Sunday, December 3, 2017

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட முடியாது என்று தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றும் சில பொது அமைப்புக்கள் சில இணைந்து புதிய தேர்தல் கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் கடந்த மாதம் அறிவிப்பை வெளியிட்டிருந்தன. இந்த நிலையில், இந்தக் கூட்டணிக்கு பொதுச் சின்னத்தினைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால், வீரசிங்கம் ஆனந்தசங்கரி செயலாளர் நாயகமாக இருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தின் கீழ், புதிய தேர்தல் கூட்டணி போட்டியிட வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எப்.-இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்த வேண்டுகோளை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நிராகரித்துள்ளார்.

“தமிழ்த் தேசிய அரசியலுக்கு முரணாக நடக்கும் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தலைமையிலான கட்சியோடு சேர்ந்து இயங்க முடியாது. மாறாக, ஈ.பி.ஆர்.எல்.எப்.-இன் ‘பூ’ சின்னத்தில் அல்லது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் (அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்) ‘சைக்கிள்’ சின்னத்தில் போட்டியிடலாம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer