லக்ஷ்மி கோபால்ஸ்வாமி என அனைத்து நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்.  இம்மாதிரியான கதையை விறுவிறுப்பாக எடுப்பது என்ற சவாலை, தொலைக்காட்சி செட்டுக்குள் நடக்கும் கலாட்டாக்களின் நகைச்சுவையால்  மிக நேர்த்தியாக சமாளித்திருக்கிறார் அருண் பிரபு. முதல் பாதியில் அருவியின் வாழ்க்கையை  மான்டேஜ் ஆக தொடுத்து, அவ்வப்போது மட்டும்  வசன காட்சிகளை வைத்த  கதை சொல்லல் முறை நமக்கு மிகப்  புதிது. அதனால் படத்துக்குள் செல்ல சற்று தாமதம் ஆவது உண்மை. அந்த தாமதத்துக்கு பிறகு இறுதி வரை அருவி நம்முள் பாய்கிறாள்.

படத்தின் ஒரு புள்ளியில் சிறியதாக காட்டப்படும் ஒரு  விஷயம் இன்னொரு புள்ளியில் சரியாக இணைக்கப்பட்டு   எழுதப்பட்டிருக்கும் திரைக்கதை யுக்தி மிக சிறப்பு. ஷெல்லி காலிஸ்டின் ஒளிப்பதிவு சம்பவங்களை நேரில் பார்க்கும் அனுபவத்தை தருகிறது.  செயற்கை ஒளியை பெரிதாக பயன்படுத்தாமல், சினிமாவுக்கான ஏற்பாடுகள் அதிகம் இல்லாமல் மிக இயல்பாக படமாக்கியிருக்கிறார். இயற்கையை காட்டும்பொழுது மட்டும் தன் பிடிவாதத்தை தளர்த்தியிருக்கிறார். படத்தொகுப்பில்  ரேமண்டின் உழைப்பு அசர வைக்கிறது. அருவியின் மழலை பருவத்திலிருந்து நிகழ் காலம் வரை வரும் காட்சிகளை அடுக்கடுக்காக இத்தனை கூர்மையாக அழகாக அடுக்கியிருக்கிறார். ஒவ்வொருவரும் அருவியுடனான தங்கள் வாழ்வை கூறுவது ஒரு 'ஸ்லாம் புக்'கை திருப்புவது போன்ற உணர்வு, மகிழ்ச்சியும் துக்கமுமாக. ஒரு திரைப்படம் மழை போன்றதென்றால், இசை இடியாகவும் இருக்கலாம், மின்னலாகவும் இருக்கலாம், இல்லை இந்தப் படத்தில் இருப்பது போல, படத்தை தொல்லை செய்யாமல் வலுப்பெறச் செய்யும்  மென் காற்றாகவும் இருக்கலாம். பிந்துமாலினி மற்றும் வேதாந்த் பரத்வாஜின் இசை படத்திற்கு பெரிய பலம்.

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி எத்தனை குண்டுகளை கொண்டிருக்கும் என்னும் கேள்வியும், அதை பயன்படுத்தி அத்தனை பேரையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதையும், படத்தை உள்வாங்க நேரும் தாமதமும் இறுதியில் மறந்து போகின்றன.  'அருவி'யிலிருந்து  'ரோல்ல்ல்லிங் சார்ர்ர்' சொன்னவர் வரை மறக்க முடியாத பாத்திரங்களை படைத்து, படம் பார்த்த ஒவ்வொருவரையும், படம்  முடியும் பொழுது பேரன்பை உணர வைத்த இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமனுக்கும், இத்தகைய கதை, திரையில் எப்படி வருமென உணர்ந்து, அதன் வணிக சவால்களை கடந்து அதை தயாரித்த தயாரிப்பாளர் S.R.பிரபுவுக்கும் நம் அன்பான  பூங்கொத்துகள்.             

அருவி - அழகான  அனுபவம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer