Wednesday, December 27, 2017

கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களிடையே நுகர்வு கலாச்சாரம், நாம் சந்தையாக்கப்பட்டிருக்கும் விதம், காலம் காலமாக நமக்கு சொல்லப்பட்ட சில  பொய்கள், ஆரோக்கியம்-உணவு போன்றவை பற்றி இருந்த தவறான கற்பிதங்கள் ஆகியவை குறித்து   ஒரு விழிப்புணர்வு   ஏற்பட்டிருக்கிறது  அல்லது ஏற்பட்டது போலிருக்கிறது. (ஆம், ரிஃபைண்ட் எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு அதே நிறுவனம் தயாரிக்கும் செக்கு நல்லெண்ணெய் வாங்கத் தொடங்கியிருக்கிறோம்)  அந்த உணர்வை இன்னும் கொஞ்சம் தூண்டி, இன்னும் சில தகவல்கள் அளித்து ஒரு தீர்வளிக்கும்  சமூக அக்கறையுடன் வந்திருக்கிறான்  வேலைக்காரன்.       

'தனி ஒருவன்', தரமான வெகுஜன சினிமாக்களுக்கு ஒரு பெஞ்ச் மார்க் (மைல் கல்). அந்த வெற்றி தந்த நம்பிக்கையில், மீண்டும் ஒரு தரமான வெகுஜன பொழுதுபோக்குத்  திரைப்படத்தைத் தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் மோகன் ராஜா. 'கூலிக்கார குப்ப'மாக இருந்து  'கொலைகாரக் குப்ப'மாக மாறிய  இடத்தில்  பிறந்த அறிவு (சிவகார்த்திகேயன்), தனது குப்பத்து இளைஞர்களை  வளர விடாமல் குற்றச் செயல்களுக்கு தொடர்ந்து இழுக்கும் காசியிடமிருந்து (பிரகாஷ் ராஜ்) மீட்டு அவர்களை  நல்ல வாழ்க்கையை நோக்கித்  திருப்ப போராடுகிறான். நல்ல வேலை, வாழ்க்கை என்று அவன் நினைத்த வேலையும், உண்மையில்  அப்படியல்ல,  கார்பரேட் நிறுவனங்களும்   தங்களை தவறாகத்தான் பயன்படுத்திக்கொள்கின்றன என்பதை அறிந்து அதை மாற்ற  அவன் எடுக்கும் முயற்சிகளும் முடிவும் தான் 'வேலைக்காரன்'. நுகர்வோர்களான நம் ஒவ்வொருவரின் பையிலிருக்கும் காசையும் வாங்க,  ஒரு சூப்பர் மார்க்கெட் வடிவமைக்கப்படும் விதத்திலிருந்து ஒவ்வொரு நிறுவனமும் எப்படியெல்லாம் தந்திரமாக செயல்படுகின்றன என்றும், குப்பத்தில் பிறந்து, சூழ்நிலைகளைத் தாண்டி தன் மக்களை  முன்னேற்றத் துடிக்கும்  இளைஞனின் மனதையும் சொல்லும் முதல் பாதி சுவாரசியம். "தீவுன்னு நினைச்சு திமிங்கலம் மேல நிக்கிறோம்", "நாம விக்கிறது பொருளை இல்ல, பொய்யை" இப்படி படம் நெடுக கவனிக்க வைக்கும் வசனங்கள் இருக்கின்றன என்பது நல்லது என்றாலும், வசனங்கள் மட்டுமே இருக்கின்றன என்பது தான் பாதிப்பு. ஒரு புறம் அடியாட்களுடன் பிரகாஷ் ராஜும், அதே நேரத்தில் மறுபுறம் கார்ப்பரேட்களும் பேசிக்கொள்வதை ஒப்பிட்டு அமைக்கபட்டிருக்கும் காட்சிகளின் திரைக்கதை  யுக்தி சிறப்பு. இதே போல இரண்டாம் பாதியில் சில நல்ல ஐடியாக்கள் இருந்திருந்தால் படமே சிறப்பாக இருந்திருக்கும்.

