Saturday, December 9, 2017

ஒரு தாய், தன் உலகம் என்று கருதிய குழந்தையை கடத்தல்காரர்களிடம் பறி கொடுத்து, அதை மீட்க நடத்தும் போராட்டமே சத்யா. வெளிநாட்டில் வேலை பார்த்து அங்கேயே செட்டில் ஆகிவிட்ட சத்யாவுக்கு (சிபிராஜ்) சில வருடங்களுக்கு முன் தான் உயிருக்கு உயிராக காதலித்த பெண்ணான  ஸ்வேதா சென்னையிலிருந்து (ரம்யா நம்பீசன்) அழைக்கிறார். தனது குழந்தை கடத்தப்பட்டுவிட்டதாகவும், போலீஸ் அதிகாரிகளோ தன் கணவரோ மற்ற எவருமோ அந்த விஷயத்தை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பதாகவும், குழந்தையை கண்டுபிடிக்க சிபியின் உதவி தேவை எனவும் கெஞ்சி கேட்கிறாள். சிபியும் தன் முன்னாள் காதலிக்காக குழந்தையை தேடும் படலத்தை தொடங்குகிறார். பல நாட்கள் தேடலுக்குப்  பிறகும் குழந்தை கிடைக்கவில்லை. மாறாக, புதுப்புது கேள்விகளும் குழப்பங்களும் மட்டுமே உருவாகிக்கொண்டிருக்க குழந்தையை தேடும் இந்த பயணம் என்னவாகிறது என்பதே சஸ்பென்ஸ் நிறைந்த சத்யா படத்தின் மீதி கதை.

எக்கச்சக்க எதிர்பாராத சம்பவங்கள் மற்றும் திருப்பங்களைக் கொண்ட,  விறுவிறுப்பாக அமைந்திருக்கக் கூடிய  ஒரு கதை இது. சஸ்பென்ஸ் தருணங்களை எல்லாம் ஒவ்வொன்றாக அதிக பில்டப் இல்லாமல் வெளிப்படுத்தியது, ஃபிளாஷ்பேக் காட்சிகளையும் குழந்தையை பற்றி விசாரிக்கும் காட்சிகளையும் முன்னும் பின்னுமாக மாற்றி  நான்-லீனியர் (non-linear)  திரைக்கதை முறையில் கதை சொன்னது என தமிழ் சினிமாவின் முக்கிய த்ரில்லர்களில் ஒன்றாக இதை கொண்டு வர முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. ஆனால் அது நடந்ததா என்று பார்த்தால்,  ஓரளவு நடந்திருக்கிறது என்று சொல்லலாம். 'மிஸ்ட்ரி திரில்லர்' (புதிர்) வகையில் குறுங்காதலை சேர்த்து சொல்லப்பட்டிருக்கும் திரைக்கதையில்  முதல் பாதி முழுக்க சில இடங்களை தவிர்த்து மற்ற எங்குமே அதிகம் தொய்வில்லாமல் செல்கிறது. படத்தின் கதாபாத்திரங்களுக்கு ஏற்படும் பதற்றத்தை நமக்குள்ளும் கடத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பாதியில் புதிர்கள் விடுவிக்கப்படும் பொழுது, அவை பெரும்பாலும் நாம் கணித்துவிடக் கூடியதாக இருப்பது தான் பாதிப்பு.

ஐடி பையன், சற்றே சீரியஸ் ஆன NRI என்கிற இரண்டு காலகட்டத்தைக் காட்டும் பாத்திரங்களில்  சிபிராஜ். சிபிராஜின் கதை தேர்வில் காட்டும் அக்கறை ஆச்சரியமளிக்கிறது. அந்த தேர்வு படமாகவும் வெற்றி பெற தொடங்கியிருக்கிறது என்றே சொல்லலாம்.  ஆர்ப்பாட்டமில்லாமல் நடிப்பது  நன்றாக இருந்தாலும், உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டியிருந்த பல காட்சிகளில் தேவையான நடிப்பை சிபிராஜ் வெளிப்படுத்திதானே ஆக வேண்டும்? ரம்யா நம்பீசன் சில இடங்களில் சற்றே அதிகமாகத் தோன்றினாலும், பதைபதைப்பை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். வரலட்சுமி சரத்குமார் ஒரு சர்ப்ரைஸ் தான். மிக இயல்பான நடிப்பில் பட்டையைக் கிளப்பியவர் காவல் அதிகாரியாக வரும் நடிகர் ஆனந்தராஜ். அவர் வரும் எல்லா காட்சிகளிலுமே கைத்தட்டலுக்கு பஞ்சமில்லை.படத்தின் பலம் பின்னணி இசை. இசையமைப்பாளர் சைமன் கே  கிங்குடைய அட்டகாசமான பின்னணி இசை மூலம் காட்சிக்கு காட்சி பதற்றம் கூடுகிறது. 'யவ்வனா' பாடல் மட்டும் கேட்கும் ரகம். அளவான பட்ஜெட்டில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் தரத்தை உயர்த்திடும் வகையில் பலம் சேர்த்திருப்பது அருண்மணி பழனியின் ஒளிப்பதிவும், கௌதம் ரவிச்சந்திரனின் படத்தொகுப்பும்.

புதிர்களை இன்னும் பலமாக்கியிருந்தால் பெரிதாக வென்றிருப்பான்  சத்யா!

0 comments :

Post a Comment

 
Toggle Footer