Tuesday, December 5, 2017

அதிமுகவில் தலைவர்கள் அசிங்கப்படுறதெல்லாம் சகஜமப்பா என்று கவுண்டமணி பாணியில் சொல்கிறார்கள் சாமானிய தமிழக மக்கள். அந்த அளவுக்கு சிரிப்பாய் சிரிக்கிறது ஜெயலலிதா இல்லாத கடந்த ஓராண்டு அனுபவம்.

யோசித்துப் பார்த்தால், அதுதான் உண்மையும்கூட. எம்ஜியார் உயிரோடு இருக்கும்போது தங்களை பூஜ்யம் என்றும் எம்ஜியார்தான் நம்பர் ஒன் என்றும் அப்போதைய இரண்டாம் நிலை தலைவர்கள் கூறுவது வழக்கம்.

அதைக்கூட எதிர்க்கட்சிகள், அமைச்சர்களுக்கு எதிராக திருப்பிய காலம் இருந்தது. கணிதத்தில் பூஜ்யம் இல்லாமல் எண்களுக்கு மரியாதையே இல்லை. அதுபோல அமைச்சர்கள் இல்லாவிட்டால் எம்ஜியாருக்கு மரியாதை இல்லை என்று சொல்கிறார்களோ என்று திமுகவினர் திருப்பி அடித்தார்கள்.

இருந்தாலும் தங்களை பூஜ்யம் என்றே அதிமுக அமைச்சர்களும் இரண்டாம் கட்ட தலைவர்களும் சொல்லிக் கொண்டார்கள்.

எம்ஜியார் விரும்பினால் மந்திரி, இல்லாவிட்டால் எந்திரி என்ற நிலையெல்லாம் அதிமுகவில் சகஜமாக இருந்தது. ஆனால், எம்ஜியார் இறந்ததும் அதிமுகவில் நிகழ்ந்த அடிதடி ரொம்பவே பாப்புலர் என்பது மக்களுக்கு தெரியும்.

எம்ஜியார் மரணத்தில் மர்மம் இருப்பதாக முதலில் குரல் எழுப்பியவர் ஜெயலலிதா. எம்ஜியாரின் மனைவி ஜானகி அம்மையார், எம்ஜியாருக்கு மோரில் விஷம் வைத்து கொன்றுவிட்டதாக ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார்.

எம்ஜியாரின் மனைவிகூட சொல்ல முடியாத வார்த்தையை ஜெயலலிதா கூறினார். ஆம், எம்ஜியாருடன் உடன்கட்டை ஏற நினைத்ததாக வாய்கூசாமல் பொய் பேசினார். இத்தனைக்கும் எம்ஜியாரை அடக்கம்தான் செய்தார்கள். அதற்கும் மேலாக, எம்ஜியார் உருவாக்கிய கட்சியை இரண்டாக பிளந்தார். எம்ஜியார் உருவாக்கிய ஆட்சியை கலைக்க காரணமாக இருந்தார்.

இதெல்லாம் அந்தக் காலம்.

எம்ஜியார் உருவாக்கிய கட்சியை ஒருவழியாக கைப்பற்றிய ஜெயலலிதா, தான் ஆட்சியில் இருக்கும் வரை எம்ஜியார் படத்தை தபால்தலை அளவே பிரசுரிக்க உத்தரவிட்டார் என்பது வரலாறு. ஆட்சியில் இருந்தால் எம்ஜியாரை மறப்பதும், தேர்தல் வந்தால் எம்ஜியாரை இதயதெய்வம் என்று புகழ்வதும் ஜெயலலிதாவின் வழக்கம்.

ஜெயலலிதா இருக்கும்வரை அம்மா இல்லாவிட்டால் நாங்களெல்லாம் சும்மா என்று அமைச்சர்கள் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். அவர் முன்னிலையில் யார் அதிகமாக வளைந்து கும்பிடுவது என்பதில் அமைச்சர்களுக்குள் மிகப்பெரிய போட்டி நிலவியது.

யார் அதிகமாக பணிவாக இருக்கிறார்களோ அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்த போட்டியை ஜெயலலிதாவும் மறைமுகமாக ஊக்குவித்து வந்தார்.

ஜெயலலிதா காரில் வந்தால் தரையில் அமர்ந்து கும்பிடுவதும், காரின் டயரை தொட்டு கும்பிடுவதும் வழக்கமாக இருந்தது. இதுவே ஒரு கட்டத்தில், ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வந்தால், வானத்தை நோக்கி கும்பிடும் அளவுக்கு சென்றது.

ஜெயலலிதா இருக்கும்வரை அமைச்சர்கள் தங்களுடைய துறை சார்ந்த அறிவிப்புகளைக்கூட வெளியிட அதிகாரமின்றி இருந்தாலும், ஜெயலலிதாவின் அடிமைகளாகவே தங்கள் காலத்தை சந்தோஷமாக கழித்தார்கள். அதாவது, கமிஷன் வாங்கும் ஏஜெண்டுகளாகவும், தலைமைக்குரிய பங்கை சரியாக செலுத்துகிறவர்களாகவும் இருந்தார்கள்.

ஜெயலலிதா இரண்டுமுறை சிறைக்குச் சென்றிருக்கிறார். இரண்டுமுறையும் ஓ.பன்னீரை முதல்வர் பதவியில் அமரவைத்தார் ஜெயலலிதா. இரண்டு முறையும் அவர் ஒரு பொம்மை போலவே இருந்தார். முதல்வரின் இருக்கையில் கூட அமர்ந்ததில்லை. முதல்வரின் அறையைக்கூட பயன்படுத்தியதில்லை. தனது நிதியமைச்சர் இருக்கையிலும், அறையிலுமே அவர் காலம் கழித்தார்.