முதல் பாதியில் ஏற்படுத்திய அடித்தளத்துக்கு மேல் இரண்டாம் பாதி சரியாக கட்டமைக்கப்படவில்லை. நேரடியாக மக்களை பாதிக்கும் பிரச்சனையை பேசிவிட்டு, அதற்கான தீர்வாக 'ஒரு சிறு குழுவை திருத்தினால் மொத்தமும் மாறிவிடும்' என்பது போல காட்டியிருப்பது உண்மைக்கு தூரமாக இருக்கிறது. 130 கோடி மக்களுக்கு பொருள் விற்கும் நிறுவனங்களின் பிரம்மாண்டம் எத்தகையது என பார்ப்பவர்களுக்கும்  தெரியும் தானே?  சிவகார்த்திகேயன் காமெடியாகப்  பேசினால் நாம் கேட்போம் தான். ஆனால், அந்த காமெடி கூட இல்லாமல் பேசிப் பேசியே பிரம்மாண்டமான கார்ப்ரேட் முதலைகளையெல்லாம் மடக்குவதென்பது, 'தேசிய கீதம் பாடுங்கள், போலீஸ் அடிக்க மாட்டார்கள்' என்று யாரோ கூறியது போலிருக்கிறது. '12 மணிக்கு அனைவர் வீட்டிலும் லைட்ட போடுங்க' என்னும் ஐடியாக்கள் அந்த அளவிலேயே இருக்கின்றன.  நாயகன் எதிர்க்கும்  நிறுவனத்தின் பெயர் 'சேஃப்ரான்' என்று வைத்திருக்கிறார்கள். எந்தக் கொடியிலிருக்கும்  'சேஃப்ரான்' என்று தெரியவில்லை. கன்ஸ்யூமரிசத்தில் துவங்கி கம்யூனிசத்தில் முடிக்கும் வழியில் ஆங்காங்கே அரசியலை தொட்டிருக்கிறார், ஆழமில்லை.

சிவகார்த்திகேயனுக்கு, ஒரு நடிகராக இது நல்ல முயற்சி. தன் இயல்பாக இருந்த காமெடியை சற்று குறைத்து, அடுத்த கட்டத்திற்கு செல்ல முயன்றிருக்கிறார். அவர் சிறப்பாக செய்திருந்தாலும் நமக்கு சற்று குறையாக இருக்கிறது. ஃபகத் ஃபாசில், மலையாள பாணியில், நடிப்பு என்றால் எப்படியிருக்க வேண்டுமென்று கூரிய பார்வையாலும், அதிராத உடல்மொழியாலும் காட்டியிருக்கிறார். நயன்தாரா...இருக்கிறார். அவரில் தொடங்கி, பிரகாஷ் ராஜ், சார்லி, ரோகிணி, ஸ்னேகா  ரோபோ ஷங்கர், விஜய் வசந்த், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், மன்சூர் அலிகான், ராம்தாஸ், காளி வெங்கட், அருள் தாஸ், தம்பி ராமையா, மைம் கோபி இன்னும் பலர்  என இத்தனை தெரிந்த நடிகர்கள் இருக்கிறார்கள், ஆனால் ஒருவரது பாத்திரமும் மனதில் நிற்கவில்லை.  மனித  (நடிப்பு) வள விரயம் என்றே கூறலாம். அனிருத் இசையில் 'கருத்தவன்லாம் கலீஜா' என்று  ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்து பின், தனது வழக்கத்தை விட சற்று அடக்கியே வாசித்திருக்கிறது. ராம்ஜியின் ஒளிப்பதிவு உயர்தரம். 'கொலைகாரக் குப்பம்' மூலம் கலை இயக்குனர் முத்துராஜ் கவனிக்க வைக்கிறார். ரூபனின் படத்தொகுப்பு, முடிந்த அளவு முயன்றும், தவிர்க்க முடியாத நீளம் தான் படம். 'உலகத்திலேயே சிறந்த சொல் - செயல்' - இது  படத்தில் சிவகார்த்திகேயன் அடிக்கடி சொல்லும் வசனம். படத்திலும் செயல் அதிகமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

பேச எடுத்துக்கொண்டிருக்கும் பிரச்சனையால், ஓரம் தள்ள முடியாத படம் ஆகிறது 'வேலைக்காரன்'.

0 comments :

Post a Comment

 
Toggle Footer