ஆனால், ஜெயலலிதா மர்மமான முறையில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவருடைய நடவடிக்கைகளில் பெரிய அளவில் மாற்றம் இருந்ததை காணமுடிந்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த 75 நாட்களும் தமிழக மக்களை ஒரு மர்மக் குகையில் தள்ளுவதில் அமைச்சர்களும், அதிமுகவை ஆதரித்த கட்சிகளும், ஆளுநரும் வெற்றிபெற்றார்கள்.

ஜெயலலிதா சிகிச்சை பெறும் படம் ஒன்றை வெளியிடும்படி கேட்டதற்காக மூத்த தலைவர் கலைஞரையே கடுமையாக விமர்சித்தவர்களும் உண்டு.

மருத்துவ மனையில் சேர்க்கும்போதே ஜெயலலிதா இறந்துவிட்டார் என்ற உண்மையை ஆதாரபூர்வமாக சொன்னவர்கள் அனைவரும் மனிதாபிமானம் இல்லாதவர்களாக சித்தரிக்கப்பட்டார்கள்.

ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதாக அவசர அவசரமாக அறிவித்து, ஒரு நாள்கூட அவரை மக்கள் பார்வைக்கு வைத்திராமல் அவசர அவசரமாக எம்ஜியார் சமாதிக்குள்ளேயே அடக்கம் செய்தார்கள்.

இந்த மொத்த எபிசோடிலும் அப்போது மத்திய அமைச்சராக இருந்த வெங்கய்யா நாயுடு கூடவே இருந்தார். மத்திய அரசு அதிகாரம் மொத்தமும் ஜெயலலிதாவுக்காக பயன்படுத்தப்பட்டது.

ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக நியமிக்கப்பட்டதிலிருந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒடுக்கி அச்சுறுத்தி முடிவுக்கு கொண்டுவரும்வரை எல்லாம் சுமுகமாகத்தான் சென்றது. அப்போதே, ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவருடைய கால்கள் வெட்டப்பட்டதாகவும் அதிமுகவில் ஒரு பிரிவினரும், நடுநிலையாளர்கள் பலரும் சந்தேகம் எழுப்பினார்கள். முதல்வராக இருந்த பன்னீர் அதுகுறித்தெல்லாம் எதுவுமே கருத்துத் தெரிவிக்கவில்லை.

ஆனால், தனது முதல்வர் பதவி பறிக்கப்பட்டவுடன்தான் பன்னீரே ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறத்தொடங்கினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்றும், ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவருக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தை மட்டும் வசூலிக்கவேண்டும் என்றும் தீர்ப்பு வந்தது.

சசிகலா முதல்வராக பதவியேற்பதை தவிர்க்க ஆளுநர் மூலமாக மத்திய அரசு நடத்திய தாமத நாடகம் மக்களுக்கு அப்பட்டமாக புரிந்தது. சசிகலா சிறைக்கு சென்றால் பன்னீருக்கு ஆதரவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார்.

அதன்பிறகு நாள்தோறும் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகம்தான் தமிழ்நாட்டில் எதிரொலித்தது. ஜெயலலிதாவின் பிணத்தை தோண்டி எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என்றெல்லாம் பேசினார்கள்.

ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொள்ளை என்றார்கள். கொள்ளையில் தொடர்புடையவர்கள் மர்மமாக கொல்லப்பட்டார்கள்.

ஜெயலலிதாவின் சொத்துக்களை சோதனையிட்டார்கள். வீட்டை சோதனையிட்டார்கள். ஜெயலலிதாவின் அறை மட்டும் சோதனை இடப்படவில்லை என்றார்கள். சோதனை முழுக்க முழுக்க சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தினரின் வீடுகள் மற்றும் சொத்துக்களில்தான் நடத்தப்பட்டதாக கூறினார்கள்.

ஜெயலலிதாவைக் காப்பாற்ற சசிகலாவையும் அவருடைய குடும்பத்தினரையும் மட்டுமே பலிகடா ஆக்கினார்கள்.

ஜெயலலிதா வாழும்வரை போயஸ் கார்டனை தங்களுடைய கோவில் என்று கூறிவந்த அமைச்சர்கள், அதை சோதனையிடப்படும்போது வாயை மூடிக்கொண்டு மவுனமாக இருந்தார்கள். சோதனையை சுத்தம் செய்யும் நடவடிக்கை என்று முதல்வரே கூறினார்.

அப்படியானால் ஜெயலலிதாவின் வீட்டில் அவ்வளவு குப்பைகளா இருந்தது? என்று பொதுமக்கள் கேட்டார்கள்.

ஜெயலலிதாவுக்கு அடிமையாக இருந்தவர்கள், இப்போது பிரதமர் மோடியின் அடிமைகளாக மாறி, தங்களுடைய சொந்த நலனுக்காக அதிமுகவையே பாஜகவாக மாற்றும் நிலைக்கு போயிருக்கிறார்கள்.

ஜெயலலிதா விதைத்த வினைகள் இப்போது அவருக்கு எதிராகவே திரும்பியிருப்பதைத்தான் கடந்த ஓராண்டு நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

0 comments :

Post a Comment

 
Toggle Footer